Jun 30, 2013

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு!

கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.

இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.

இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.

இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார்.

இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன.

அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி : Dinamani.


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...