Jul 8, 2013

கனடாவில் விபத்து டேங்கர் ரயில் தடம்புரண்டு தீப்பற்றி வெடித்தது

லாக்,மெகன்டிக் : கனடாவில் எண்ணெய் டேங்கர் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்து வெடித்ததில் ஒருவர் இறந்தார். 80 பேரை காணவில்லை.
விபத்துக்குள்ளான ரயில் மான்ட்ரியல் மெய்ன் அண்டு அட்லாண்டிக் டிரெயின் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. டிரைவர் இல்லாத இந்த ரயிலில் 5 இன்ஜின்கள், 77 டேங்கர்கள் இருந்தன.

அமெரிக்காவின் வடக்கு டகோடா நகரிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த ரயில் கியூபெக் மாகாணத்தில் லாக்,மெகன்டிக் என்ற நகரில் வந்தபோது தடம் புரண்டு கவிழ்ந்தது. உடனே டேங்கர்கள் தீப்பிடித்து வெடித்தன. 6 டேங்கர்கள் பெரிய வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 80 பேரைக் காணவில்லை. அவர்கள் தீயில் கருகி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.



20 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மீட்புப் படையினரால் விபத்து நடந்த பகுதியை நெருங்க முடியவில்லை. 150 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இருந்த 2000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகை யில், ''விபத்து நடந்த பகுதியில் இருந்த மதுபானக் கூடம் தீயால் முற்றிலும் அழிந்து விட்டது. அதில் இருந்த 50 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை'' என்றார்.

கியூபெக் மாகாண செய்தித் தொடர்பாளர் மைகேல் புரூனேட் கூறியதாவது: ஒருவர் இறந்திருப்பது அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் இருக்கும் உறவினர்களின் வீடுகளை நெருங்க முடியவில்லை. அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை என்று மக்கள் புகார் கூறினர் என்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறினார்.



  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...