May 9, 2012

பத்தியத்தின் பெருமை!


பத்தியத்தின் பெருமை!
ஒரு நோய் நீங்குவதற்கு, சீரான சூழ்நிலையில், உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போது, அந்த நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் செயல்களில் கொண்டுவரும் மாற்றத்தால், மருந்து தன் சக்தியைச் சரியாகக் காட்டி, நோயிலிருந்து விரைவில் நம்மைவிடுவிக்கிறது. பத்திய முறைகளைக் கையாளாமல்,
மருந்தை மட்டும் சாப்பிட்டால், அதை அதிக அளவில் அதிக நாட்கள் சாப்பிட வேண்டிய கட்டாயநிலை ஏற்படுகிறது. சில சமயம் மருந்தினால் ஏற்பட வேண்டிய நல்ல பலன்களும் கிடைக்காமற் போகக் கூடும். சுருக்கமாகச் சொன்னால் மருந்தின் முழு வீரியத்தையும் உடல் ஏற்பதற்குப் பத்தியம் உதவுகிறது. மேலும் மருந்தின் குணம் முழுவதையும் உடல் ஏற்று, நோயை அகற்ற வழி செய்கிறது.

நம் முன்னோர் நோய் வந்துவிட்டால் உணவு, உடை, பாவனைகளில் அதற்கு எதிரான மாற்றங்களைச் செய்து, மருந்தை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட்டனர். இயற்கையை மதித்து அவர்கள் செயல்பட்டதால், மருந்துகளால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை அப்படியில்லை. "நான் காபி, டீ சூடாகத்தான் அருந்துவேன். காரம், புளி, உப்புதான் அதிகம் சாப்பிடுவேன். என் ஆபிஸ் சூழ்நிலை அப்படி. ஆனால் என் குடல்
அல்சர் நோயை நீக்கித் தாருங்கள்' என்று கூறி மருத்துவனின் கடமையைப் பெரிதாக்குகின்றனர். ஆயுர்வேதம் இந்த விஷயத்தை, நோயுற்றவன் பத்தியமிருந்தால் மருந்தால் ஆவதென்ன? நோயுற்றவன் பத்தியமில்லாதிருந்தால் மருந்தால் ஆவதென்ன? என்று கேட்கிறது. அதாவது பத்தியமிருந்தால் மருந்தின் தேவையே இல்லாமல் இயற்கையே தன்னைச் சீரமைத்துக் கொள்ளும். பத்தியம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டு, நோய்க்கான மருந்தைத் தேடினால், உடல் நோயிலிருந்து விடுபடும் சூழ்நிலை ஏற்படாது. மருந்து எத்தனை சாப்பிட்டாலும் பயன் தராததால், மருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையே மருந்தால் ஆவதென்ன? என்று வினவுகிறது.

நோயுற்றவன் இன்ன இன்ன உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறி அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதால் உணவுக் குழாய், உணவை ஏந்திச் செல்லும் ரசாயனங்கள், ரத்தக் குழாய்கள் முதலியவை சரியாக இயங்க உதவி அவற்றுக்குக் கேடு விளைவிக்காதவண்ணம் பாதுகாப்பதே பத்தியம் எனப்படுகிறது. அதற்கு மாறுபட்டது அபத்தியம். பத்திய உணவைச் சாப்பிடுவதால் உடல், தான் இழந்த சமநிலையை அடைந்து, அதேநிலையில் நிலைத்து, சமநிலை இழக்காது திடப்படுத்திவிடுகிறது.

ஒரு சிறு உதாரணத்தினால் பத்தியத்தின் பெருமையை விளக்கலாம். பிசுபிசுப்புடன் நீர் வெளியேறி, எரிச்சலும் அரிப்பும் சேர்ந்து ஓர் உபாதையை தோலில் ஒருவருக்கு ஏற்படுத்தினால், அதைக் குணப்படுத்த ஆயுர்வேத க ஷாய மருந்தாகிய படோல கடு ரோஹிண்யாதி, நல்ல மருந்தாகும். ஆனால் அதே நபர், கெட்டியான புளித்த தயிர் சாதத்தை நல்லெண்ணெயில் கடுகு தாளித்துச் சாப்பிட்டால், நோய் குணமாவதில்லை. அதற்குக் காரணம் புளித்த தயிர், குடலில் பிசுபிசுப்பை அதிகரித்து, தோலின் வழியாக வெளியேற்றுவதால், க ஷாயத்திற்கும் தயிருக்கும் மட்டுமே சண்டை நடக்குமே தவிர, க ஷாயத்திற்கும் நோய்க்கும் நடப்பதில்லை. புளித்த தயிரின் மேலுள்ள ஆடையை அகற்றி, அதில் அரைப் பங்கு தண்ணீர் சேர்த்து, மத்து வைத்துக் கடைந்து, வெண்ணெய் அகற்றி, அந்த வறண்ட மோரை அவர் உணவாக ஏற்றால், உட்புறக் குழாய்களின் பிசுபிசுப்பை அகற்றி, வறளச் செய்கிறது. இங்கு க ஷாய மருந்தின் வீர்யம் விரைவாக உட்புறக் குழாய்களின் வழியாக,தோலில் சேர்க்கப்பட்டு நோயை எளிதாகக் குணப்படுத்திவிடும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...