May 31, 2012

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (1706 - 1790)


Benjamin Franklin வரலாற்றில் பல்வேறு துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய மேதை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (BenJamin Franklin) எனலாம். இவர் லியோனார்டோ டா வின்சிக்கு (Leonardo da Vinci) இணையாகப் பல்துறைப் புலமை வாய்ந்தவர் எனக் கூறலாம். ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பில்லாத நான்கு தனித்துறைகளில் - வாணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் இவர் பெரும் வெற்றி பெற்றது வியப்புகுரியது.
வாணிகத்தில் ஃபிராங்க்ளின் பெற்ற வெற்றியை ஆண்டியாக இருந்து அரசனாக உயர்ந்த சாதனைக்கு ஒப்பிடலாம். அமெரிக்காவில் இவர் பிறந்த ஊராகிய பாஸ்டனில் இவருடைய குடும்பம் அத்துணை வசதியுடையதாக இருக்க வில்லை. எட்டாம் வயதில் இவர் பள்ளியில்
சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்தார். அவருக்கு மேலே படிக்க வசதியில்லை எனவே தந்தையின்மெழுகுவர்த்திக் கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார் இவ்வேலை இவருக்கு பிடிக்க வில்லை. பின்னர் இவருடைய அண்ணன் கடையில் அச்சுத் தொழில் கற்று வந்தார். அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் கையில் ஒரு காசு கூட இல்லாமல் பிலடெல்பியாவுக்குச் சென்றார். அங்கு எவ்வாறோ பாடுபட்டு ஓர் அச்சுத் தொழிலைத் தொடங்கினார். படிப்படியாகப் பொருளீட்டி செய்தி இதழ் ஒன்றையும் நடத்தினார். தம் ஒழிந்த நேரங்களில் இவர் அறிவியலையும் கற்று வந்தார். அது மட்டுமின்றி நான்கு மொழிகளையும் தாமாகவே கற்றுத் தேர்ந்தார். பத்திரிகைகளுக்கும் ஏராளமாக எழுதி வந்தார்.
ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரம் குறித்தும், இடி மின்னல் பற்றியும் இவர் செய்த அடிப்படை ஆராய்ச்சி மிகப் புகழ் வாய்ந்ததாகும். இடி மின்னலின் போது காற்றாடியைப் பறக்கவிட்டு மின்னல் என்பது மின்விசையே என்று கண்டுபிடித்து விளக்கினார். இவை தவிர கணப்படுப்பு (Stove) வெள்ளெழுத்துக் கண்ணாடிகள் (Bifocal lenses) இடிதாங்கி (Lightningrod) போன்ற வேறுபல மிகப் பயனுள்ள சாதனங்களை கண்டுபிடித்தார். வெள்ளெழுத்துக் கண்ணாடியும், இடிதாங்கியும் இன்று கூடப் பெருமளவுக்குப் பயன்படுகின்றன.
ஃபிராங்க்ளின் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளர் என்ற முறையில் முதலில் எழுத்து முயற்சிகளைத் தொடங்கினார். விரைவிலேயே இவருக்கு எழுத்துலகில் புகழ் தேடி தந்த "ஏழை ரிச்சர்டு பஞ்சாங்கம்" (Poor Richards Almanc) என்ற இதழை இவர் தொடங்கினார். இதன் மூலம், இவர் பல புதுமையான சொற்றொடர்களைப் புனையும் தமது திறனை வெளிப்படுத்தினார். இவர் எழுதிய ஏராளமான பொன்மொழிகள் இன்றும் மேற்கோள் காட்டப்படுகின்றன. இவர் தம் ஆயுளின் பிந்திய ஆண்டுகளில், தம் சுயசரிதையையும் எழுதினார். இது ஆங்கில மொழியிலுள்ள தலைசிறந்த சுய சரிதைகளில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. இச்சுயசரிதை இன்றும் பெருமளவுக்குப் படிக்கப்படுகின்றது
அரசியலில் ஃபிராங்க்ளின் ஒரு வெற்றிகரமான ஆட்சியாளராக (Administrator) விளங்கினார். (இவர் குடியேற்றங்களின் (Colonies) அஞ்சல்துறைத் தலைவராக (Postmaster General) பணியாற்றினார். இவருடைய நிருவாகத்தில் அஞ்சல் துறை ஆதாயம் ஈட்டத் தொடங்கியது. சட்டம் இயற்றுபவர் (Legistator) என்ற முறையில் இவர் பென்சில்வேனியா மாநிலச் சட்டமன்றத்திற்குப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிறந்த அரசியல் வித்தகராவும் (Diplomat) விளங்கினார். (அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கடியான காலத்தில் இவர் ஃபிரான்சின் தூதராக மிகவும் வெற்றிகரமாகவும், செல்வாக்குடனும் பணியாற்றினர். ஃபிரான்ஸ் நாட்டுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ள இவர் காரணமாக இருந்தார்) அத்துடன் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தைத் தயார் செய்து, கையெழுத்திட்டவர்களில் ஃபிராங்க்ளின் ஒருவர். பின்னர் அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் (Constituutional Convention) ஒரே உறுப்பினராகக் கலந்து கொண்டு அமெரிக்க அரசமைப்பை (Constitution) வகுப்பதற்கும் பெரிதும் துணை புரிந்தார்.
வாணிகம், அரசியல், அறிவியல், இலக்கியம் ஆகிய நான்கு துறைகளையும் கடந்து ஐந்தாவதாகவும் ஒரு முறையில் ஃபிராங்க்ளின் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதுதான் பொது மக்களுக்குத் தொண்டு புரியும் சமூக நற்பணித் துறையாகும். எடுத்துக்காட்டாக, பிலடெல்பியாவில் முதலாவது மருத்துவமனையைத் தோற்றுவித்த நிறுவனங்களில் ஃபிராங்க்ளினும் ஒருவராவார். குடியேற்றங்களின் முதலாவது தீயணைப்பு நிறுவனத்தை அமைத்தவரும் இவர்தான். நகராட்சிக் காவல்துறை அமைக்கப் பெற்றதற்கும் இவரே மூலகாரணமாக விளங்கினார். குடியேற்றங்களில் முதலாவது சுழல் நூலகத்தை (Circulating Library) ஏற்படுத்தியவரும் இவரே. முதலாவது அறிவியல் கழகத்தையும் (Scientific Socieity) இவரே நிறுவினார்.
நம் அனைவரையும் போலவே ஃபிராங்க்ளினுக்கும் பெருந்தொல்லைகளும், பெருத்த ஏமாற்றங்களும் ஏற்பட்டன. எனினும், வரலாற்றில் மிகவும் பயனுள்ள முறையில் செலவழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவருடைய வாழ்க்கையைத் தயக்கமின்றி கூறலாம். இவர் 84 ஆண்டுகள் வரை சிதைந்த உடல் நலத்துடன் வாழ்ந்தார். மொத்தத்தில் ஃபிராங்க்ளின் தம் பூவுலக வாழ்வுப் பயணத்தை நீண்டகாலம் பயனுள்ள முறையில், பல்வேறு துறைகளில் மிகவும் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டிருந்தார் எனலாம்.
மேற்சொன்ன காரணங்களுக்காக ஃபிராங்க்ளினை இந் நூலின் மூலப்பகுதியிலேயே சேர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டது இயற்கையே. ஆனால் வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதர்களில் ஒருவராக இவரைக் கருதுவதற்கு இவருடைய பணிகளில் எதுவும் போதிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை. இவருடைய சாதனைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால்கூட, இவர் அத்தகுதியைப் பெறவில்லை என்பதே என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...