Aug 10, 2012

ஆனையும் ஆனைமுகத் தோனும்



நமது வாழ்வில் மிருகங்களும், பறவைகளும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதர்களுக்கு உதவுவதன் மூலம் சில அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்துக் கடவுளுக்கு வாகனங்களாக விளங்குவதால், சில மிருகங்களும் பறவைகளும் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்திருக்கின்றன என்றால் தவறில்லை.

எருது, சிங்கம், யானை, பசு, எலி போன்ற மிருகங்களும் பாம்பு போன்ற

ஊர்வனவும், மயில், கிளி, அன்னம், காகம் போன்ற பறவைகளும் குறிப்பிடத்தக்கவையாகும். இந்து, பௌத்தம் முதலிய மதங்கள் இவற்றிற்கு முக்கிய இடம் தருகின்றன. தவிரவும் மறு பிறப்பை நம்புகின்ற இந்து, பௌத்த மதங்கள் ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு பிறவிகளை எடுத்து மும்மலங்களைக் களைவதன் மூலம் பரிசுத்த பரி நிர்வாண நிலையை அடைந்து இறைவனின் பாதார விந்தங்களைச் சேர்ந்து நித்திய பேரின்ப நிலையை எய்துகின்றன என இயம்புகின்றன.

புல்லாகிப் பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி, கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராய், முனிவராய்த், தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் எம் பெருமான்.... என்று மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில் பாடியிருப்பதையுங் கூட இவ்விடத்தில் நினைவிற் கொள்ளலாம். இந்நிலையில் சகல உயிர்கள் மீதும் காருண்யம் காட்ட வேண்டும் என்று மதங்கள் போதிக்கின்றன.

இந்துக் கடவுளர் மிருகங்களை வாகனமாகக் கொள்ளுதல் அவ்வுயிர்களின் சிறந்த தன்மைகளையும் குணாதிசயங்களையும் எடுத்துக் காட்டுவதற்கும் உயிர்கள் மீது அன்பு பாராட்டுவதற்காகவும் என்பர். இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு சில மிருகங்களினதும் பறவைகளினதும் முக்கியத்துவத்தினை புராண, இதிகாச வழி நோக்குதல் பொருத்தமானதாகும். இந்தவகையில் இவை ஏன்? எதற்கு? என்று எமது மனதில் எழும் சில கேள்விகளுக்கு பதில்களாகவும் அமைந்து விடுவதைப் பார்க்கலாம்.

இந்த வகையில் நாம் யானையைப் பார்க்கலாமா? பென்னம்பெரிய உருவமும், தும்பிக்கையும், சிறிய கண்களும், அமைதியான சுபாவமும் கொண்டு தோன்றுகின்ற யானை எடுத்த எடுப்பில் எவரது கருத்தையும் கவர்ந்து விடும் ஒரு மிருகமாகும். இலங்கையில் காட்டுப் புறங்களில் யானைகள் வாழ்கின்றன. நகரப் புறங்களுக்கு பாரந்தூக்கும் வேலைகளுக்காகவும் முக்கியமாக சமய விழாக்களுக்காகவும் கொண்டு வரப்படுகின்றன.

முற்காலத்தில் மன்னர்கள், குதிரைப் படை, யானைப் படை ஆகியவற்றை போரின் பொருட்டு வைத்திருந்தனர் என அறிந்துள்ளோம். ஆனால், பெருங் காப்பியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் யானைப் படை பற்றிய குறிப்பேதும் இல்லை என்பர்.

யானை ஒரு பொறுமையான மிருகம். ஆனாலும் மிகப் பெரும் சனக்கூட்டத்தைக் காணும்போது அது அச்சமுற்று திமிறி ஓடி, பெரும் குழப்பத்தை உண்டாக்கி விடுவதுண்டு. கண்டி பெரஹரா (ஊர்வலம்) நடக்கும் வேளையில் சில சந்தர்ப்பங்களில் இவ்விதம் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. யானைப் பாகனின் அதட்டல், மிரட்டல், அடித்தல் போன்றவற்றிற்கெல்லாம் அடிபணிந்து காலங் காலமாய் சேவை செய்யும் யானைக்கு கோபம் வந்தால் என்ன ஆகும்? அந்த யானைப் பாகனையே தும்பிக்கையால் வளைத்து ஒரு சுற்று சுற்றுத் தூக்கி, தன் காலடியில் போட்டு மிதித்துக் கொன்று விடும்! அப்படியான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

போரின் போதும் யானைகளை நம்ப முடியாதென்பர். பெரும் சனக் கூட்டத்தையும் நெருப்பையும் காணும்போது யானைகள் குழப்பமடையும். யானைத் தலையுடைய கணேசரின்(விநாயகர்) பிறப்பு தொடர்பாக சில புராணக் கதைகள் உள்ளன. அதில் பிரசித்தமான ஒரு கதையைப் பார்க்கலாம்.

ஒருநாள் சிவபிரானின் துணையான பார்வதிதேவி, தான் குளிக்கச் செல்லுமுன் தனது உடலில் எண்ணெயையும் மண்ணையும் பூசுவதன் மூலம் ஒரு குழந்தையை உருவாக்கினாள். பின்னர் அதற்கு உயிர் கொடுத்தாள். பின் அக் குழந்தையிடம் அவள் நீ என் மகன். இதில் காத்துக் கொண்டிரு, நான் குளித்துவிட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்று விட்டாள்.

அவ்விடத்தை அவள் அகன்று சென்ற பின் சிவன் அவ்விடம் வந்தார். அவர் உள்ளே செல்ல அக்குழந்தை அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த சிவன், அவனது தலையைத் துண்டித்து விட்டார். அவ்வேளை அங்கு வந்த பார்வதி, தனது தலையற்ற மகனைக் கண்டதும் துடித்துப் போனாள். ஆத்திரமேலீட்டால் சக்தியான தான் இவ்வுலகை அழிக்கப் போவதாகப் பயமுறுத்தினாள்.

தன் துணைவியைச் சமாதானப்படுத்த விளைந்த சிவன் தனது கணங்களை அழைத்து அவர்கள் காணுகின்ற முதல் உயிரினத்தின் தலையை வடக்கு நோக்கிக் கொண்டு வருமாறு ஆணையிட்டார். வடக்கு புத்தியோடு சம்பந்தப்பட்ட திசையாகும். அவ்விதமே சென்ற கணங்கள் ஒரு வெள்ளை யானை தனது தலையை வடக்குத் திசையாக வைத்துப் படுத்திருப்பதைக் கண்டார்கள். அதன் தலையைத் துண்டித்து எடுத்துவர, சிவன் அதனை அக் குழந்தையின் கழுத்துப் பகுதியில் பொருத்தி உயிரூட்டினார்.

பார்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது மகனுக்கு கணேசன் அல்லது கணபதி (கணங்களின் தலைவன்) எனப் பெயரிட்டாள். இந்து சமயத்தின்படி கணேசர் பிரம்மச்சாரி ஆனவர். ஆனால், மஹராஷ்டிரத்தில் கணேசருக்கு புத்தி, சித்தி என இரு மனைவியர் இருப்பதாக நம்புகின்றனர். இந்துக்களின் எந்தவொரு சமய நிகழ்ச்சியும் கணேசøர முதலில் வணங்காமல் செய்யப்படுவதில்லை. ஏனெனில் அவர் விக்னேஸ்வரர். விக்கினங்களை அகற்றுபவர். அவர் பிரம்மச்சாரியாக விளங்கினாலும் பிள்ளைப் பேறு அற்றோருக்கு பிள்ளை வரம் வழங்கும் தெய்வமாக வணங்கப் பெறுகிறார். அவர் அறிவை வேண்டி நிற்போருக்கு அறிவுச் செல்வத்தையும் பிள்ளைச் செல்வத்தை வேண்டி நிற்போர்க்கு பிள்ளைச் செல்வத்தையும் வழங்குபவராக விளங்குகிறார்.

இந்து தெய்வங்களில் மிகவும் நேசிக்கப்படுபவராக கணேசர் விளங்குகிறார். ஏனெனில் புனிதமானதும், மிகவும் நேசிக்கப்படுவதும், மிகப் பெரிய உருவம் கொண்டதாயினும் பணிவும் அன்பும் கொண்டதுமான யானையின் அம்சத்தைத் தம்மிடத்தில் அவர் இணைத்துக் கொண்டிருப்பதினாலுமாகும்.

பொதுவாக கணேசர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கின்ற கல்லாலான உருவமாகக் காணப்படுவார். சுற்றிவர பாம்பு உருவச் சிலைகள் இருக்கும். இரண்டு கைகள் அல்லது நான்கு கைகள் அல்லது அதற்கு மேலுள்ள கைகளுடனும் தோன்றுவார். இவை மூன்றுமே யானையுடன் தொடர்புடையவையாகும்.

யானையை அடக்கி வழிக்குக் கொண்டுவர ஈட்டியும் அங்குசமும் பாவிக்கப்படுவது வருத்தத்திற்குரியது. இடுப்பில் பாம்பைச் சுற்றியிருப்பார். எலி மீது அமர்ந்திருப்பார். கணேசர் வெற்றியையும் வளத்தையும் அளித்து தடைகளை நீக்கி வைப்பவர். ஆனால், எலி வெற்றிக்கும் வளத்துக்கும் தடையானது. அதை அடக்கி நிர்வகிக்க வேண்டும். விக்கினங்கள் போக்கும் விநாயகப் பெருமான் எலியைத் தனது வாகனமாக்கி அதனை அடக்கி வைத்திருக்கிறார். பென்னம்பெரிய யானையும் சின்னஞ்சிறிய எலியும் போன்ற எதிரும் புதிருமானவை சேர்ந்து வாழ முடியும். நல்ல உணவுகளின் மீதான விருப்பமும் பூரண ஆன்மிக அறிவும் இணைய முடியும் என்பர்.

உலகில் எதிரும் புதிருமானவை நிறைய உள்ளன. அவை அக்கம்பக்கமாக இருந்து அமைதியாக சேர்ந்து வாழ்தல் இயலும். இதற்கு வேண்டியதெல்லாம் சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வுமாகும். ஆனை முகத்தோனின் தந்தம் ஒன்று உடைந்திருப்பதைக் காணலாம். இதற்கு சில புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

ஒருநாள் விநாயகர் தனக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு தன் வாகனமான எலியின் மீது ஏறிப் பயணம் செய்தார். அப்போது எலி ஒரு பாம்பின் மீது இடறி விநாயகரை வீழ்த்தி விட்டது. அப்போது விநாயகரின் வயிறு வெடித்து மோதகங்கள் எல்லாம் வெளியே விழுந்து உருண்டோடின.

இந்த நகைப்புக்குரிய காட்சியைக் கண்ட நிலவு சிரித்துவிட்டது. விநாயகர் கோபத்தோடு எழுந்து பாம்பை எடுத்து தனது இடுப்பில் சுற்றி, தனது தந்தம் ஒன்றினை முறித்து எடுத்து உனது பிரகாசம் மறையட்டும் என்று சபித்து சந்திரனை நோக்கி அதனை எறிந்தார்.

அதனால் இருள் இல்லாமல் போய்விட்டது. பகலும் இரவும் சூரிய ஒளி பிரகாசித்தது. எனவே கடவுள்கள் கணேசரிடம் சென்று அச்சாபத்தை நீக்குமாறு பணிவுடன் வேண்டினர். அவர்களது வேண்டுகோளை ஓரளவுக்கு ஏற்ற கணேசர் சந்திரனின் பிரகாசத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வளரவும் பின் தேயவுமாகச் öசய்தார்.

மற்றுமொரு புராணக் கதையும் இதற்கு உண்டு. தான் கூறும் மகாபாரத காப்பியத்தின் கவிதை வரியைத் தான் சொல்லச் சொல்ல எழுதக்கூடிய ஒருவரைத் தனக்குத் தர வேண்டும் என்று வியாச முனிவர் ஒருமுறை பிரம்மாவிடம் வேண்டிக் கொண்டார். பிரம்மா கணேசரின் பெயரைக் கூறினார். தான் எழுதுவதாயின் ஓரிடத்திலும் சிறிதும் நிற்காமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போக வேண்டும் என்று கணேசர் நிபந்தனை போட்டார்.

வியாசர் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் தான் கூறும் கவிதையில் ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருள், அதன் பயன் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்றொரு நிபந்தனை இட்டார். அவ்விதம் கணேசர் ஒரு கவிதையை எழுதி முடித்து விட்டார் என வியாசர் காணும் போது மிகவும் சிக்கலான கருத்துள்ள கவிதையை அடுத்து வியாசர் சொல்லுவார். அதனால் கணேசர் நின்று யோசித்து எழுத வேண்டியிருந்தது. இவ்விதமாக இக்காப்பியம் எழுதி முடிய மூன்று வருடங்கள் பிடித்தது. அத்துடன் மகாபாரதம் தீர்க்கமான செய்தி கொண்ட காப்பியமாக விளங்கலாயிற்று.

புத்திக்கும், சிந்திக்கும் வளமான வாழ்விற்கும் அருளும் கணேசப் பெருமானுக்கும் யானைக்கும் இடையில் உள்ள சில ஒற்றுமைகளை அறிஞர்கள் எடுத்துக் கூறுவர். புத்தி மற்றும் உள்ளத்தின் பலம், தடைகளை அகற்றும்சக்தி ஆகியவற்றினை யானை பிரதிபலிக்கிறது. யானை தனது தும்பிக்கையால் தேங்காயை உடைத்து அதற்குள் உள்ள மென்மையான தேங்காயை எடுத்துண்பது போல் ஒருவருக்கு மிகவும் முக்கியமான விவேகத்தை கணேசர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இளம் தளிர்களை விடுத்து பெரிய மரங்களை இழுத்து வேரோடு சாய்த்தல், பெரும் மரக் குற்றிகளை ஆற்றுக்குள் தள்ளி விடுதல், நல்லதையும் தீயதையும் வேறுபடுத்தல் ஆகியவற்றின் மூலம் யானை தன் புத்திக் கூர்மையை வெளிப்படுத்துகிறது. அதன் பென்னம்பெரிய வயிறு இப்பிரபஞ்சத்தின் துன்பங்களை விழுங்கி விடும் ஆற்றலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

கடவுள்களும் அரசர்களும் யானை மீது ஏறிச் செல்கின்றனர். சிருஷ்டிக் கடவுளான பிரகஸ்பதி யானையில் பயணம் செய்கிறார். மோட்ச கடவுளான இந்திரனின் வாகனம் ஐராவதம் என்னும் யானை ஆகும். லட்சுமி அம்பாளுடன் சம்பந்தப்பட்டது யானையாகும். லக்ஷ்மியின் ஓரம்சமான கஜலட்சுமியின் இரு பக்கங்களிலும் இரு யானைகள் நின்று நீரை அம்பாள் மீது வருஷிப்பதைப் படங்களில் காணலாம். யானை அதிர்ஷ்டம், வளம், பலம், உறுதிப்பாட்டின் சின்னமாகும். அனைத்து நிலை பேறுகளின் ஊற்றாக நீர் விளங்குகின்றது.

பௌத்தர்களுக்கும் யானை புனித மிருகமாக விளங்குகின்றது. அவர்களின் ஏழு அரச மாணிக்கங்களில் ஒன்றாக விளங்கும் யானை சமய விழாக்களில் முன் கொண்டு செல்லப்படும் ஒன்றாக விளங்குகின்றது. தாய்லாந்தின் பௌத்த ஆட்சியில் வெள்ளை யானை நல் அதிர்ஷ்டத்துக்கும் நல் வளத்துக்கும் உரிய ஒன்றாக விளங்குகின்றது. பர்மாவிலும் வெள்ளை யானை போற்றப்படுகின்றது.புத்தரின் பிறப்புப் பற்றி உள்ள ஒரு புராணக் கதையும் குறிப்பிடத்தக்கது. கபிலவஸ்து மன்னனான சுத்தோதனன் மனைவியான மாயாவதி சித்தார்த்தனை கர்ப்பத்தில் கொள்ளுமுன் தனது கர்ப்பத்துக்குள் வெள்ளை யானை ஒன்று புகக் கனவு கண்டாளாம்.எவ்விதமாயினும் ஆனையும் ஆனைமுகத்தோனும் யாதவர்களே!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...