Mar 8, 2013

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது.
உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு
குட்டித்தீவு. சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் பெரும்பகுதி மலைகள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கான நிலப்பகுதி என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவு.
மின்னணுக்கழிவுகளால் மூழ்க இருந்த தைவான்
இந்த பின்னணியில் உலக புகழ்பெற்ற மின்னணு தொழில் நிறுவனங்கள் பலவும் தங்களின் உற்பத்தி நிலையங்களை தைவான் நாட்டில் வைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தைவான் நாட்டு மக்கள், உலக அளவில் மின்னணு சாதனங்களை அதிகம் பாவிப்பவர்களாகாவும், அவற்றை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதனால் உருவாகும் மின்னணுக்கழிவுகள் தைவான் நாட்டில் மிக மிக அதிகம். இவற்றை இதற்கு முன்னர் வெறுமனே நிலத்தின் மிகப்பெரிய பள்ளங்களில் இட்டு நிரப்பிவந்த தைவான் நாட்டு அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதில் பெரும் சிக்கல் உருவானது. இருக்கும் பள்ளங்களையெல்லாம் நிரப்பிவிட்ட நிலையில், இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தைவானில் புதிய நிலமோ பள்ளங்களோ இல்லை.
எனவே 2010 ஆம் ஆண்டு முதல் தைவானில் உருவாகும் குப்பைகளை நிலத்தில் புதைக்கும் பழக்கத்தை அந்நாட்டின் அரசாங்கம் முற்றாக தடை செய்து உத்தரவிட்டது. அன்று முதல் தைவானில் உருவாகும் மின்னணு குப்பைகளும் முழுமையாக மறுசுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மறுசுழற்சிக்கு மாற்றில்லை
இதன் ஒருபகுதியாக கணிணிகளின் மதர்போர்ட்களில் இருக்கும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. அதில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்றவை தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இப்படி பிரிக்கப்படும் உலோகங்கள் அனைத்துமே பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்களின் இருக்கைகள் என்று பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமாக, துணிகள் கூட மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய துணிவகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த முயற்சிகளின் அடுத்த கட்டமாக இப்படி மறு சுழற்சி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே கட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதில் மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு ஒட்டுமொத்த கட்டிடமும் கட்டப்பட இருப்பதாக கூறுகிறார் இந்த கட்டிட வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் தைவானின் பிரபல கட்டிடகலைஞர் ஆர்தர் ஹவுங்.
இந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் இருக்கும் சூரியஒளியை உள்ளே விடும்படியானதாக இருக்கும் என்று கூறும் அவர், இந்த கட்டிடம் கடும்புயலை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
இந்த கட்டிடம்தான் உலக அளவில் முழுக்க முழுக்க மறுசுழற்சி முறையில் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட மிகப்பெரிய மறுசுழற்சி தொழிற்சாலை என்று வர்ணிக்கும் ஆர்தர், மனிதர்கள் உருவாக்கிய மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக பார்க்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளுக்கு தைவான் கண்டிருக்கும் இந்த தீர்வு உலகின் மற்ற நாடுகளுக்கான முக்கிய முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...