Oct 3, 2012

உலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்



  




இட்லிவடை வாசகர்களில் செஸ் ஆர்வலர்களுக்கு மட்டுமாவது, இந்த ஐபிஎல் கிரிக்கெட் பெருவிழாவுக்கு நடுவே, தற்சமயம் உலக செஸ் சேம்பியன்ஷிப் நடந்து வருவது நிச்சயம் தெரிந்திருக்கும். 10 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலக சேம்பியன் விஷி ஆனந்தும், அவரை எதிர்த்தாடும் போரிஸ் கெல்ஃபாண்டும் சமநிலையில் (5-5) இருக்கிறார்கள். 12 ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள் சமநிலையில் இருக்குமானால், 4 துரித ஆட்டங்கள் நடைபெறும். அதில் சமன் எனில், 2 அதிவேக ஆட்டங்கள், சமன் எனில், இது போல 4 முறை (4 X 2) தொடரும், சமன் எனில், போதும் விட்டு விடுவோம் :-) இப்போது 7,8,9,10-வது ஆட்டங்கள் பற்றி பார்க்கலாமா?
எ.அ.பாலாவின் ஐபிஎல் கிரிக்கெட் இடுகைகளுக்கு இடையே, நான் செஸ் குறித்து டெக்னிக்கலாக எழுதினால் எடுபடுமா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால், 2010 உலக சேம்பியஷிப் சமயத்தில், லலிதா ராம் அவர்களின் செஸ் இடுகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை கவனித்தேன்! அந்த காரணத்தால் ஒரு கட்டுரை எழுதிப்பார்ப்போமே என்றொரு உந்துதல் பிறந்தது.முதல் 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. அதில் 3வது Neo-Grulfeld ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 30 நகர்த்தல்கள் வரை முன்னணியில் தான் இருந்தார்; d6-ல் அவரது ஒரு passed pawn முடிவாட்டத்தில் கெல்ஃபாண்டுக்கு பிரச்சினை தரும் வகையில் அமர்ந்திருந்தது. நேரமின்மை காரணமாக ஆனந்தின் பலமில்லாத 35வது நகர்த்தலால் (Rh1), ஆனந்திடம் ஒரு pawn அதிகமிருந்தும், ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டத்தை இங்கே ஆடிப் பார்க்கலாம்!

http://www.chessgames.com/perl/chessgame?gid=1665818

7வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666550

இதில் ஆனந்துக்கு கறுப்புக்காய்கள். செமி-ஸ்லாவ் தற்காப்பை ஆனந்த் கையாண்டார். 11-வது நகர்த்தலின் முடிவில், கெல்ஃபாண்ட் C-file-ஐ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றது போலத் தோன்றியது. ஆனந்தின் 15வது நகர்த்தல் (Qb8), கெல்ஃபாண்டின் C-file ஆதிக்கத்தை கலைக்க மேற்கொண்ட முடிவு என்பது அடுத்து கருப்பு யானை C8க்கு வந்தவுடன் புரிந்தது. 20 நகர்த்தல்களுக்குப் பின், வெள்ளைக் காய்கள் தாக்குதலை தொடங்க சாதகமாகவே பொஸிஷன் இருந்தது. ஆனந்தின் காய்கள் ராணியின் தரப்பு (Queenside) குவிந்திருந்த போதிலும், இதுவரை அவர் செய்த தற்காப்பு நகர்த்தல்களை பலமற்றவை என்று கூறமுடியாது.

ஆனந்தின் 21வது நகர்த்தல் Ne4 பலகீனமானது என்று சொல்ல செஸ் கிராண்ட் மாஸ்டர் தேவையில்லை. அவரது வீழ்ச்சிக்கு அடி கோலிய நகர்த்தலது! உடனே, கெல்ஃபாண்ட் தனது யானையையும், ராணியையும் ஆனந்துடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டதில் அவரது பொஸிஷன் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து பலகீனமான சந்தேகத்துக்குரிய நகர்த்தல்களால், தனது பொஸிஷனை மேலும் மோசமாக்கிக் கொண்ட ஆனந்த் ஒரு உலக சேம்பியன் போல விளையாடவில்லை என்பது வருத்தமாக விஷயம். C8-ல் இருந்த ஆனந்தின் வெள்ளை பிஷப், தனக்கும் ஆட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல பரிதாபமாக காட்சியளித்தது. கெல்ஃபாண்ட் கொடுத்த தொடர் அழுத்தத்தினால், அந்த பிஷப்பை 35வது நகர்த்தலில் ஆனந்த் இழந்தார்.

கெல்ஃபாண்ட் தனது யானை, 2 குதிரைகளைக் கொண்டு ஆனந்தின் ராஜாவுக்கு மேட்டிங் வலையை அழகாக விரித்தார். கடைசி முயற்சியாக, e- pawn-ஐ ராணியாக்க ஆனந்த் வகுத்த அதிரடி திட்டத்திற்கு கெல்ஃபாண்ட் அசரவில்லை. 38வது நகர்த்தலில், ஆனந்த் “38. ... e1=Q 39. Ng6+ Kg8 40. Rg7#!” காரணத்தினால் ரிசைன் செய்தார்.

8வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666558

உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடி தோற்கும்போது உண்டாகும் சைக்காலிஜிகல் அழுத்தம் காரணமாக, அடுத்த ஆட்டத்தில் பாதுகாப்பான ஆட்டத்தை தேர்வு செய்யும் மனநிலைக்கு ஒருவர் ஆளாவது சகஜமே. ஆனால், ஆனந்தின் முந்தைய பல உலக சேம்பியன்ஷிப் அனுபவமும், அவரது அசாத்திய tactical ஆட்டத்திறமையும் இந்த முக்கியமான ஆட்டத்தில் அவருக்கு பெரிதும் உதவின.

ஆனந்துக்கு வெள்ளைக்காய்கள். இதுவும் ஒரு d4 தொடக்கம், நியோ கிரன்ஃபல்ட் தற்காப்பு வகையில், ஆனந்த் சற்றே அக்ரஸிவ்வான f3 நகர்த்தல் வாயிலாக ஃப்ளோர்-ஆலிகைன் தொடர்ச்சியைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாட்டத்தில் வெற்றி அவசியம் என்பதால், ஆனந்த் ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 7வது நகர்த்தலில் ஆனந்தின் ராஜா தரப்பு குதிரை (ராணி தரப்பு குதிரை நேரடியாக செல்லும் வாய்ப்பிருந்த) c3-க்கு சென்றது சற்று ஆச்சரித்தை அளித்தது.

கெல்ஃபாண்ட் ராஜா தரப்பு castling செய்தார். ஆனந்தின் 12வது நகர்த்தல் g4-ஐ பார்த்தவுடன், ஆனந்த் தாக்குதலுக்காக castling-ஐ புறக்கணித்து விட்டது புரிந்தது. 14வது நகர்த்தலில், கெல்ஃபாண்ட் தனது குதிரையை g7 அல்லது f6க்கு எடுத்துச் சென்று அமைதியாக ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொஸிஷன் (14...Nf6 15.Kc2 Na6 16.Rd1 or 14...Ng7 15.h4) மேலும் பலமிழந்து போயிருக்கும்,

தானும் தாக்குதலில் இறங்க முடிவு செய்த கெல்ஃபாண்ட், ஆனந்தின் ராஜாவுக்கு செக் கொடுத்து, f3 ஃபோர்க் வாயிலாக அவரது யானையை வெட்டும் நோக்கத்துடன் 14.Qf6 நகர்த்தலை தேர்ந்தெடுத்தார். ஆனால், உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில், Attack is the best form of defense என்பது சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். ஆனந்த் இதை துல்லியமாக எதிர்பார்த்தவர் போல, 15.gxNh5 நகர்த்தலை அதிகம் யோசிக்காமல் செய்தார். 15.... Qxf3+ 16.Kc2 Qxh1 தொடர்ந்தன. ஆனந்த் தனது யானையை மனமுவந்து தாரை வார்த்தார் என்று தான் கூற வேண்டும். ஏன்?

ஆனந்தின் 17. Qf2-க்கு பிறகு தான் தனது ராணி ஆனந்த் விரித்த trap வலையில் மாட்டி விட்டது கெல்ஃபாண்டுக்கு உறைத்தது. கெல்ஃபாண்ட் 17 ... Nc6 ஆடி மேலும் ஒரு குதிரையை இழந்து ராணியை காப்பாற்றி, மோசமான பொஸிஷனில் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனந்த் போன்ற ஒரு விற்பன்னரிடம் அதில் பயனெதுவும் இல்லை என்றுணர்ந்து உடனடியாக ரிசைன் செய்தார். கெல்ஃபாண்டின் பிளண்டர் காரணமாகத் தான் அவர் தோற்றார் என்றாலும், இவ்வாட்டத்தில் ஆனந்தின் ஒவ்வொரு நகர்த்தலும், துல்லியமான, நம்பிக்கையான நகர்த்தல். சமீப காலத்தில் உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் மிகக் குறைந்த நகர்த்தல்களில் முடிவடைந்த ஆட்டம் இது என்று கூறுகிறார்கள்.

9வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1667306

இவ்வாட்டம் டிராவில் தான் முடிந்தது என்றாலும், கெல்ஃபாண்டின் தாக்குதலை தனது தற்காப்பு நகர்த்தல்களால் திறமையாக சமாளித்த ஆனந்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதுவும், பல நகர்த்தல்களுக்கு முன்பே, ஆட்டம் செல்லக்கூடிய சாத்தியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தனது ராணியை 20. Rxc5 நகர்த்தலுக்குப் பின் கெல்ஃபாண்டின் யானை, பிஷப்புக்கு தியாகம் செய்யத் துணிந்ததில், அவரது மன உறுதி பளிச்சிட்டது.

முடிவாட்டத்தில், கெல்ஃபாண்டின் ராணிக்கு எதிராக ஆனந்திடம் ஒரு யானையும், ஒரு குதிரையும் இருந்தன. இம்மாதிரி சூழ்நிலையில், Zugzwang ஏற்படாத வகையில் ஆடுவதற்கு அதிக திறமை வேண்டும். கெல்ஃபாண்ட் வெற்றி பெற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஆனந்த் முறியடித்ததில், ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

10வது ஆட்டம்:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1667320

இவ்வாட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை என்பதால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சற்றே வித்தியாசமான king pawn (e4) தொடக்கம்; சிசேலியன் தற்காப்பு (ரோஸலிமோ தொடர்ச்சி) வகைப்பட்டது. 5வது நகர்த்தலில் (e5) கெல்ஃபாண்ட் தனது pawn ஐ தியாகம் செய்ய முடிவு செய்தார். அவர் d6 ஆடியிருந்தால், அவரது கருப்பு ராணி trap செய்யப்படும் அபாயம் ஒன்று ஒளிந்திருந்தது !!! ...5...d6 6.e5 6...dxe5 7.Nxe5 Qd4 8.Nc4 Qxa1 9.Nc3.

pawn-களின் அரண் இல்லாத ராணியின் தரப்பு தைரியமாக castling செய்து கெல்ஃபாண்ட் ஆச்சரியப்படுத்தினார், இந்த சூழலில், ஆனந்த் மிகச் சிறிய அளவில் முன்னணியில் இருந்தார் என்று தான் கூற வேண்டும், ஆனந்தின் c5 pawn மீதான தாக்குதலை கெல்ஃபாண்ட் சமாளித்தது அருமை. 8வது ஆட்டத்தின் தோல்வியை மனதில் வைத்து, கெல்ஃபாண்ட் இவ்வாட்டத்தில் மிகச் சரியான தற்காப்பு நகர்த்தல்களை ஆச்சரியமளிக்கும் வகையில் மேற்கொண்டார். 25வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...