Sep 13, 2012

ஸ்ரீரங்கம் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கடந்த 2002-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதா னம் வழங்கும் திட்டத்தை முதல் – அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
முதலில் 63 கோவில்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 360 கோவில்களுக்கு விரிவுபடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இப்போது 468 கோவில்களில் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 31 ஆயிரத்து 575 பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், பழனி முருகன் கோவிலில் காலை தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இருகோவில்களிலும் இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் மேலும் 50 கோவில் களுக்கு அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி புறப்பட்டார்.
காலை 11.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் போய்ச் சேர்ந்தார். விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், என்.ஆர்.சிவபதி, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., குமார் எம்.பி., மேயர் ஜெயா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார்.
ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார். அங்கு நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி மேலூரில் 10 எக்டேர் பரப்பளவில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைய உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நாள் முழுவதும் (14 மணி நேர) அன்னதான திட்டத்தை பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.
அன்னதான திட்ட உணவுப்பட்டியல் முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது. அவரது விருப்பப்படி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அன்னதான திட்ட தொடக்க விழாவிற்காக சென்னையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் அறுசுவை நடராஜனின் மகன் குமார் தலைமையில் 120 பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடக்க விழாவின் முதல் பந்தியில் 333 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு இனிப்பு வகைகள் உள்பட 16 வகையான அறுசுவை உணவு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்கப்படும் அதே நேரத்தில் பழனி தண்டாயுத பாணி கோவிலிலும் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
முதல் – அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் நகரங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் வரை சாலையின் இருபுறமும் ஆண்களும், பெண்களும் திரண்டு இருந்து ஜெயலலிதாவை வரவேற்றனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா கை அசைத்தவாறு சென்றார்.
திருச்சி விமான நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...