Mar 15, 2014

பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள்


காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை  தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
 
அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் போலியான கடவுச் சீட்டில் பயணத்தை மேற்கொண்ட இரண்டாவது பயணியொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
மேற்படி மலேசிய எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 விமானமானது கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் கடந்த சனிக்கிழமை பயணத்தை மேற்கொண்ட வேளை  காணாமல் போனது.
களவாடப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இருவர் அந்த விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளமை சட்டத்தை மீறும் செயல் என கூறிய அதிகாரிகள் சட்டவிரோத குடியேற்றத்துக்காக போலி கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவது அந்தப் பிராந்தியத்தில் வழமையாகவுள்ளதாக தெரிவித்தனர்.
மலேசிய பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் அபூக்கா விபரிக்கையில், அந்த ஈரானிய இளைஞர் பயங்கரவாத குழுவொன்றின் உறுப்பினராக தோன்றவில்லை. அவரது தாய் ஜேர்மனியின் பிராங்போட் நகர விமான நிலையத்தில் அவரது வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்துள்ளார் என கூறினார்.
 
இந்நிலையில் கோலாலம்பூரிலுள்ள இளம் ஈரானிய இளைஞர் ஒருவர் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கையில்,  அந்த விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்த ஒருவரின் பாடசாலை நண்பன் தான் எனவும் அவரும் களவாடப்பட்ட கடவுச்சீட்டில் பயணித்த வேறொரு இளைஞரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தனது வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் குடியேறும் முகமாக  பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
 
அதே சமயம் தாய்லாந்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் மேற்படி இருவரும் பீஜிங் ஊடாக நெதர்லாந்து செல்வதற்கு தாய்லாந்து பயண முகவர் மற்றும் ஈரானிய முகவர் ஆகியோரின் உதவியுடன் பயணச்சீட்டுகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் காணாமல் போன விமானத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
 
 
பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில்
 
மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் கையடக்கத் தொலைபேசி  இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் உறவினர் தெரிவித்துள்ளனர்.
 
 
மலாக்கா நீரிணை அருகே மாயமான விமானம்
 
மாயமான மலேசிய விமானம்  மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா நீரிணை அருகே சென்றுள்ளமை ராடாரில் பதிவாகியுள்ளதாக மலேசிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...