May 27, 2013

வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!

News Service வாழ்க்கையின் அந்திம காலத்தைக் கடப்பது தொடர்பான கவலை நம்மில் அத்தனை பேருக்கும் இருக்கிறது. முதுமையைத் தொட்டிருப்பவர்களும், தொட இருப்பவர்களும் இப்பருவம் குறித்த எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.பணம் படைத்தவர்கள் முதல் பாட்டாளிகள் வரையில் முதுமையை அடையும் மனிதர்களுக்கு சமூகம் அளிக்கும் அங்கீகாரம் அல்லது உரிமைகள் குறித்த விஷயத்தில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. சமூகத்தில் தாங்கள் புறந்தள்ளப்பட்டதாக முதியவர்கள் எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள்.இதற்கு பல்வேறு சமூகக் காரணங்களை அடுக்கலாம். உழைத்து சம்பாதிக்கும்வரை வீட்டின் தலைமகனாக மதிக்கப்பட்டவருக்கு முதுமைப் பருவத்தில் அளிக்கப்படும் மரியாதை தேய்வதால், முதியோர் இல்லங்களே மேல் என்று பலர் கருதுகின்றனர்.
  
முதியவர்களைப் பெரும் சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு அனாதைகளாகவே விட்டுவிடும் அவலம் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன.
மதுரையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு முதியவர் தனது தள்ளாத வயதில் உயிரிழந்தார். இதையடுத்து முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள், அந்த முதியவர் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அவரை
அங்கு சேர்த்துவிட்டபோது அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் என்று கூறியவர்கள் தந்த முகவரியையும், செல்பேசி எண்களையும் தேடி எடுத்து தொடர்புகொள்ள முயன்றனர். இதற்காகச் சில மணி நேரங்களைச் செலவிட்டும் அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சியது. செல்போன் எண்களும், முகவரியும்கூட போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. போலியாக முகவரியையும், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்ணையும் கொடுத்து முதியவரை அந்த இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
அந்த முதியவர் சடலம் இல்லத்தில் நெடுநேரம் வைக்கப்பட்டிருந்ததால் அங்கிருந்த சக முதியவர்களுக்கும் மரண பயம் தொற்றிக்கொண்டது. இதை உணர்ந்து கொண்ட இல்லப் பொறுப்பாளர்கள் உடனடியாக சடலத்தை தகனம் செய்ய தன்னார்வலர்களின் துணையை நாடினர். தன்னார்வலர்கள் சிலர் தங்கள் சொந்தச் செலவில் ஆம்புலன்சுடன் வந்து சடலத்தைப் பெற்றுக்கொண்டு சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றனர். அந்தச் சடலத்தை எந்த முறைப்படி அடக்கம் செய்வது அல்லது எரிப்பது என்பது புரியாமல் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.
ஒருவேளை சொத்துக்காக, சடலத்தைச் சொந்தம் கொண்டாடவும் சிலர் வரக்கூடும், போலீஸாரின் விசாரணைக்கும் தாங்கள் உள்படக்கூடும் என்பதால் சடலத்தை அடக்கம் செய்த நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் எடுத்து ஆவணமாக்கப்பட்டது.
அனாதைச் சடலமாக அடையாளம் காட்டப்பட்டு அந்த முதியவரின் இறுதிச் சடங்குகள் முன்பின் தெரியாத நல்ல உள்ளங்களால் நிறைவேற்றப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் நெஞ்சுருக வைக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சொந்த பலத்தில் நடமாட முடியாத முதியவர் ஒருவரை அவரது உறவினர்களோ அல்லது பிள்ளைகளோ அவர் உயிரோடு இருக்கும்போதே வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டில் தள்ளிவிட்டு மாயமாகிவிட்டார்கள். தன்னார்வ அமைப்புகளால் பின்னர் அவர் மீட்கப்பட்டார். உயிரோடு இருக்கும்போதே புதைக்கும் எண்ணம் கொண்ட மனிதர்களின் மாபாதகச் செயலை எண்ணி வருந்திய அப்பெரியவர் சில நாள்களிலேயே உயிரைத் துறந்தார்.
இதுபோல் அரசு மருத்துவமனைகளில் முதியோர்களைச் சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டு, அவர்களைக் கைகழுவி விடும் சம்பவங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அரசு மருத்துவமனையொன்றில் முதியவர் ஒருவரைச் சிலர் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் கொடுத்த முகவரியில் விசாரித்தபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்தது. வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அந்த முதியவரை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு விட்டுவிட்டார்கள். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த அந்த முதியவருக்கு தன்னார்வலர்கள் சிலர் உதவி செய்தனர். அவரது சட்டைக் காலரில் உள்ள டெய்லர் கடை முகவரியில் விசாரித்து அவரை அவரது உறவினர்களிடம் சேர்த்து வைக்க தன்னார்வலர்கள் படாதபாடு படவேண்டியிருந்தது. நோயுற்ற முதியவர்கள் பலரும் சுற்றுலாத் தலங்களிலும், ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் அனாதைகளாக விடப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. இச் சம்பவங்களால் ஒட்டுமொத்தமாக முதியோர்கள் புறக்கணிக்கப்படுவதாக அர்த்தம் கொள்ள முடியாது.
முதுமைப் பருவத்தில் பிள்ளைகளால் கவனிக்கப்படுவோம், பாதுகாக்கப்படுவோம் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும். அவ்வாறு முதியோருக்கு உணவளித்து கவனித்துக்கொள்ளாத பிள்ளைகளை எதிர்த்து பெற்றோர் வழக்கு தொடரவும் சட்டங்கள் இருக்கின்றன.
ஒருசில நீதிமன்றங்களில் இதுபோன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால் சட்டங்கள் மட்டும் மனித மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடாது. முதியோருக்காக பல்வேறு சலுகைகள், உதவி திட்டங்கள் பலவற்றையும் அரசும் செயல்படுத்துகிறது. ஆனாலும் ஆங்காங்கே முதியோர் அனாதைகளாகக் கைவிடப்படுவதும் தொடர்கிறது. முதுமையைப் போற்றுவதும், முதியவரைப் பாதுகாப்பதும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள்.
முதுமை ஒரு சுமையல்ல என்ற எண்ணம் முதியோருக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும். முதுமையைச் சுமையாகக் கருதாத பெற்றோர்களும், அவர்களுக்கு உணவளித்து பராமரிப்பதை சுமையாகக் கருதாத பிள்ளைகளும் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய நிலை உருவாகாத வரையில் அனாதைச் சடலங்களாக சுடுகாடுகளில் முதியோர் வீசப்படுவதும், அனாதைகளாகவே முதியோர் இல்லங்களில் அவர்கள் அடைக்கப்படுவதும் தொடரவே செய்யும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...