Feb 2, 2013

விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறுமா?



By AM. Rizath
2013-02-01

இயற்கையின் செயற்பாடுகளை செயற்கையின் வடிவங்களால் அவதானிக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது இயற்கை. இதன் வெளிப்பாடுகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்களும் ஏராளம் உண்டு.

இருப்பினும் மனிதர்கள் எம்மால் இயற்கைக்கு எதிரான சில முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே தருகின்றது. அவையே இயற்கை அனர்த்தங்களாக அமைந்து அவ்வப்போது

என்றிருந்து இப்போது அடிக்கடி மனிதர்களை சோதிக்க ஆரம்பித்துவிட்டது.

ஆறறிவு என்று கூறப்படும் விலங்குகளான மனிதர்கள் தவிர ஏனைய ஐந்தறிவு விலங்குகளில் பல இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறும் திறன் படைத்தது என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. இது உண்மையா? இல்லை உண்மைக்கு புறம்பானதா என்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதொரு தேவை ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிகளவில் மீன்கள் பிடிபட்டதுடன் ஒரு சில பிரதேசங்களில் கடவாழ் (கடல் பாம்பு, காடலாமை, மீன்கள்) உயிரினங்கள் கரையொதுங்கவும் ஆரம்பித்தது.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஒரு வகையான அச்சம் எழுந்தது. ஏனெனில 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னரும் இவ்வாறே அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதுடன் ஏராளமான மீன்களும் பிடிக்கப்பட்டது. இதனால் மீண்டுமொரு சுனாமி எம்மை நோக்கி வருகிறதா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவியது. அதுவொரு வகையில் நியாமும் கூட.

ஏனெனில் அப்பகுதி மக்களே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது அதிகளவு உயிர்கள் மற்றும் உடைமைளை இழந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம்.

சரி அப்படியானால் கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் சுனாமி, சூறாவளி போன்ற ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயச் சங்குகளா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அவ்வாறெனில் பல சந்தர்ப்பங்களில் விலங்குகளின் செயற்பாடுகள் அனர்த்தங்களை எச்சரிப்பதாக அமைந்துவிடுகிறதே அது ஏன்? 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது கடலோரத்தில் இருந்த பல விலங்குகள் உயிர்பிழைத்திருந்தது ஏன்? இவற்றையெல்லாம் விட சுனாமியை எச்சரிப்பது போல சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலை விலத்திய விலங்குகளின் நகர்வுகள், ஏராளமான மீன்கள் கரையை வந்தடைந்தமை போன்றன ஏற்படக்காரணம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவுகள் இவ்வாறு அமைகிறது.


விலங்குகளால் காலநிலை மாற்றங்களை உணர்ந்துகொள்ள முடியும். இதனால் சூடு, குளிர், அமுக்கம், மனிதர்களுக்கு கேட்கமுடியாத சத்தங்கள், வாயுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பலவற்றை உணரக்கூடிய ஆற்றல் உண்டு. இவை இனங்களுக்கிடையில் வித்தியாசப்படும்.


இவ்வாறு மாற்றங்களை உணரும் சந்தர்ப்பங்களில் குறித்த விலங்குகள் தங்களுக்கு ஏதுவான வாழும் சூழலை இலகுவில் புரிந்துகொண்டு அவ்விடம் நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கும். தவிர விலங்குகள் அனர்த்தங்களை உணரவில்லை ஆனால் அனர்த்தங்கள் நிகழுவதற்கு முன்னபாக ஏற்படும் காலநிலை மாற்றங்களினையே உணர்கின்றது.

இதற்காக விலங்குகள் இடம்பெயரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் என்பது அர்த்தமல்ல. அனர்த்தங்களை உணரக்கூடிய எதுவித விஷேட சக்திகளும் விலங்குகளிடம் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களின் விளக்கங்களும் நியாயமாகவே உள்ளன. ஏனெனில் சாதரணமாக எமது வீடுகளில் மேல் நோக்கி எறும்புகள் பயணிக்கும் போது மழை வரப்போகிறது என்று எதிர்வுகூறுவார்கள். சில வேளைகளில் மழை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் எறும்புகள் எறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தினை உணர்ந்துகொண்ட எறும்புகள், தமது பாதுகாப்பை உறுதி செய்கிறதே தவிர மழை வருவதை அவை உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இதே போலவே கடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவே கரையை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பிக்கின்றது. எனவே அவை சுனாமி அல்லது வேறு அனர்த்தங்களுக்கான முன் எச்சரிக்கையாக இருக்க வாயப்பே இல்லை என்பது உறுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் கடலில் ஏற்படுகின்ற எண்ணெய்க்கசிவு, சிறியளவிலான நில அதிர்வுகள் போன்ற காரணிகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால் இறந்தும் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்க வாய்ப்புக்கள் உள்ளது. அத்துடன் உயிருடன் உள்ளவை கரையை நோக்கி நகரும் இந்நிலையிலேயே மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் கிடைக்க காரணமாகின்றது.

மீன்கள் அதிகளவில் கிடைப்பது மற்றும் கடல் உயிரினங்கள் கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறது விஞ்ஞானம். எனவே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்ற உண்மையை இனிவரும் காலங்களில் எம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

மொட்டு வெடித்தபோதிலும் சரி திருடன் குதித்தபோதிலும் சரி நாய் குரைக்கத்தான் செய்யும். ஆனால் அது பேய், பிசாசுகளாலேயே குரைக்கிறது என்ற மூடநம்பிக்கைளில் மூழ்கச்செய்தது போல் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்கினால் சுனாமியோ வேறு பல இயற்கை அனர்த்தங்களோ ஏற்படும் என்ற மூடநம்பிக்கை ஏற்படாமல் இருப்பதே நல்லது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...