Oct 31, 2012

அமெரிக்க ரயில் சுரங்கங்களில் வெள்ளம்: போக்குவரத்து சீராக 10 நாட்களாகும்

நியூயார்க் :அமெரிக்காவை உலுக்கிய, "சாண்டி' புயல் காரணமாக, பலத்த மழை பெய்ததால், 1,000 கி.மீ., தூரம் கொண்ட சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சீராக, 10 நாட்களாகும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி' புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15 மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை, 50 பேர், பலியானர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

மூன்று அணு நிலையங்கள் மூடல் : நியூஜெர்சியில் உள்ள, "ஆயிஸ்டர் க்ரீக்' அணுசக்தி நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நியூஜெர்சியில், டெலாவர் நதிக்கருகே உள்ள, இரண்டு
அணுசக்தி நிலையங்கள் புயல் காரணமாக மூடப்பட்டன. நியூயார்க்கில் உள்ள புச்சானன், அணுசக்தி நிலையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டன.

சுரங்கங்களில் வெள்ளம் : நியூயார்க் சுரங்க போக்குவரத்து, 108 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1,000 கி.மீ.,க்கும் அதிகமான தூரம் கொண்ட, இந்த சுரங்க போக்குவரத்து பாதையில், 468 ஸ்டேஷன்கள் உள்ளன. கடல் மற்றும் ஆறுகளுக்கு அடியில் சில நிலையங்கள் உள்ளன. பலத்த மழையால், ரயில்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. "மின்சாரம் இல்லாததால், இந்த ரயில் நிலையங்களில் உள்ள தண்ணீரை இறைக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு, 14 மணி நேரம் என்ற அளவில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீரை இறைத்தால் தான், ரயில் பாதை சீராகும். அதுமட்டுமல்லாது, வெள்ளத்தால், மின்சார கருவிகள் பழுதுப்பட்டுள்ளன. இவற்றை சீர்படுத்த இன்னும், 10 நாட்களாகும்' என, நியூஜெர்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேரில் பார்வை : புயலினால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்த ஒபாமா, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, புயல் நிவாரண பணிகளில், கவனம் செலுத்தி வருகிறார். செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு சென்று, நிவாரண பொருட்கள் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். நியூஜெர்சி மற்றும் நியூயார்க் சென்று புயல் சேதங்களை, அவர் நேரிடையாக பார்வையிட உள்ளார். "சாண்டி' புயல் அதிர்ச்சி தரும் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த புயல் இன்னும் ஓயவில்லை என்று தான் அர்த்தம்' என்றார் அதிபர் ஒபாமா. புயல் ஓய்ந்ததையடுத்து, விமானங்கள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...