Nov 10, 2013

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலி
மணிலா, நவ. 10–
பிலிப்பைன்ஸ் நாட்டில் 'ஹையான்' புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அதில் சமர், லிதே தீவுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 325 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
அதனால் பலத்த மழை கொட்டியது. கடலில் சுமார் 15 அடி முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. அதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
'ஹையான்' புயலின் கோர தாண்டவத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிதே தீவு கடும் பாதிப்புக்குள்ளானது. லிதே மாகாணத்தின் தலைநகர் தக்லோபான் நகரம் ஆக்ரோஷமான கடல் அலைகளால் கடும் சேதத்துக்கு ஆளானது.
இதனால் கடற்கரை ஓரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது தவிர வெள்ளப் பெருக்கில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் ஏராளமான வர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுவரை சுமார் 600 உடல்கள் மீட்கப்பட்டதால் 1000 பேர் பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. தற்போது தோண்ட தோண்ட பிணங்கள் வருவதால் சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவலை லிதே மாகாண கவர்னர் டொம்னிக்
பெட்டில்லா தெரிவித்துள்ளார்.
இந்த புயல் மத்திய பிலிப்பைன்சில் உள்ள 6 தீவுகளை தாக்கியது. இதில் லிதே தீவுதான் மிக கடுமையான தாக்குதலுக்குள்ளானது. இது கடந்த 2004–ம் ஆண்டு நடந்த சுனாமி பேரழிவை விட அதிகம் என ஐ.நா.பேரழிவு கணக்கீட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை துவம்சம் செய்த 'ஹையான்' புயல் பக்கத்து நாடான வியட்நாமை நோக்கி நகர்ந்தது. அது இன்று வியட்நாமை தாக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, கடலோரம் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டனர்.
அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்வதால் கடுமையான சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இங்கு சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...