புதுடெல்லி: நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகளை டாக்டர்கள் தேவையின்றி கொடுக்கின்றனர். அதேபோல் பரிசோதனைகளும், ஆபரேஷன்களும் செய்யப்படுகின்றன என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.எய்ம்ஸ் டாக்டர் காமேஸ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘டாக்டர்கள் தேவையின்றி நோயாளிகளுக்கு பல பரிசோதனைகளை செய்யும்படி பரிந்துரை செய்கின்றனர். அதேபோல், திறன் குறைந்த, அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அவர்களுக்கே போதிய விவரம் தெரியாமல் நோயாளிகளுக்கு பரிந்துரை
செய்கின்றனர். குறிப்பிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தரமான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் போனால், இதுபோன்ற துஷ்பிரயோகம் தொடரும். நோயாளிகள் தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் நிலவரம், மருந்து, பரிசோதனைகள் பற்றி டாக்டர்களிடம் விரிவாக கேட்டு அறிந்த பிறகே சிகிச்சையை ஏற்க வேண்டும். இது பற்றி நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் சர்வதேச மாநாடு நடத்த உள்ளது. உலகளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்’’ என்றார்.இந்த மருத்துவமனையை சேர்ந்த மூத்த நரம்பியல் டாக்டர் கூறுகையில், ‘‘பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 250 பக்கவாத நோயாளிகளை ஆய்வு செய்ததில், 48 சதவீதம் பேருக்கு ஒரே மாதிரியாக மருந்து பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இது, அங்கீகரிக்கப்பட்ட மருந்து அல்ல. டாக்டர்களே இது பற்றி தெரியாமல் கொடுக்கின்றனர். இதனால், பாதிக்கப்படுவது நோயாளிகள்தான்’’ என்றார்.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மருத்துவ ஆதார மையத்தின் முன்னாள் இயக்குனர் பால் கிளாசியஸ் கூறுகையில், ‘‘கருப்பை நீக்கம், சிசேரியன் அறுவை சிகிச்சை, ரத்த குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற அறுவை சிகிச்சைகள் தேவையின்றி அதிகளவில் நடத்தப்படுகின்றன. அதேபோல், விட்டமின், ஸ்டீராய்டு, செல் சிதவை தடுக்கும் மருந்துகள் அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில், பெரும்பாலும் நோயாளிகள் முடிவு எடுக்க அவகாசமே அளிக்கப்படுவது இல்லை. இந்த சிகிச்சையில் 50 சதவீத நோயாளிகளுக்கு போதிய நிவாரணம் கிடைத்ததாக ஆதாரமில்லை’’ என்றார்.
No comments:
Post a Comment