Oct 29, 2012

வீடுகளில் முடங்கினர் மக்கள் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை கட்டிப்போட்ட சாண்டி புயல்


நியுயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்குவதற்கு சாண்டி புயல் வந்து கொண்டிருப்பதால், அப்பகுதியில் உள்ள மாகாணங்களில் பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் சுழற்றி அடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை பதம் பார்த்தது. இப்பகுதியில் புயல் காரணமாக 65 பேர் இறந்தனர். இந்நிலையில், அந்த புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சாண்டி புயல், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்

என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் தரையை நெருங்கும்போது,

120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அட்லாண்டிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சாண்டி புயல், மேலும் இரு சிறிய புயல்களுடன் மோதலை எதிர்கொள்ள உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுயார்க், நியுஜெர்சி, பால்டிமோர் நகரங்களில் இந்த சூறாவளியால் பெரும் சேதங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, வடக்கு கரோலினா முதல் கனெக்டிகட் வரையில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு, ஐரோப்பா, ஆசியாவில் இருந்து வரவேண்டிய 7.600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நியுயார்க்கில் நேற்று பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், திரையரங்குகள், அலுவலகங்கள், பங்குச்சந்தைகள் என்று அனைத்துமே மூடப்பட்டு நகரமே வெறிச்சோடி கிடந்தது. பொது மக்கள் வீடுகளில் முடங்கினர். எந்த காரணத்துக்காகவும் மூடப்படாத நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகம் நேற்று மூடப்பட்டது.

 இந்திய தூதரக அலுவலகமும் மூடப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் அதிபர் ஒபாமா மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோர் வடகிழக்கு பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால், புயல் காரணமாக அவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். புயல் கரையை கடக்கும்போது, 11 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் எழும்பும் என்பதால், மன்ஹாட்டன் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால், அதில் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்கம்பங்களின் அருகில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுயார்க் நகரில் புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியில் அதிபர் பராக் ஒபாமா நேற்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசுகையில், ‘இந்த புயலை மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது, இது மிகப்பெரிய, ஆபத்தான புயல்’ என்று கூறினார். கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அதிகாரிகள் தெரிவிக்கும் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளும்படியும் ஒபாமா தெரிவித்தார்.1 அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய புயல் இதுதான். சுமார் 1,600 கி.மீ. பரப்பளவில் இந்த சாண்டி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
2 சூறாவளி சாண்டியை எதிர்பார்த்து அமெரிக்காவின் 9 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
3 கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 3 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளனர்.
4 வானிலை காரணமாக நியுயார்க் பங்குச்சந்தை மூடப்படுவது, 27 ஆண்டுக்கு பின்பு நேற்று நடந்துள்ளது.
5 அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள் கிழக்குப்பகுதி நகரங்களில் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், புயல் காரணமாக நேற்று அவை மூடப்பட்டன.
6 புளோரிடாவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த ஒபாமா, அந்த கூட்டத்தை நேற்று ரத்து செய்தார். வாஷிங்டன் திரும்பி புயல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
7 சாண்டி புயல் கடந்து செல்லும் வழியில், மத்திய அட்லாண்டிக்கில் இருந்து கனடா வரையில் 5 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...