Aug 19, 2012

சீன மாணவி உலக அழகியாக தேர்வு!


சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி 2012ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இறுதிச்சுற்றில் இடம் பிடித்த இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.  இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார்.


கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.



சீனாவை சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு பெறுவது இது இரண்டாவது முறை. உலக அழகியாக முடிசூட்டப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வருங்காலத்தில் இசை ஆசிரியையாக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.


வேல்ஸ்சின் ஷோபி மோல்ட்ஸ் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெஸிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்தது. கடந்த 2000-வது ஆண்டில் இந்திய அழகி பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றார். அதன்பின் இதுவரை இந்திய அழகிகள் யாரும் இந்த பட்டம் வெல்லவில்லை.


இந்நிலையில், நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய அழகி வான்யா மிஸ்ரா உலக அழகி பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் அவருக்கு 7-வது இடம்தான் கிடைத்தது.


என்றாலும் வான்யா மிஸ்ராவுக்கு, `மிஸ் சோசியல் மீடியா', `பிட்டி வித் எ பர்பஸ்' ஆகிய இரு பட்டங்கள் வழங்கப்பட்டன.


அரை இறுதிப்போட்டியின்போது 1981-ம் ஆண்டு வெளியான "உம்ரோ ஜான்'' என்ற இந்திப்படத்தில் இடம் பெற்றிருந்த `தில் சீஸ் கியா ஹை' என்ற பாடலுக்கு வான்யா ஆடிய நடனம் மூலம், சிறந்த 7 அழகிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.


இறுதிப்போட்டியில் பங்கேற்ற அழகிகளிடம் "உலக அழகி பட்டத்துக்கு தாங்கள் எந்த விதத்தில் தகுதியானவர்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கனிவான இதயமும் அடக்கமும் நிறைந்த ஒருவர் அடுத்த உலக அழகியாக இருக்கவேண்டும். அவர் எங்கு சென்றாலும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களில் ஒருவராக அவரை கருத வேண்டும்'' என்று இந்திய அழகி வான்யா பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...