May 20, 2012

புழுங்கலரிசி அன்னம், பச்சரிசி அன்னம் ,நெய் சாதம்

புழுங்கலரிசி அன்னம்பச்சரிசி அன்னம்நெய் சாதம்
அற்ப சுடுகை அன்னம்:
  • சிறிது சூடு உள்ள அன்னமானது நல்லதாகும். இது வாத பித்த கபங்களையும், அரோகசகத்தையும் நீக்கும். உடலுக்கு வன்மையை தரும். அதிக சளியினால் விளையும் நோயையும் குறைக்கும்.
புழுங்கலரிசி அன்னம்:
  • புழுங்கல் அரிசி அன்னத்தை சாப்பிட்டால் வாத கோபமும், பலமும், வலி ரோகங்களும் நீங்கும். இது நோயாளிக்கு உதவும்.
பச்சரிசி அன்னம்:
  • பச்சரிசி சாதமானது பலத்தையும், குழந்தைகளுக்கு மாந்தத்தையும் உண்டாக்கும். பித்த கோபத்தையும், கிரிச்சரத்தையும் நீக்கும். இதில் வாயு உள்ளது என்பர்.
நன்றாக சமைக்காத அன்னம்:
  • நட்டரிசி சாதத்தை சாப்பிட்டால் மலசலம்  சிக்குவது தவிர, மறுநாளும் சீரணம் ஆகாது. அந்த அன்ன ரசம் உடலில் பரவாது.
குழைந்த அன்னம்:
  • அளிந்த அன்னத்தை உண்டால் வாத பிரமேகம், இருமல், அக்கினி மந்தம், பலவீனம், பீனிசம் ஆகியவை உண்டாகும்.
சுத்த அன்னம்:
  • சுத்த அன்னத்தை நல்ல காய்கறிகளோடு சேர்த்து சாப்பிட்டால் வாத பித்த சிலேஷ்மம் என்னும் மூன்று வித நோய்களுக்கும் முக்கியமாக உதவும். பத்தியத்திற்கும், வாதாதி மூவித ரோகங்களுக்கும் ஆகும். அதி தவிர குடல் நோய்கள் முழுமையும் விலகும்.
குறிப்பு:
  • சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை தவிடு, நொய் நீங்கும் படி நன்றாக தீட்டி , முழு அரிசியாக புடைத்து எடுத்து இள வெந்நீரால் கழுவி துணியில் கொட்டி சிறிது ஆற வைத்து ஒரு பாண்டத்தில் அரிசிக்கு மூன்று பங்கு நீர் விட்டு அடுப்பில் ஏற்றி அது நுரைகட்டி கொதிக்கும் போது அரிசியை அதில் போட்டு முக்கால் பாகமாக வெந்தவுடன் கரண்டியால் துழாவி வடித்து கொண்டு மறுபடியும் தணலில் வைத்து பக்குவப்படுத்தி இறக்கி கொள்வதாகும்.
பொங்கல் சாதம்:
  • பச்சரிசி பொங்கல் சாதம் சகல அலசரோக வயிற்றுப்பிசம், அங்கலக வாதம், வெப்பம் ஆகியவற்றை உண்டாக்கும். சம்பா பச்சரிசி பொங்கல் சாதம் விந்துவை வளர்க்கும்.
பாலும் சாதமும்:
  • பாலுஞ்சோறும் உண்டால் பித்த கோபமும், தாகமும் விலகும். கொஞ்சம் மந்தம், உடல் வலிமை, வீரிய விருத்தி உண்டாகும்.
பசும்பால் பத்தியம்:
  • பசும்பாலை சாப்பிட வேண்டுமானால் புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு என்னும் ஆறுசுவையில் முதலாவதும் இரண்டாவதுமாகிய நான்கு சுவையுள்ள பொருள்கள் எதனையும் அனுபானமாக சேர்த்து கொண்டு உண்ணலாகாது. சுக்கிலத்தை விருத்தி செய்யும் படியாக கடைசியில் சொல்லிய இரண்டு சுவையுள்ள பொருள்களை அனுபானமாக சேர்த்து கொண்டு உண்ணும் படி மருத்துவர் கூறிவர்.
குறிப்பு:
  • பாலை தனியே அருந்த வேண்டில் அதற்கு அனுபானம் கற்கண்டு பொருந்தும், எட்டு வகை குற்றங்கள் நீங்கிய அன்னத்துடன் உண்ண்ட வேண்டில் மதுரமுள்ள பழம் அனுபானமாக பொருந்தும். ஆதலால் இவ்வாறு முறைப்படி உண்ண வேண்டும்.
நெய் சாதம்:
  • நெய்யும் சாதமும் கலந்து சாப்பிட்டால் வன்மை, விழிக்குளிர்ச்சி, சீரணம் ஆகியவை உண்டாகும். பித்த விகாரம் விலகும். இது பத்திய உணவாகும். இந்த கிருத உணவு சிகிச்சை வயதானவர்களுக்கே முக்கியமாகும்.
மாமிசம் சேர்த்து சமைத்த அன்னம்:
  • மாமிசம் சேர்த்து சமைத்த அன்னத்தை சாப்பிட்டால் மிகு பலமும், விர்த்தி, மேதோதாதுவும், அதிக மந்தமும் உண்டாகும். இரத்தம் சாந்தம் ஆகும்.
அன்னத்தின் எட்டு வகை தோஷங்கள்:
அன்னத்திற்கு எப்பொழுதும் குற்றமே இல்லையானாலும் பாக பேதங்களினால் எட்டு வகை தோஷங்கள் உண்டாகின்றன்.
  • அசனத்தோஷம் என்பது கஞ்சி சிக்கி கொள்வதாகும்.
  • பிச்சில் தோஷம் என்பது அதாவது அன்னம் குழைந்து போவதாம். இதனால் ஜடராக்கினி அணைந்து விடும்.
  • அசுச தோஷம், அதாவது மயிர் கிருமி, உமி முதலியவைகளோடு சமைப்பதாகும். இதனால் அரோக ரோகம் உண்டாகும்.
  • கொதித்தோஷம், அதாவது நருக்கரிசி அன்னம். இதனால் அசைரோகம் உண்டாகும்.
  • சுஷ்கில தோஷம், அதாவது ஆறி உலர்ந்த அன்னம் ஆகும். இதனால் விதூமரோகம் உண்டாகும்.
  • தத்ததோஷம், அதாவது காந்தின அன்னம், இதனால் ரணரோகம் உண்டாகும்.
  • விருப தோஷம், அதாவது கொழியலரிசி அன்னம். இதனால் ஆயுல் முதலானவை கெடும்.
  • அனர்த்துஜ ரோகம். அதாவது நொந்து ஜலம் பிறந்து நூல் இழந்த அன்னம். இதனால் அதிக நித்திரையும், சீதாதி தோஷங்களும் உண்டாகும்.
அதிக சுடுகை அன்னம்:
  • தினமும் சாப்பிடக்கூடிய அதிக சூடுள்ள அன்னமானது உதிரபித்தம், தாக பிரமை, மதரோகம் ஆகியவற்றை உண்டாக்கும்.
தயிரும் உப்பும்:
  • உணவின் இறுதியில் புளித்த தயிரும், உப்பும் சேர்த்து சாப்பிட்டால் தயிருக்கும், நெய்க்கும் நடுவாக தீனிப்பையில் இறங்கியுள்ள சகல பதார்த்தங்களும் உள்ள உணவில் திரி தோஷங்களையும் நீக்குவதோடு அந்த உணவு புழுக்கங் கொண்டு நெருக்கமுற்று சீரணமாகும்.
மோர் சாதம்:
  • மோரும், சாதமும் கலந்து சாப்பிட்டால் ஜடராக்கினி அதிகரிப்பதோடு பித்தம், மேக மூத்திரம், முளை மூலம், பாண்டு, தாகம் கிரகணி,  சிலேஷ்ம சோபை ஆகியவை நீங்கும். ரணங்களுக்கு ஆகாது.
உணவுக்கு பின் வெந்நீர் அருந்துதல்:
  • உணவு உண்ட பின் வெந்நீரை ஒரு தரம் அருந்தினால் ரூட்சை, வாதாதிக்கம், விதாகம், அசலம், வயிற்றுப்பிசம் ஆகியவை குறையும். ஆயுளும் சுக்கிலமும் விருத்தியாகும்.
இவை அனைத்தும் அன்ன வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு சரியான முறையில் அன்னத்தை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...