Aug 10, 2013

பிரான்ஸைச் சுற்றிப்பார்ப்போம் வாருங்கள் - பகுதி2 (காணொளி)



 நாம் சென்ற பகுதியில் ஈபிள் கோபுரத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் உல்லாசப்பயணிகளால் பரிசில் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் லூவ்ர் அருங்காட்சியகத்தையும் அங்கு நிறுவப்பட்டுள்ள பிரமிட் கோபுரம் பற்றியும் லூவ்ர் அருங்காட்சியகத்தைச் சுற்றி உள்ள அழகான பூங்கா பற்றியும் பார்ப்போம். இது பரிசின் முதலாவது பகுதியில் அமைந்துள்ளது.
லூவ்ர் அருங்காட்சியகமானது (musée du Louvre) உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்றும் பரிசின் மிகப்பெரிய அருங்காட்சியகமுமாகும். இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் சதுர மீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் அறுபதினாயிரத்து அறுநூறு சதுர மீற்றர்கள் பரப்பளவில் அருங்காட்சியகத்தின் கண்காட்சிகள் உள்ளன.
 


 இந்த அருங்காட்சியகம் பிரான்சின் வரலாற்றில் மிக நீண்ட வரலாறு உடையது. பல நூற்றாண்டுகளாகப் பிரான்சின் கப்பீசியன் மன்னரான Hugh Capet முதல் பல மன்னர்களால் தமது அரண்மனை ஓவிய மற்றும் சிற்பக் கூடமாகவும் பின்னர் அவர்களது, உலகின் பல பாகங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்ப ஓவியங்களின் வைப்பிடமாகவும் உபயோகிக்கப்பட்ட இராஜாங்க மண்டபமான இன்றைய அருங்காட்சியகத்தின் முக்கிய பகுதியான Palais-Royal 1793 முதல் அருங்காட்சியமாக மாற்றியமைக்கப்பட்டது. அது 1190ம் ஆண்டில் Philippe Auguste மன்னனால் கட்டப்பட்டது.
 
 
 
இங்கு பிரபலமான இத்தாலிய ஓவியரான  லியோனார்டோ டாவின்சியின் பிரபல ஓவியங்களின் உண்மைப்பிரதிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் உலகப் புகழ் பெற்றதுமான மோனாலிசா (Portrait of Lisa Gherardini, wife of Francesco del Giocond) ஓவியத்தைக் காண உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகின்றார்கள். எகிப்திய கிரேக்க நாகரிகங்களின் அரும்பெரும் சிற்பங்கள் இங்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. பிரான்சின சக்கரவர்த்தி நெப்போலியனின் முடிசூட்டு விழா, சமத்ராஸ் வெற்றிச் சிறகு, கொராத்தியின் போர்ப்பிரகடணம், வீனஸ் கடவுள் போன்றவை மிகவும் பிரபலமான அரும்பெரும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களாகும்.
 
 
 
 
இந்த அருங்காட்சியகம் பெரும்பாலும் எகிப்திய நாகரிகத்தைப் பிரதிபலிப்பதால் அதன் ஒரு வாசற்பகுதியில் பெரும் கண்ணாடிப் பிரமிட் ஒன்று நிரமாணிக்கப்பட்டுள்ளது. இது அருங்காட்சியகத்தின் நெப்போலியன் சதுக்கத்தில் பெரும் கண்ணாடித் துண்டுகளால் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா மித்தரோனால் 1983 இல் இப் பிரமிட்டின் நிர்மாணத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. பின்னர் 30 மார்ச் 1989 இல் திறந்து வைக்கப்பட்டு 1ம் திகதி ஏப்ரல் மாதம் 1989 இல் மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது
இப் பிரமிட்டானது சீன அமெரிக்கக் கட்டட விற்பன்னரான லியோ மிங்க் தலைமையில் கட்டப்பட்டது. இதன் அடிப்பகுதி 35,42 மீற்றர் நீளத்தில் ஆரம்பித்து 21,64 மீற்றர் உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது 603 சதுரக் கண்ணாடிகளாலும் 70 முக்கோணக் கண்ணாடிகளாலும் உருவாக்கப்பட்டது.
 
 
 
 
அருங்காட்சியகத்தின் சுற்றுவெளிப்புறங்கள் மிகவும் அழகிய பூங்காக்களினால் நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவின் நீண்ட வழி ஒன்று துய்லறிப் பூங்காவரை நீண்டு செல்கின்றது. வழியெங்கிலும் மிக அழகிய செப்புச் சிலைகள் உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும்.
இந்த அருங்காட்சியகமும் பிரமிட்டும் அதன் பூங்காக்களும் இரவு வேளைகளில் மனதைக் கொள்ளை கொள்ளும்.
 
 
 
 
 
 
திறந்திருக்கும் நேரங்கள்
 
இவ் அருங்காட்சியகம் திங்கள்,, சனி, ஞாயிறு : காலை 9 மணிமுதல் மாலை 18 மணிவரை 
புதன், வெள்ளி: காலை 9 மணிமுதல் மாலை 21:45 மணிவரை 
 
கட்டணங்கள்
 
நிரந்தரக் கண்காட்சிச் சாலைக்கு மட்டும் 12€
நெப்போலியன் மண்டபத்தின் கண்காட்சிகளிற்கு மட்டும் 13€
அனைத்தையும் பார்வையிட 16€
ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறும் பிரான்சின் தேசிய தினமான யூலை 14ற்கும் அனுமதி இலவசம். (நெப்போலின் மண்டபம் தவிர)
 
 பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டவர்கள் லூவ்ர் அருங்காட்சியகம் மற்றும் Eugène Delacroix அருங்காட்சியகமும் இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
 
- ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 18 முதல் 25 வயதுடையவர்கள்
- கலைகள் மற்றும் சரித்திரம் கற்பிக்கும் ஆசிரியர்கள்.
- பிரான்சின் அரசுதவி பெறும் தனியார் மற்றும் அரச கல்லூரி மற்றும் பாடசாலை ஆசிரியர்களிற்கு
- வேலையற்றோர் மற்றும் வேலை தேடுவோர் மற்றும் அரச உதவிகளில் வாழ்வோர் (தகுந்த ஆறுமாதத்திற்குட்பட்ட ஆவணங்களுடன்)
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் ஊனமுற்றோரிற்கும் அவர்களை அழைத்து வரும் துணையாளருக்கும்.
 



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...