Sep 13, 2013

நுண்ணுயிரிகள் நல்லதா? கெட்டதா?



னித உடலில் 10 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது லட்சம் கோடி) செல்கள் இருப்பதாகவும், 23,000 ஜீன்களால் அவை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ உலகம் நம்புகிறது. நமது உடலில் 100 டிரில்லியன் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வசிக்கலாம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது, நமது உடல் எடையில் சுமார் 10 சதவிகிதம் வரை பாக்டீரியாவின் எடை இருக்கும். நமது உடலின் ஒவ்வொரு சதுர அங்குலப் பரப்பிலும் சுமார் 32 மில்லியன் பாக்டீரியா உயிருடன் வசிக்கின்றன. இவற்றின் மொத்த எடை சுமார் இரண்டே கால் கிலோ இருக்கும்.
இந்த நுண்ணுயிரிகள் நல்லதா... கெட்டதா என்று கேட்டால் 'நாயகன்’ கமல் ஸ்டைலில் ''தெரியலையே...'' என்றுதான் விஞ்ஞானிகள் சொல்லக் கூடும்.
மலைச் சிகரத்தில் இருந்து ஆழ்கடல் வரை இவை இருக்கும். காற்று, தண்ணீர், மண் என எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகள் மனித உடலை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன? நுண்ணுயிரிகளைப் பற்றியும் மனித ஆரோக்கியத்தில் அவற்றுக்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் அவற்றால் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதுபற்றியும் சென்னை மருந்தியல் நிபுணர்

வி.அனந்தபத்மநாபனிடம் பேசினோம்.

''பாக்டீரியா மட்டுமே நுண்ணுயிரி அல்ல. கண்ணால் பார்க்க முடியாத பூஞ்சைகள், ஈஸ்ட், ப்ரோடோஸோவா, ஆர்கியா போன்றவற்றையும் நுண்ணுயிரிகள் என்றே சொல்வோம். இவற்றை மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். பாக்டீரியா ஏறக்குறைய 99 சதவிகிதம் மனிதனுக்கு நன்மை செய்யக்கூடியவையே. தாங்கள் தங்குவதற்கு இடமும் உணவும் தருகின்ற மனிதனுக்குப் பிரதிபலனாகப் பல நன்மைகளை இந்த நுண்ணுயிரிகள் செய்கின்றன.
மனிதனின் ஜீரணத்துக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. தீமை செய்யும் பாக்டீரியாவை அழிக்கின்றன. உதாரணமாக, பாலில் உள்ள 'லாக்டோபேஸில்லஸ் கேஸி’ (லிணீநீtஷீதீணீநீவீறீறீus நீணீsமீவீ) என்னும் பாக்டீரியா, 'ஹெலிகோபாக்டர் பைலோரி’(Lactobacillus casei) என்னும் தீங்கு செய்யும் பாக்டீரியாவை அழிக்கிறது. நமது தோலில் உள்ள சில வகை பாக்டீரியா பூஞ்சைத் தொற்றில் இருந்து நம்மைக் காக்கின்றன. வாய், மூக்கு, தொண்டை மற்றும் குடல்களில் கோடிக்கணக்கில் வசிக்கும் பாக்டீரியா, இதர தீமை தரும் பாக்டீரியாவை அண்டவிடாமல் பாதுகாக்கின்றன. மனித உடலின் அமிலத்தன்மை அளவைச் சீராக வைத்திருப்பதிலும் பாக்டீரியாவின் பங்கு மகத்தானது.மனிதனுக்குத் தேவையான கலோரி அளவில் 10 சதவிகிதம் கிடைக்க இவை வழிவகுக்கின்றன. தாய்ப்பாலில் உள்ள க்ளைகான்ஸ் என்னும் புரதத்தை மனித என்ஸைம்களால் செரிக்க முடியாது; பாக்டீரியாவால் அது முடியும். மனிதனும் நுண்ணுயிரிகளும் இணைந்து வாழும் நிலைக்கு இது சரியான உதாரணம்.

வைட்டமின் பி2, (ஙி2), பி12 (ஙி12) மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவற்றை மனித உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளில் குறைபாடு ஏற்படும்போது அதிகமான உடல் பருமன் அல்லது உடல் அதிகமாக இளைப்பது, இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் குடலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் ஆகியவை ஏற்படக் கூடும்.
மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துவதிலும் நுண்ணுயிரிகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. 'அமீபியாசிஸ்’ என்னும் ஒரு வகை சீதபேதி, அமீபா என்ற ஒரு செல் உயிரியால் வருவது. டைஃபாய்டு, நிமோனியா, சிஃபிலிஸ், காலரா, காசநோய், தொழுநோய் போன்றவற்றுக்கு பாக்டீரியாவே காரணம். கேம்பைலோபாக்டர் என்னும் பாக்டீரியா உணவை நஞ்சாக்கிவிடும். சிலருக்கு நோயை ஏற்படுத்தும் அதே நுண்ணுயிரி வேறு சிலருக்கு எவ்விதக் கெடுதலும் செய்வதில்லை.
எய்ட்ஸ் நோய்க்கான வைரஸால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் வரை எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அப்பாவி வேடம் பூண்டு அமைதியாக மனிதனின் உடலில் வசித்துவரும் சில வகை பாக்டீரியா, எதிர்ப்புச் சக்தி குறைந்தவுடன் பலவிதமான நோய்களையும் கொடுக்க ஆரம்பிக்கும்.
சுகாதாரமான சூழலில் வசிப்பது, தூய்மையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்'' என்கிறார் மருத்துவர் வி.அனந்த பத்மநாபன்.
தற்போது விஞ்ஞானிகள் புரட்சிகரமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நுண்ணுயிரிகள் மனித உடலின் ஓர் உறுப்பாகவே செயல்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த சமீபத்திய கருத்தைப் பற்றி நுண்ணுயிரியல் மருத்துவர் தாரா ஃபிரான்ஸிஸ் என்ன சொல்கிறார்?
''நோய்த்தொற்று ஏற்படும்போது நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக்குகள் நோய் பரப்பும் பாக்டீரியாவை அழிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதோடு சேர்த்து நன்மை செய்யும் பாக்டீரியாவையும் தாக்கி அழித்துவிடும். எனவே, அதிக அளவு ஆன்டிபயாடிக் மருந்ககளை எடுத்துக்கொள்வதால் நமது நோய் எதிர்ப்புச் சக்தி குறைய வாய்ப்பாகும் என்று டெக்ஸாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கேரி பி. ஹஃப்நாகில் சொல்கிறார்.
மனிதன் என்பவன் ஒரு தனி உயிரினம் அல்ல என்றும் பலவேறு நுண்ணுயிர்களால் ஆன சூப்பர் உயிரினம் என்றும் விஞ்ஞானக் கருத்து நிலவுகிறது. பாக்டீரியாவ¬யும் இதர நுண்ணுயிரிகளையும் மனித உடலில் ஒரு பகுதி என்று சொல்வது முரணானது என்று சிலர் நினைக்கலாம். நமது உடலில் இருக்கும் பல நுண்ணுயிரிகள் ஒட்டுண்ணிகளோ அல்லது வழிப்போக்கர்களோ அல்ல. மனிதன் என்ற காலனியில் வாழும் கூட்டு உயிரினங்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. 'நேச்சர்’ மற்றும் 'சயின்ஸ்’ போன்ற விஞ்ஞான இதழ்களில் இதுபற்றிய விவாதம் சமீப காலங்களில் பரவலாக அடிபடுகிறது.
நுண்ணுயிரிகள்தான் மனித செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது. ஒரு நுண்ணுயிரியின் குறைபாட்டால் நோய் ஏற்படும் போது நோய்க்கென்று மருந்து தருவதைவிட நோய்க்குக் காரண மான நுண்ணுயிரிக் குறைபாட்டை நீக்குவதுதானே பொருத்தமானது?
ஆன்டிபயாடிக்குகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்பவர்களின் குடலில் உள்ள நுண்ணுயிரிகளும் அழிவதால் 'க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிஸைல்’ என்னும் பாக்டீரியா பெருகி குடல் வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது. இப்படிப் பாதிக்கப்பட்டவரின் குடலுக்குள் ஆரோக்கியமான மனிதனின் கழிவை எனிமா மூலம் செலுத்திக் குணமாக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பரம்பரை வியாதிகள் ஜீன்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படுகின்றன என்பது உண்மை என்றாலும், தாயிடமிருந்து குழந்தை பிறக்கும்போதே நுண்ணுயிரிகளும் அளிக்கப்பட்டுவிடுகின்றன'' என்கிறார் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளரான தாரா ஃபிரான்ஸிஸ்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...