Aug 15, 2013

திட்டமிட்டு 'கொல்லப்படும்' ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்... காப்பாரா ஜெயலலிதா?




திட்டமிட்டு 'கொல்லப்படும்' ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்... காப்பாரா ஜெயலலிதா?ஊட்டி: அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே மாத சம்பளத்தையே வழங்காமல் இழுத்தடித்த நிர்வாகம், இப்போது கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசாங்கம் நினைத்தால் இப்போது கூட இந்தத் தொழிற்சாலையை இந்தியாவின் மிக லாபகரமான தொழிற்சாலையாக மாற்றிவிட முடியும்.
1960-ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைதான், தென்கிழக்கு ஆசியாவிலேயே பிலிம் சுருள்கள், எக்ஸ்ரே பிலிம்கள், மேக்னடிக் ஒலிநாடாக்கள், பாலியெஸ்டர் எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிக்கும் ஒரே ஆலை என்ற பெருமைக்குரியதாக உள்ளது இன்று வரை!
ஆனால் இந்த ஆலையில் கடந்த ஆறு மாத காலமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இயக்கு முதலீடு ரூ 70 கோடி தேவைப்படுவதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. ஆனால் ரூ 40 கோடி வரை மருத்துவத்துறை உற்பத்தி ஆர்டர் கிடைத்தும் உற்பத்தியை நிறுவனம் தொடங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பணியாளர்கள்.
இந்து என்ற பெயரில் வெளியான பிலிம் சுருள்கள் மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் உலகெங்கும் மிகப் பிரபலம். இந்திய திரைத்துறை ஒரு காலத்தில் இந்த தொழிற்சாலையை நம்பித்தான் இருந்தது. கச்சா பிலிம்களை மொத்தமாக இந்த நிறுவனமே திரைத்துறைக்கு வழங்கி வந்தது.
பிலிம் சுருள்கள், மேக்னடிக் சுருள்களின் தேவை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், எக்ஸ் ரே மற்றும் பாலியெஸ்டர் பிலிம் சுருள்கள் உலகம் முழுக்க ஏராளமாகத் தேவைப்படுகின்றன.
இந்த எண்பதுகளின் இறுதிவரை இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5000 பணியாளர்கள் இருந்தனர். ஊட்டியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த தொழிற்சாலையின் இன்றைய பணியாளர் எண்ணிக்கை 734.
இப்போதும் இவர்களை மட்டுமே அல்லது இன்னும் சில தொழிலாளர்களை புதிதாகச் சேர்த்துக் கொண்டு எக்ஸ்ரே மற்றும் பாலியெஸ்டர் எக்ஸ்ரே, குறைந்த அளலில் பிலிம் சுருள்களைத் தயாரித்தால் கூட ஆண்டுக்கு ரூ 400 முதஸல் 500 கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்க முடியும்.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு இதை இழுத்து மூடுவதே பிரதான நோக்கமாக இருந்தது, இருக்கிறது. 1996-ல் நலிந்த தொழிற்சாலையாக அறிவிக்கப்பட்ட எச்பிஎப்பை, 2003-லேயே நிரந்தரமாக மூட திட்டமிட்டனர். தமிழக கட்சிகளின் தொடர் போராட்டங்கற், தொழிலாளர் போராட்டங்கள், வழக்குகள் காரணமாக இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டுள்ளது.
இன்றைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டிருக்கும் ஆலை இது என்ற தோற்றத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்கள் ஆட்சியாளர்கள்.
திடீரென கடந்த ஆண்டு ரூ 302 கோடி திட்டத்தில் ஆலையை புதுப்பிக்கப் போவதாக அறிவித்தனர். அடுத்த சில வாரங்களுக்குள் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகக் கூறினர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 6 மாத சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம். இதைப் பெற்றுத் தரும் எந்த திட்டமும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இல்லையாம்.
இன்று, சுதந்திரத் திருநாளில், நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூட முதல் கட்டமாக, விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளனர். திட்டத்துக்கு பெயர் "Attractive VRS for HPF employees".
பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமில்லாமல், எல்லோருமே இந்த சீரழிவுக்குப் பொறுப்பு என்ற குற்றச்சாட்டு, இந்த நிறுவனத்தின் இந்நாள், முன்னாள் பணியாளர் மத்தியில் நிலவுகிறது.
இவர்களுக்கு இப்போதுள்ள ஒரே நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதா. நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை ரூ 500 கோடிக்கு வாங்கி, தனியார் ஆதிக்கம் வராமல் காத்தது போல, இந்த எச்பிஎப் ஆலையையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வழி வகுப்பார் என எதிர்ப்பார்க்கிறார்கள். நடக்குமா?

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...