Jun 12, 2012

நெஞ்சு எரிச்சல் (Acidity)


Acidity
’இப்பத்தான் சாப்பிட்டேன். ஆனாலும் ஏதோ பசிக்கிற மாதிரியே இருக்கு. ஒரே பகபகன்னு இருக்கு...’ மாதிரியான டயலாக் நம்ம வீடுகள்ல அடிக்கடி கேட்டிருப்போம். ஏன் நாமே கூட எப்பவாவது சொல்லிருப்போம். அது பசி இல்ல. அசிடிட்டின்னு சொல்ற நெஞ்செரிச்சல்.
நாம் சாப்பிடற உணவு ஜீரணமாக உதவியா நம்ம வயித்துல சில என்சைம் (enzymes) களும், அமிலங்களும் சுரக்கும். அதுல ஏதாவது பிரச்சினை ஏற்பட்டா நம்ம ஜீரண சக்தி பாதிப்படையும்.
அப்ப இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுது. சரி! எதனால இதுல மாற்றங்கள் ஏற்படுது?

ரொம்ப கொழுப்பு சத்து நிறைந்த உணவு, சாக்லேட் போன்றவை நிச்சயமா கெடுதல்தான். மது அருந்துதல், புகைப் பிடித்தல்லாம் நெஞ்செரிச்சல் மட்டுமல்ல இன்னும் நிறைய வியாதிகளக் கொடுக்கும். இப்ப எல்லாத்துக்கும் அவசரம், பரபரப்பு. அதனால நம்ம சாப்பாட்டு முறைக்கூட ரொம்பவே மாறிப்போச்சு. காலையில ஆபிசுக்கு ஓடற அவசரத்துல கையில கிடைச்சத முழுங்கிட்டு ஓடறோம். ஆபிஸ் போற வழியில இருக்கற ஒரு கையேந்தி பவனில் ஃபாஸ்ட் ஃபுட் ஏதாவது வாங்கி வயித்த நிரச்சிட்டு நடையக்கட்டுறோம். அதுக்கும் டைம் இல்லன்னா காலை உணவுக்கே  கல்தாதான். இத மாதிரி நேரம் கெட்ட நேரத்துல சாப்பிடறது, மெதுவா மென்னு சாப்பிட்டாம சாப்பாட்ட ஃப்ளைட் ஏத்தி வேகவேகமா வயித்துக்கு தள்ளுவது எல்லாமே நம் ஜீரண சக்திய பாதிக்கும்.

இதுல முக்கியமா காலை உணவு. ஆங்கிலத்தில் breakfast னு சொல்றோம். அதாவது பட்டினியை உடைப்பது என்ற அர்த்தத்தில்தான் வார்த்தையே இருக்கிறது. ராத்திரி சாப்பிட்டு தூங்கி எழுந்து நம்ம வேலைகளை ஆரம்பிக்கிறப்ப ரொம்ப நேரமாகியிருக்கும். வயிறு ரொம்ப நேரமா காலியாயிருக்கும். அப்ப வயித்துல சுரக்கிற இந்த அமிலங்கள் எதை ஜீரணம் பண்றதுன்னு தெரியாம கடைசில ஜீரண உறுப்புகளையே அரிக்க ஆரம்பிச்சுடும். அதனால வயிறு புண்ணாகி இந்த எரிச்சல்லாம் வருது. வயித்துல வாய்வுத் தொல்லை ஏற்படுது. இப்படி அமிலமும் வாய்வும் கைக்கோத்துகிட்டு உணவுக் குழாய வந்து அட்டாக் பண்ணுது. அதுதான் நமக்கு நெஞ்செரிச்சலா இருக்கு.

காலைல இருக்கற  அவசரத்துல சாவகாசமா உட்கார்ந்து வகைவகையான டிபன வெளுத்துக் கட்டனும்னு சொல்லல.கொஞ்சமா ஏதாவது சாப்பிடலாம். ரெண்டு இட்லி இல்ல ஒரு கப் பொங்கல்... இதெல்லாம் வேணாம்னா கூட கார்ன் ஃப்ளேக்ஸ், ஓட்ஸ் கஞ்சி அல்லது பிரெட் துண்டுகள் சாப்பிடலாம். பழங்கள், ஜூஸ் இதெல்லாம் கூட ஆரோக்கியமானதுதான். அவ்வளவு ஏன் டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்னா காலை நேரத்துல இருக்கற அவசரத்துல ஒரு முட்டைய உடைச்சு வாயிலப் போட்டா கூட நல்லதுங்கிறாங்க. அதனால காலை உணவ மிஸ் பண்ணாதீங்க.

அசிடிட்டிய ரொம்ப சுலபமா நாம வீட்ல உபயோகிக்கிற பொருட்கள வச்சே சமாளிக்கலாம்.

அதுக்கு முதல்ல நீங்க சரியான நேரத்துல சாப்பிடனும். இப்ப பிரச்சினையே ஜீரணமாவதுலதான் இருப்பதால மூணு நேரம் சாப்பிடற சாப்பாட்ட சின்ன சின்ன பகுதியா பிரிச்சு அப்பப்ப சாப்பிடலாம். அதனால ஜீரணமாவது கொஞ்சம் ஈஸியா இருக்கும். கொழுப்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கு அவசர சட்டம் போட்டு தடா போட்டுடுங்க.

சுலபமா ஜீரணமாகக் கூடிய உணவாப் பார்த்து சாப்பிடுங்க. வெங்காயம், அமிலம் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சையை தவிர்ப்பது நல்லது. மற்றப்படி நிறைய பழங்கள் சாப்பிடறது நல்லதுதான். வயித்துக்கு இதமா இருக்க குளிர்ந்த பால், இளநீர்,போன்றவை நிறைய சாப்பிடலாம். காலைல எழுந்ததும் வெறும்  வயித்துல ரெண்டு மூணு டம்ளர் தண்ணி குடிக்கறத பழக்கப்படுத்திக்குங்க. அது இந்த பிரச்சினைக்கு மட்டுமில்லாம இன்னும் நிறைய வியாதிகள நெருங்கவிடாது.

வீடுகள்ல சர்வசாதாரணமா விளையற துளசி செடிய நாம் கடவுளா வணங்குறோம். அதன் இலைகள அடிக்கடி மென்னு தின்னா கடவுளா இருந்து நம்ம வியாதிய தீர்க்கும்.

நெஞ்சு எரிச்சல் ஒண்ணும் பெரிய வியாதி இல்ல. நம்ம வாழ்க்கை முறைய நாம கொஞ்சம் மாத்தி அமைச்சுகிட்டா நோய் நொடி இல்லாம நிம்மதியா இருக்கலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...