Apr 28, 2013

இத்தாலியில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பு

இத்தாலியில் 2 மாத அரசியல் இழுபறி நிலைக்குப் பின் புதிய கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது.
அங்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் நடைபெற்றது. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கியுள்ள இத்தாலியில் அரசியல் சிக்கலும் ஏற்பட்டது ஐரோப்பிய யூனியனில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்ரிகோ லெட்டாவின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் இடையே கூட்டணி
ஏற்பட்டது. இக்கூட்டணியை இத்தாலி அதிபர் ஜார்ஜியோ நெபோலிடானோ வரவேற்றுள்ளார்.
தலைநகர் ரோமில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது. அதிபர் ஜார்ஜியோ முன்னிலையில் என்ரிகோ லெட்டா (46) புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இத்தாலியின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை என்ரிகோ லெட்டா பெற்றார். நாட்டை பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் முனைப்புடன் பணியாற்ற இருப்பதாக என்ரிகோ லெட்டா உறுதிபூண்டுள்ளார்.
இப்போது கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ள இருகட்சிகளுமே கொள்கை அளவில் வேறுபட்டவை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி முதலிடத்தையும், மக்கள் சுதந்திரக் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருந்தது. தேர்தலுக்குப்பின் இந்த இருகட்சிகளும் கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளன. புதிய அமைச்சரவையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர் அல்லாத ஒருவரும் அமைச்சராக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இத்தாலி உள்ளது.
பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: புதிய பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தாலி பிரதமர் அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பிரதமர் அலுவலகத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...