May 24, 2012

முடி உதிர்தலுக்கு முடிவில்லையா


முடி உதிர்தலுக்கு முடிவில்லையா?

ஒருவருடைய தனித்தன்மைக்கு அடையாளமாக தெரிவது தலையிலுள்ள முடியே. ஒருவரின் அழகை கூட்டுவதும், முகத்தை எடுப்பாக காட்டுவதும் தலைமுடியே. முடி உதிர்தலும், நரையும் வழுக்கையும் வயோதிகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கட்டுமஸ்தான உடலும், உறுதியான மனமும் உடையவர்கள்கூட தலைமுடியில் தொல்லை என்றவுடன் தவிக்க ஆரம்பிக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்களுக்கே தலைமுடியின் மேல் அதிக அக்கறை உண்டு. ஆண்களே தலைமுடியை கறுப்பாக்கும் சாயங்களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீரம் மற்றும் ஆண்மையின் அடையாளமாக தலைமுடி கருதப்படுவதால் காதுவரை முடியை வளர்த்து, முறுக்கு மீசையுடன் திரிவதுண்டு. இளமையாக இருக்கும் ஒருவர்கூட, முடி உதிரத் தொடங்கியபின் அல்லது வழுக்கை விழுந்தபின் அல்லது முடி நரைத்தபின் சற்று வயதானவராக தோற்றமளிப்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. நவீன உலகில் வழுக்கையை மறைக்கும் செயற்கை ரோம கவசங்கள் வந்தாலும் இயற்கையாக ரோமம் முளைக்கும் வாய்ப்பு உண்டு என்றால் அதை விரும்பாதவர் யார்தான் உண்டு.

ரோமக்கால்களில் பூஞ்சை கிருமிகளின் தாக்குதல், தலையின் மேற்புறமுள்ள தோல்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவது, வியர்வை துவாரங்கள் மற்றும் ரோம துவாரங்கள் அடைபடுவது, வைட்டமின் பற்றாக்குறை, உப்பு மற்றும் புளிப்பு சுவையை அதிகம் உட்கொள்வது, வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட சாயங்களையும் செயற்கை நுரைக்கும் திரவங்களை தலையில் பூசுவது, அடிக்கடி ரோமத்தின் நிறங்களை செயற்கையாக மாற்றுவது, அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் கடும் சீதோஷ்ண மாற்றம் கொண்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி பிரயாணம் செய்வது, கணினியில் நீண்ட நேரம் கண் மற்றும் தலையின் ரத்தக் குழாய்கள் சூடாகும் வரை பணிபுரிவது, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பது, பிளாஸ்டிக் போன்ற ஒவ்வாத பொருட்களால் செய்யப்பட்ட தலைக்கவசம் மற்றும் இறுக்கமான தொப்பிகளை அணிவது, ரத்தசோகை, தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற ஹார்மோன் தொல்லை மற்றும் பலவித மரபணு காரணங்களாலும் தலையில் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கி வழுக்கை உண்டாகிறது.

தலைமுடி உதிரத் தொடங்கும் பொழுதே அதன்மேல் கவனம் செலுத்தி, முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தசோகை மற்றும் வைட்டமின் குறைபாட்டை சீர்செய்ய வேண்டும். முடியை நுண்ணோக்கி மற்றும் வேதி ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் வளர்ச்சித்தன்மை மற்றும் கிருமித் தாக்கலை சோதனை செய்து, அதன் அடிப்படையில் உள் மற்றும் வெளி மருந்துகளை பயன்படுத்தினால் முடி உதிர்தலை தவிர்க்கலாம். ஒரே வெப்பநிலையுடைய தண்ணீரில் குளிக்க வேண்டும்.

திடீர் திடீரென குளிர்ந்த நீர், வெந்நீர் என மாற்றுவதால் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கும். முடி உதிர்தலை குறைத்து, ரோம வளர்ச்சியை தீவிரப்படுத்தும் கரிசாலை, பொன்னாங்கண்ணி, அரைக் கீரை, முருங்கை, பசலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

நுண்கிருமிகளால் பாதிக்கப்பட்ட ரோமக் கால்களை சுத்தம் செய்து, உதிர்ந்த இடங்களிலும்கூட முடியை நன்கு வளரச்செய்யும் அற்புத மூலிகை காட்டுச்சீரகம். சென்ட்ராத்தெரம் ஆன்தல்மென்டிகம் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் விளைகின்றன.

காட்டுச்சீரகத்தில் உள்ள வெர்னாஸ்டீரால், சென்ட்ராத்தெரம், சென்ட்ராத்தெரின், டெல்டா-7-ஏவனேஸ்ட்ரால் போன்ற வேதிச்சத்துகள் தோலின் ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்து, அவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை வெளியேற்றி, வியர்வை துவாரங்கள், கொழுப்பு கோள துவாரங்கள் மற்றும் ரோமக்கால் துவாரங்களின் அடைப்பை நீக்கி, ரோம வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. அது மட்டுமின்றி பல தோல் நோய்களையும் நீக்குகின்றன.

காட்டுச்சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து, முடி உதிர்ந்த இடங்களிலும், பூச்சி வெட்டுள்ள இடங்களிலும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்துவர, முடி முளைக்கும். காட்டுச்சீரகத்தை மைய இடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலையில் தடவி வந்தாலோ அல்லது சாதாரண தேங்காய் எண்ணெயில் காட்டுச்சீரகத்தை ஊறவைத்து தலையில் தடவிவந்தாலோ முடி உதிர்தல் நீங்கி, முடி உதிர்ந்த இடங்களிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய கைமுறை மருந்தாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...