Feb 26, 2014

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கிருஷ்ணகிரி, பிப்.27-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடைப்பெற்றது.

விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான அஸ்லம்ரஹ்மான் ஷெரீப், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மாதன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வேல்மணி, காங்கிரஸ் நகர பொருளாளர் குருந்தப்பன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 806 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.


விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது. தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது.

நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டம் சரியாக செய்யப்படவில்லை. நாங்கள் பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசிய பிறகு அவசர கோலத்தில் இந்த திட்டத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஆனால் திட்டம் முழுமையாக செய்யப்படாத நிலையில் தொடங்கி வைக்கப்பட்டதால், இன்று வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் சட்டமன்றத்தில் பேசினால், அந்த துறை அமைச்சர் தவறான தகவல்களை சட்டமன்றத்தில் பதிவு செய்து வருகிறார். நான் அமைச்சருக்கு நேரடியாகவே சவால் விடுகிறேன்.

அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை அமைத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்யலாம். அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கிறது என்றால், அமைச்சருக்கு நான் 'சல்யூட்' அடிக்க தயாராக இருக்கிறேன். இந்த சவாலை அமைச்சர் ஏற்றுக்கொள்ள தயாரா?.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...