Mar 22, 2013

பூமியைத் தாக்கவரும் அனைத்து விண்கற்களையும் அடையாளம் காண முடியாது - நாசா



நமது பூமியைச் சுற்றி அதன் அருகே உள்ள விண்கற்களில் 95% வீதமானவை நம்முலகில் மனித இனத்தைப் பூண்டோடு அழித்திடப் போதுமானவை எனவும் இவற்றில் எதேனும் ஒன்று கூட நமக்கு உடனடி அச்சுறுத்தல் கிடையாது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
மேலும் நாசா இயக்குனரான சார்லஸ் போல்டேனிடம் நியூயோர்க் நகரை நோக்கி மிகப் பெரிய எரிகல் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது என்று கேட்கப் பட்டது.
இதற்கு அவர் நகைச்சுவையாகப் பதில் சொன்னார். அதாவது எரிகல்லின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என முதலில் கணித்த பின் அதைத் திசை திருப்ப அல்லது சிறு சிறு துகள்களாக வெடிக்க வைக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் கடவுளைப் பிரார்த்திக்க
வேண்டும் என்றார். பெப்ரவரியில் 55 அடி விட்டமும் 10 000 டன் எடையும் உடைய விண்கல் ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் எனுமிடத்துக்கு மேலே அந்தரத்தில் வெடித்ததில் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன் 1500 பேர் வரை காயமடைந்திருந்தனர். கடந்த ஒரு நூற்றாண்டில் இடம்பெற்ற மிகப்பெரிய விண்கல் தாக்குதலாக இது பதியப் பட்டது. இச்சம்பவத்தை அடுத்து விண்வெளி ஆராய்ச்சி செய்யும் உலகின் வல்லரசுகள் விண்கற்கள் பூமியில் வீழ்ந்து ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்குச் சேர்ந்து செயற்பட ஆலோசித்து வருகின்றன.
பூமியைச் சுற்றி வரும் விண்கற்கள் குறித்து போல்டென் மேலும் கூறுகையில் கூடைப் பந்து அளவுள்ள விண்கற்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் மேலே வீழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஒரு கார் வண்டியளவு விண்கற்கள் ஒவ்வொரு கிழமைக்கு ஒரு தடவை பூமிக்குள்ளே நுழைவதாகவும் ஆனால் இவை தரையை அடையும் முன் முற்றாக எரிந்து விடுவதால் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று தெரிவித்தார். மேலும் எத்தகைய அளவிருந்தாலும் பூமியைத் தாக்க வரும் அனைத்து விண்கற்களையும் அவை மோதுவதற்கு முன் அடையாளங் கண்டு அழிப்பது சாத்தியமில்லை என்று கூறிய அவர் ஆனால் மிகப் பெரிய விண்கற்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் அதை நோக்கி வரும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றும் தெரிவித்தார்.
நாசா நிறுவனம் 2025 ஆம் ஆண்டளவில் பிரபஞ்சத் தோற்றம் குறித்து ஆராய பூமிக்கு அண்மையில் உள்ள விண்கல் ஒன்றுக்கு வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பூமிக்கு வெளியே விண்கற்களை அழிப்பதற்கு அல்லது திசை திருப்புவதற்கு ஏற்ற வலிமை படைத்த விண் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் முழுமையடைய 2030 ஆம் ஆண்டு வரை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
போல்டென் கூறிய படி இக்கால எல்லைக்குள் பூமியைத் தாக்க மிகப்பெரிய விண்கற்கள் வந்தால் கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்பது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...