Aug 7, 2012

வில்வம் இருக்க, செல்வம் எதற்கு?--மூலிகைகள்


வில்வம் இருக்க, செல்வம் எதற்கு?

புராணங்களில் 'பஞ்ச தருக்கள்’ என்று சொல்லப்படும் ஐந்து மரங்களில் முதன்மையானது வில்வம் (இதர நான்கு பாதிரி, வன்னி, மந்தாரை, மா). வில்வ மரத்தை சிவனின் அம்சம் என்பார்கள். வேர், பட்டை, இலை, பழம், விதை என மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ மகத்துவம் வாய்ந்தவை. கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம் என வில்வ மரத்துக்கு நிறையப் பெயர்கள். இதன் தாவரவியல் பெயர் ஏகல் மார்மெலொஸ் (Aegle marmelos) வில்வ மரம், இலையுதிர் வகையைச் சேர்ந்தது. இமயமலையின் அடிவாரத்தில் இருந்து தென் இந்தியாவின் கடைக்கோடி வரை வில்வ மரங்கள் வியாபித்து நிற்கின்றன. வில்வ மரத்தின் பயன்களை சித்த மருத்துவர் ஜீவா சேகர் பட்டியல் போடுகிறார்.

வேர்: வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, பசும்பாலுடன் சேர்த்து தினசரி காலையில் குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

இலை: வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. நாட்பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு வில்வ இலைகளை நன்கு மென்று விழுங்கினால், நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வில்வத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளுக்கு கட்டுப்படும்.

பழத்தின் தோல்: வில்வப் பழத்தின் மேல் தோல் ஓடுபோல் இருக்கும். அதை நெருப்பில் காட்டி, பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசிவந்தால், நல்ல பலன் கிட்டும்.

பழம் : வில்வப் பழத்தை 'ஸ்ரீபலம்’ என்றும் அழைப்பார்கள். வில்வப் பழத்தில் புரதச் சத்து, தாது உப்புகள், மாவுச் சத்து, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உண்டு. சுவையாகவும் இருப்பதால் இதை அப்படியே சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து. பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்ணையில் ஊறவைத்து உடலில் தேய்த்துக் குளித்துவந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப்படும். தோல் பளபளப்பாகும். வில்வப் பழத்தில் இருந்து ஜாம், பழச்சாறு, பழக்கூழ், பானங்கள், இனிப்புகள் போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.

விதை : வில்வப் பழ விதைகளில் இருந்து வில்வ எண்ணெய் எடுக்கலாம். இந்தத் தைலம் முடி வளர்ச்சிக்கு உதவும்.

பட்டை: காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

தானியக் கிடங்குகளில் சேமித்துவைக்கும் உணவுப் பொருட்களைப் பூச்சிகள் பல சமயங்களில் தாக்குகின்றன. பூச்சித்தொற்று உள்ள தானியங்களைச் சாப்பிட்டால், பலவித நோய்கள் வருவதற்கான ஆபத்து இருக்கிறது. வில்வ மரத்துக்குப் பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் இருக்கிறது. மரங்களைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனம் கோவையில் இருக்கிறது. இதன் இயக்குநர் கிருஷ்ணகுமார், 'வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் வெளியே வந்துள்ளன'' என்கிறார். இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்தவல்லவை. இந்தப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், நோய்களைப் பரப்பும் வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரானத் தன்மையைக் கொண்டது. இதேபோலக் கொசுக்களை விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...