சிரிய இராணுவம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியுள்ள தாகவும் ஆனால் அங்கு துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், ஸ்னைப்பர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அது குறித்து விளக்கு ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் அரபு லீக் தலைமையகம் அமைந்தள்ள எகிப்து தலைநகர்
கெய்ரோவில் இடம்பெற்றது. அதில் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவது சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக நபில் அல் அரபி குறிப்பிட்டார்.
“சிரியாவில் தொடர்ந்து கொலைகள் இடம்பெற்று வருகின்றன. காலையில் எழுந்ததும் சிரியாவில் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை என்பதைக் கேட்பதுதான் எமது இலக்கு. எமது குறிக்கோள் பொதுமக்களை பாதுகாப்பது. எனவே அங்கு ஒரு கொலை இடம்பெற்றால் கூட எமது பணி முழுமையடையாது” என்று அரபு லீக் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
எனினும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவ டாங்கிகள், ஆர்டிலரிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கிச் சூடுகள் மாத்திரம் இடம்பெற்று வருவதாக அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒருவாரம் தாண்டியுள்ளது. எனினும் அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியா சென்றது தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அரபு லீக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தின்படி முழுமையான யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு சிரிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப் படும் என அல் அரபி கூறினார்.
இதன்படி அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியா சென்றதைத் தொடர்ந்து 3, 484 சிறைக்கைதிகளை சிரிய அரசு விடுதலை செய்த தாக அல் அரபி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேலும் சிறைவைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்களின் விபரத்தை எதிர்த்தரப்பி னரிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் தொடரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் அரபு லீக் தீர்வுத் திட்டத்தில் சிரிய அரசு கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து 70 அரபு லீக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிரியாவின் 6 நகரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 30 கண்காணிப்பாளர்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக அல் அரபி கூறினார். எனினும் சிரிய வன்முறைகளை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் தேவை என எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே அரபு லீக் கண்காணிப்புக் குழு தலைவர் ஜெனரல் மொஹம்மட் அல் டபி இந்த வார இறுதியில் எகிப்து சென்று இது வரையான கண்காணிப்பு பணி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூடி கண்காணிப்பாளர்களை அதிகரிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதன் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment