Jul 3, 2012

விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம்-பழங்களின் பயன்கள்



ணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியோடு, இனிய மணத்தோடு இருக்கும் விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம். விளா மரத்தின் ஒவ்வொரு பாகமும் அபூர்வமான மருத்துவ குணங்கள் அடங்கியதே.
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி

செல்லும் சாலையில் உள்ள திருநின்றியூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தல விருட்சம் இதுதான். இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் 'கபி ப்ரியா’ என்றும் ஆங்கிலத்தில், 'மங்கி ட்ரீ’ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு. சுத்தியால் உடைத்துத்தான் விளாம்பழத்தின் ஓட்டை உடைக்க முடியும். உள்ளே இருக்கும் பிசின் போன்ற சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் சர்க்கரை அல்லது தேங்காய்ப் பால் மற்றும் வெல்லத்துடன் பானமாக்கி, குடிப்பதும் உண்டு. விளா மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி பட்டுக்கோட்டை சித்த மருத்துவர் பாலசங்கரியிடம் கேட்டோம். அத்தனைவிதமான பலன்களையும் ஆர்வத்தோடு விவரித்தார்.
விளா மரத்தின் இலை, காய், பழம், பழத்தின் ஓடு, பட்டை, பிசின், வேர்

ஆகியவை மருத்துவப் பயன்பாடு கொண்டவை.
இலை
: துளிர் இலைகளின் சாற்றைப் பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஜீரணக் கோளாறுகள் குணமாகும். இலைகளைக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெயை சொறி, சிரங்கு உள்ள இடத்தில் தடவிவந்தால், குணம் கிடைக்கும். இலையின் கொழுந்தைக் குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், வயிற்றில் உள்ள வாயு நீங்கும்; பசி உண்டாகும். இலைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து குடித்தால், காய்ச்சல் குணமாகும். இலையைக் குடிநீரில் போட்டுக் கொடுத்தால், குழந்தைகளின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
பழம்:
100 கிராம் எடை கொண்ட விளாம்பழக் கூழில் முக்கால் பங்கு நீர் இருக்கிறது. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்களுடன் ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் சத்தும் இருக்கிறது. கல்லீரல் மற்றும் இதயத்துக்கு வலு சேர்க்கும் டானிக் இந்தப் பழம். இருமல், கோழை உண்டாகுதல் போன்றவையும் குணமாகும். பழத்தினைப் பாகு செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் தீரும். குடல் புண் மற்றும் மூல வியாதிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் விளாம்பழத்துக்கு உண்டு. சிலருக்கு வாயில் எப்போதும் உமிழ்நீர் ஊறிக்கொண்டே இருக்கும். அவர்கள் விளாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல குணம் கிடைக்கும். பல் ஈறுகளில் உள்ளப் புண்களைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. பழத்தின் சதையுடன் திப்பிலி சூரணம் கலந்து சாப்பிட்டால், மூச்சிரைப்பு மற்றும் தொடர் விக்கல் ஆகியவை குணமாகும். இவ்வளவு பயன்கள் இருப்பதால், விளாம்பழத்தைக் காயகல்பம் என்றும் சொல்வார்கள்.
காய்
: விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.
பிசின்: விளா மரப் பட்டையில் இருந்து வெளிவரும் நிறமற்ற பிசினைப் பொடித்து, தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாகும். ஒரு துண்டுப் பிசினை வாயில் போட்டு, அதில் இருந்து வரும் சாற்றை விழுங்கிக்கொண்டு இருந்தால், வறட்டு இருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியன தீரும். வெள்ளைப்படுதலுக்கும் விளாம் பிசின், நல்ல மருந்து.
வேர்:
பாம்புக் கடியின் வீரியத்தைக் குறைக்கவல்லது. விளா வேர், பூலா வேர், லவங்கம், காட்டுமல்லி வேர் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, எருமை மோரில் வேகவைத்துத் தயிரில் கலந்து அருந்திவந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
விதை
: விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மலமிளக்கியாகச் செயல்படும்.
இவ்வளவு மருத்துவப் பயன்களை அள்ளி வழங்கும் விளாவுக்கு விழாவே எடுக்கலாம்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...