May 31, 2012

புனித அகஸ்டைன் (354-430)


Augustine of Hippo ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்று வந்த ஆண்டுகளில் வாழ்ந்த அகஸ்டைன், தம் காலத்தில் தலைசிறந்த இறைமையியலறிஞராக விளங்கியவர். இவருடைய எழுத்துகள் மத்திய காலம் முழுவதிலும் கிறிஸ்துவக் கோட்பாடுகளிலும், மனப்பான்மைகளிலும் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தின. இன்றுங்கூட இவரது கொள்கைகள் செல்வாக்குடன் திகழ்கின்றன.
இன்றைய அல்ஜீரியாவின் கௌ-அக்ராஸ் என்று அழைக்கப்படும் அன்றைய டாகஸ்டே நகரில் 354 ஆம் ஆண்டில் அகஸ்டைன்
பிறந்தார். இன்று அன்னாபா என்று அழைக்கப்படும் ஹிப்போ என்ற கடற்கரையோர நகரிலிருந்து இந்நகரம் சுமார் 45 மைல் தொலைவிலுள்ளது. இவருடைய தந்தை புறச் சமயத்தைச் சேர்ந்தவர். ஆனால், இவருடைய தாய், கிறிஸ்துவச் சமயப் பற்றுள்ளவர். குழந்தைப் பருவத்தில் அகஸ்டைனுக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை.
அகஸ்டைன் தமது குமாரப் பருவத்திலேயே அபார அறிவுத் திறனை வெளிப்படுத்தினார். அவர் தம் 16 ஆம் வயதில் கல்வி பயிலக் கார்த்தேஜூக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஓர் ஆசை நாயகி வைத்துக் கொண்டு அவர் மூலம் ஒரு குழந்தையும் பெற்றார். அவர் தம் 19 ஆம் வயதில் தத்துவம் கற்க முடிவு செய்தார். அவர் விரைவிலேயே, மானி என்ற தீர்க்கதரிசி 240 ஆம் ஆண்டில் நிறுவிய "மானிக்கேயிஸம்" (இறைவனும் நரசிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்பது இந்தச் சமயத்தின் கோட்பாடாகும்) என்ற சமயத்தில் சேர்ந்தார். மானிக்கேயிஸம் சமயம் பகுத்தறிவுக்கு உகந்த சமயம் என அகஸ்டைன் கருதினார். கிறிஸ்துவ சமயம் பக்குவப்படாதது என அவர் எண்ணினார். ஆனால் அடுத்த ஒன்பது ஆண்டுகளில் அவர் படிப்படியாக மானிக்கேயிஸ சமயத்திடம் கொண்ட மயக்கத்திலிருந்து தெளிவுப் பெற்றார். அகஸ்டைன் தம் 29 ஆம் வயதில் ரோம் நகருக்குச் சென்றார். சிறிது காலத்திற்குப் பிறகு வட இத்தாலியிலுள்ள மிலான் நகரில் குடியேறினார். அங்கு அவர் சொல்லணிக் கலையில் ஒரு பேராசிரியரனார். அங்குதான் பிளேட்டோ கருத்துகளும், கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாட்டினை அவர் அறிந்து கொண்டார்.
அந்நாளில் மிலான் நகரில் புனித அம்புரோஸ் என்பவர் மேற்றிராணியாக இருந்தார். அவருடைய சமயச் சொற்பொழிவுகளை அகஸ்டைன் கேட்டார். அந்தச் சொற்பொழிவுகள் அகஸ்டைனுக்குக் கிறிஸ்துவச் சமயத்தின் புதிய நுட்பமான அம்சங்களை உணர்த்தின. அவர் தம் 32 ஆம் வயதில் கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவினார். ஒரு காலத்தில் கிறிஸ்துவச் சமயத்தைக் கடுமையாக வெறுத்த அகஸ்டைன், இப்பொழுது அதே சமயத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். 337 ஆம் ஆண்டில் அகஸ்டைனுக்கு அம்புரோஸ் ஞானஸ்நானம் செய்து வைத்தார். அதன் பின் விரைவிலேயே அவர் தம் சொந்த ஊரான டாகஸ்டேசுக்குத் திரும்பினார்.
391 ஆம் ஆண்டில் அகஸ்டைன், ஹிப்போ நகர மேற்றிராணியாருக்கு உதவியாளரானார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்றிராணியார் காலமானதும், அப்போது 42 வயதை எட்டியிருந்த அகஸ்டைன், ஹிப்போ நகரின் புதிய மேற்றிராணியானார். அப்பதவியைத் தம் ஆயுள் இறுதி வரை வகித்தார்.
ஹிப்போ ஒரு முக்கிய நகராக இருக்கவில்லை. எனினும், அகஸ்டைனின் பெருந்திறமை காரணமாக அவர் திருச்சபையில் மிகவும் மதிப்புக்குகரிய தலைவர்களுள் ஒருவரானார். அவர் மிகவும் நலிந்த உடல் நிலை கொண்டவராக இருந்தபோதிலும், சுருக்கெழுத்தாளர்களை வைத்துக் கொண்டு ஏராளமான சமய நூல்களை எழுதினார். அவருடைய 500-க்கும் மேற்பட்ட சமய விளக்கப் பேருரைகள் இன்றும் உள்ளன. அவர் எழுதிய 200-க்கும் மேற்பட்ட கடிதங்களும் கிடைத்துள்ளன. அவருடைய நூல்களில் "இறைவனின் நகரம்" "பாவ ஒப்புதல்" ஆகிய இரண்டும் மிக்கப் புகழும், செல்வாக்கும் பெற்றனவாகும். "பாவ ஒப்புதல்கள்" என்ற நூலை இவர் தம் 40 ஆம் ஆண்டுகளில் எழுதினார். இது மிகச் சிறந்த சுயசரிதைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
அகஸ்டைனின் பெரும்பாலான கடிதங்களும், சமய விளக்கப் பேருரைகளும், மானிக்கேயிஸ சமயத்தவர், டோனாட்டிஸ்கள் என்ற கிறிஸ்துவத் திருச்சபை உட்பிரிவினர், தொன்மை தீவினை இல்லை என்னும் கோட்பாட்டைக் கூறிய பிலாஜியஸ் என்ற துறவியின் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் ஆகியோரின் கொள்கைகளை மறுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன. பிலாஜியஸ் கோட்பாட்டை மறுத்துரைப்பது அகஸ்டைனின் சமயக் கோட்பாடுகளின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்குகிறது. பிலாஜியஸ் 400 ஆம் ஆண்டில் ரோமாபுரிக்குக வந்த ஓர் ஆங்கிலேயச் சமய குரு. அங்கு அவர் கருத்தைக் கவரக் கூடிய சில இறைமையியல் கோட்பாடுகளைக் கூறினார். "நமக்குத் தொன்மைத் தீவினை என்று ஏதுமில்லை. நன்மையை அல்லது தீமையை தேர்ந்தெடுத்துக் கொள்ள நமக்குச் சுதந்திரம் உண்டு. நன்னெறியில் வாழ்ந்து, நற்செயல்களைப் புரிவதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனும் வீடுபேறு அடையலாம்" என்று பிலாஜியஸ் வலியுறுத்தினார்.
பிலாஜியசின் கருத்துகளைக் கடுமையாகத் தாக்கிப் புனித அகஸ்டைன் எழுதினார். ஓரளவுக்கு அவருடைய கண்டனங்களின் விளைவாகப் பிலாஜியசின் கொள்கைகள் திருச்சபைக்கு விரோதமானவை என அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்த பிலாஜியஸ், சமயத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அகஸ்டைனின் கொள்கைப்படி, "ஆதி மனிதன் ஆதாம் செய்த பாவத்தின் கறை ஒவ்வொரு மனிதனின் மீதும் படிந்திருக்கிறது. மனிதர்கள் தங்கள் சொந்த முயற்சிகளினாலும், நற்செயல்களினாலும் மட்டும் வீடுபேறு அடைந்திட இயலாது. வீடுபேறடைவதற்கு இறைவனின் அருள்பாலிப்பும் தேவை" இது போன்ற கொள்கைகள் முன்னரே கூறப்பட்டிருந்தன. எனினும், அந்த முந்தையக் கூற்றுகளை அகஸ்டைன் விரிவாக விளக்கியுரைத்தார். இந்தக் கொள்கைகள் குறித்த திருச்சபையின் நிலைக்கு இவருடைய எழுத்துகள் செறிவூட்டின. அதன் பின்பு திருச்சபையின் கோட்பாடு நிலைபேறுடையதாகியது.
"நம்மில் யார் யாருக்கு மீட்பு அளிக்கப்படும், யார் யாருக்கு மீட்பு அளிக்கப்படமாட்டாது என்பதை இறைவன் ஏற்கனவே அறிந்திருக்கிறார். எனவே, வீடு பேற்றிற்கும், இறவா வாழ்விற்கும் என கடவுளால் நம்மில் சிலர் முன்னுறுதி செய்யப்பட்டுள்னர்" என்று அகஸ்டைன் உறுதியாகக் கூறினார். இந்த முன்னுறுதிக் கோட்பாடு, புனித தாமஸ் அக்குவினாஸ், ஜான் கால்வின் போன்ற பிற்கால இறைமையியலறிஞர்கள் மீது பெருஞ்செல்வாக்குப் பெற்றது.
முன்னுறுதிக் கோட்பாட்டைவிட முக்கியத்துவம் வாய்ந்தது பாலுணர்வு பற்றிய அகஸ்டைனின் கொள்கையாகும். அவர் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவியதும், தாம் பாலுணர்வைத் துறந்துவிட வேண்டியது அவசியம் என முடிவு செய்தார். ("உடலுறவைப் போல் அறவே விட்டொழிக்க வேண்டியது வேறொன்றுமில்லை") என்று அவர் ஒருமுறை எழுதியுள்ளார். ஆனால், பாலுணர்வை அறவே ஒழிப்பது நடைமுறையில் புனித அகஸ்டைனுக்கே மிகக் கடினமாக இருந்தது. இது தொடர்பான தமது மனப்போராட்டத்தையும், கருத்துகளையும் அவர் தம் "பாவ ஒப்புதல்கள்" என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ள கருத்துகள் அவருடைய பெரும் புகழ் காரணமாக, பாலுணர்வு பற்றிய மத்திய காலத்து மனப்பான்மைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. பழம் பாவத்தையும் பாலுணர்ச்சி வேகத்தையும் தொடர்புபடுத்திக்கூட அகஸ்டைன் எழுதியுள்ளார்.
அகஸ்டைன் வாழ்நாளில் ரோமானியப் பேரரசு விரைவாக வீழ்ச்சியடைந்து வந்தது. உண்மையில் 410 ஆம் ஆண்டில், அலாரிக் என்பவரின் தலைமையில் படையெடுத்து வந்த விசிகோத்துகளின் படைகள் ரோம் நகரைச் சூறையாடிச் சென்றனர். இது, கிறிஸ்துவத்தை ஆதரித்து, பண்டைய கடவுளர்களைக் கை விட்டமைக்காக, ரோமானியர்களுக்கு ஆண்டவன் அளித்த தண்டனை என்று ரோம் நகரில் அஞ்சியிருந்த புறச் சமயவாதிகள் கூறினர். கிறித்துவச் சமயத்தின் மீது சாட்டப்பட்ட இந்தக் குற்றச் சாட்டுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே "இறைவனின் நகரம்" என்ற தமது புகழ்பெற்ற நூலை அகஸ்டைன் எழுதினார். இந்த நூலில் வரலாறு பற்றிய ஒரு முழுமையான தத்துவமும் அடங்கியிருக்கிறது. இந்தத் தத்துவம் ஐரோப்பாவின் பிற்கால நிகழ்வுகளில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியது. இந்நூலில் ரோமானியப் பேரரசோ, ரோம் நகரமோ, வேறெந்த பூவுலக நகரமோ அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் வாய்ந்தது அல்ல என்ற கருத்தை அவர் கூறியிருந்தார். ஒரு "விண்ணுலகக நகரம்" உருவாவது தான் முக்கியமானது. அதாவது, மனித குலத்தின் ஆன்மிக வளர்ச்சிதான் முக்கியமானது. இந்த முன்னேற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் ஊர்தி திருச்சபை ஆகும். ("திருச்சபை இன்றி வீடுபேறு இல்லை"). எனவே பேரரசர்கள் அவர்கள் புறச் சமயத்தவராயினும், கிறிஸ்துவராயினும், அயல் நாட்டவராயினும் போப்பாண்டவரைப் போன்றோர் திருச்சபையைப் போன்று, முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்லர்.
இதிலிருந்து பூவுலக அரசர்க போப்பாண்டவருக்கு அடி பணிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த முடிவை அகஸ்டைன் தாமே கூறவில்லை. ஆனால் அவரது வாதங்கள் இந்த முடிவுக் நம்மை எளிதாக இட்டுச் செல்கின்றன. அகஸ்டைனின் வாதங்களிலிருந்து அந்த முடிவுக்கு வருவதில் மத்திய காலப் போப்பாண்டவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டார்கள். திருச்சபைக்கும் அரசுக்குமிடையே நீண்டகாலப் பூசலுக்கு வழிவகுத்தன. இந்தப் பூசல்கள் ஐரோப்பிய வரலாற்றில் பல நூற்றாண்டுகள் நீடித்தன.
கிரேக்கத் தத்துவத்தின் சில அம்சங்கள், மத்திய காலத்து ஐரோப்பாவுக்குப் பரவுவதற்கு அகஸ்டைனின் எழுத்துகள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. முக்கியமாக, புதிய பிளேட்டோனியக் கலவைக் கோட்பாடு அகஸ்டைனின் முதிர்ந்த சிந்தனையை வெகுவாகக் கவர்ந்தது. அகஸ்டைன் வாயிலாக, அந்தக் கோட்பாடு மத்திய காலத்துக் கிறிஸ்துவச் சமயத் தத்துவத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. "ஆகவே, நான் நானாக இருப்பதாகக் கருதுகிறேன்" என்ற டேக்கார்டேயின் புகழ்பெற்ற கூற்றின் பின்னணியாக அகஸ்டைன் தமது கொள்கையைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவர் வேறு சொற்களில் இயம்பினார்.
ஐரோப்பாவில் அறிவு விளக்கம் குன்றியிருந்த கி.பி. 395-க்கும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முடிவுக்குகம் இடைப்பட்ட "இருண்ட காலம்" தொடங்குவதற்கு முன்பிருந்த கடைசித் தலைசிறந்த கிறிஸ்துவ இறைமையியலறிஞர் அகஸ்டைன் ஆவார். அவர் திருச்சபைக்கு விட்டுச் சென்ற கோட்பாடுதான் ஏறத்தாழ மத்திய காலம் முழுவதிலும் தொடர்ந்து நீடித்தது. லத்தீன் திருச்சபைத் தந்தையர்களில் உயர்தனிச் சிறப்புடையவராக விளங்கியவர் அகஸ்டைன் ஆவார். அவருடைய எழுத்துகளை திருச்சபைக் குருமார்கள் விரிவாகப் படித்தார்கள். வீடுபேறு, பாலுணர்வு, பழம் பாவம் ஆகியவை குறிதது அவர் தெரிவித்த கருத்துகளும் இதற்கு நிகரான செல்வாக்கைப் பெற்றன. புனித தாமஸ் அக்குவினாஸ் போன்ற பிற்காலக் கத்தோலிக்க இறைமையியலறிஞர்கள் பலரும், லூதர், கால்வின் போன்ற புரோட்டஸ்டன்டுத் தலைவர்களும் அகஸ்டைனின் செல்வாக்குக்கு வெகுவாக ஆட்பட்டனர்.
அகஸ்டைன் கி.பி. 430-ஆம் ஆண்டில் தமது 76 ஆம் வயதில் காலமானார். சிதைந்து வந்த ரோமப் பேரரசு மீது படையெடுத்து அழித்த "வண்டல்கள்" என்ற முரட்டு ஜெர்மானிய இனத்தவர் அப்போது ஹிப்போ நகரை முற்றுகையிட்டிருந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அந்த நகரைக் கைப்பற்றி அதன் பெரும்பகுதியை எரியூட்டி அழித்தனர். ஆயினும், அகஸ்டைனின் நூலகமும், அவர் பணியாற்றிய தேவாலயமும் அழியாமல் தப்பின.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...