Feb 24, 2014

சென்னை பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடுக்கிடும் புதிய தகவல்கள்


சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவருடைய மகள் உமாமகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் தங்கி கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற உமாமகேஸ்வரி, அதன்பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை பாலசுப்பிரமணி கடந்த 15-ந் தேதி மகளை காணவில்லை என கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கடந்த 22-ந் தேதி சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் உமாமகேஸ்வரி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த உடை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து போலீசார் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உமாமகேஸ்வரியின் கழுத்து, அடிவயிறு பகுதியில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார்
தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்த கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பையா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. பழைய குற்றவாளிகள் உள்ளிட்ட 81 பேரிடம் தனிப்படையினர் விசாரித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். நேற்று முதல் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், தொழில்நுட்ப பூங்காவை ஒட்டியுள்ள அந்த இடத்தை சுற்றி நைலான் கயிறுகள் மூலம் கட்டி ஒவ்வொரு பகுதியாக அலசி ஆய்வு செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக கொலை நடந்த பகுதியில் கிடந்த தலைமுடி, ரத்த துணுக்கு, சிம்கார்டு, மதுபாட்டில்கள், கண்ணாடி துண்டுகள், துண்டு காகிதம், சிகரெட் துண்டுகள் போன்றவைகளை சேகரித்து அதில் உள்ள கைரேகைகளை தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

டி.ஜி.பி. ராமானுஜம் தலைமையிலான போலீஸ் உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்படி சிப்காட் பிரதான சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தினர் சிப்காட் தொழிற்பேட்டை பூங்கா நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருங்கிணைப்பாளர் சாம்தேவ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பரிமளா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முட்புதரில் உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடக்கும் செய்தி கடந்த 20, 21-ந் தேதிகளில் சிப்காட் பகுதியில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களிடையே செல்போன் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக அரசல் புரசலாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உமாமகேஸ்வரி அலுவலகத்தில் அனுமதி பெற்று அந்த இரவில் யாரை பார்க்கச்சென்றார்?. அவரை அழைத்த நபர் நுழைவுவாயில் அருகே காத்திருந்தாரா? அல்லது பிரதான வழியில் வந்து கொண்டிருந்த அவரை யாராவது கடத்திச்சென்று கற்பழித்து முட்புதரில் பிணத்தை வீசிச்சென்றனரா? என்பது குறித்து போலீசார் மிக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு கூறியதாவது:-

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் 5 தனிப்படையினரும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் தரப்பில் 5 தனிப்படையினரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மொத்தம் 10 தனிப்படையினர் 10 கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரியின் செல்போன் இன்னும் கிடைக்கவில்லை. செல்போனை தீவிரமாக அந்த பகுதியில் தேடி வருகிறோம். இருந்தாலும் உமாமகேஸ்வரியின் செல்போன் நம்பரில் யார், யார் பேசினார்கள்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக கடந்த 13-ந் தேதி இரவு 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை பேசியவர்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கை பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட தெளிவான வழி போலீசாருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எங்களுக்கு சில உறுதியான தடயங்கள் கிடைத்து உள்ளன. கண்டிப்பாக இன்னும் இரண்டொரு நாளில் குற்றவாளிளை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதை ஒரு சவாலாக ஏற்று எங்களது விசாரணை நடக்கிறது.

உமாமகேஸ்வரி வேலை பார்த்த கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு எதிரே உள்ள தனியார் நிறுவனங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு உள்ளோம். அவர் வேலை பார்த்த கம்பெனியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்த்து உள்ளோம்.

உமாமகேஸ்வரி, சரியாக இரவு 10.30 மணிக்கு கம்பெனியை விட்டு வெளியே வந்து ரோட்டில் நடந்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பிறகு அவர் சிறிது தூரம் ரோட்டில் தனியாகத்தான் நடந்து சென்று உள்ளார். அதற்கு பிறகுதான் அவரை யாராவது கடத்திச்சென்றிருக்க வேண்டும். அல்லது தெரிந்த நண்பரோடு சென்று அவர் சிக்கலில் மாட்டி இருக்க வேண்டும்.

காதல் பிரச்சினை தவிர வேறு பல்வேறு பிரச்சினைகளில் அவர் சிக்கி இருந்தாரா என்ற கோணங்களில் விசாரித்து வருகிறோம். அந்த பகுதியில் தங்கி இருந்து வேலை செய்யும் வெளிமாநிலக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஷேர் ஆட்டோ டிரைவர்கள் அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை பார்க்கும் காவலாளிகள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.

வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி, காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஸ்வர்குமார் அகர்வால், சூப்பிரண்டுகள் அன்பு, நாகஜோதி, துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் போன்ற உயர் அதிகாரிகள் சிறுசேரி பகுதியிலேயே தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்டிப்பாக இரண்டொரு நாளில் கொலையாளி பற்றி தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம்.

உமாமகேஸ்வரி கற்பழிக்கப்பட்டாரா? என்பது பற்றி டாக்டர்கள் அறிக்கை கொடுத்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...