Oct 9, 2012

இவ்வாண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒருவராக கிழக்கிலிருந்து ஒரு தமிழ்மாணவன்




[Tuesday, 2012-10-09

ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப் போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் தெரிவாகி சாதனை படைத்துள்ளான்.

இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் கிழக்கின் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இச்சாதனைக்குச் சொந்தக்காரன்.
 கிழக்கில் முதலிடம் பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை

வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரம் பயிலும் மாணவன் ஆவார்.

இவர் தேசிய நிலைப் போட்டியிலும் தெரிவாகியுள்ளார். அதன்படி இலங்கையில் தெரிவான மொத்தம் பத்து மாணவர்களில் ஒரேயொரு தமிழ்மொழி மூல மாணவன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளான். ஏனைய 09 பேரும் பெரும்பான்மையின மாணவர்களாவர்.

இந்தப் பத்துப்பேரில் மூவருக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. அதற்கான தெரிவு எதிர்வரும் 12 13 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் நடைபெறும். அதிலும் வினோஜ்குமாருக்கு அதிக வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது.

இவரது கண்டுபிடிப்பு என்ன?

மெழுகுவர்த்தியை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தை இவர் கண்டுபிடித்துள்ளார்.

மெழுகுவர்த்தியை எரிக்கும்போது வீணாகும் மெழுகிலிருந்து புதிய மெழுகுதிரியை மீண்டும் உருவாக்குதல் இதன் நோக்கமாகும். இதன் மூலம் வீணாகும் மெழுகை மீளப்பயன்படுத்துதல், அத்துடன் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதனால் சூழல் மாசடைதலிலிருந்தும் தடுக்க முடியும்.

இவரது இன்னோரன்ன கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து நிதியுதவி அளித்துள்ளார். அத்துடன் அதிபர் எம்.விஜயகுமாரன் மற்றும் பல ஆசிரியர்கள் பக்கபலமாக உதவியுள்ளதாக அவரே குறிப்பிடுகின்றார்.

தெரிவான முறைமை!

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் இவ்வாண்டுக்கான போட்டிக்கு நாடெங்கிலுமிருந்து 1900 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் கிழக்கு மாகாணத்திலிருந்து 154 பேர் அடங்குவர்.

கிழக்கு மாகாண மட்டப் போட்டியிட்ட 154 பேரில் சோ.வினோஜ்குமார் முதலிடம் பெற்று தேசிய நிலைப் போட்டிக்குத் தெரிவானார். இவருடன் மேலும் 12பேர் தெரிவானார்கள்.

கடந்த 22ம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய நிலைப் போட்டியில் நாடெங்கிலுமிருந்து 81 மாணவர்கள் போட்டியிட்டனர். அவர்களுள் பத்து மாணவர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாகத் தெரிவானார்கள். அந்தப் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் வினோஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு உதவ வேண்டுமா?

இவர் மிகவும் பின்தங்கிய வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் இருவரும் தொழில்இல்லாதவர்கள், தந்தையார் கூலிவேலை செய்பவர் ஆவார்.

இவர்களுக்கு 03 பிள்ளைகள். மூத்தவன் டினேஸ்குமார் மேற்படி பாடசாலையிலிருந்து முதன் முதல் பல்கலைக்கழகம் சென்றிருக்கின்ற மாணவன். மற்றயவர் இடைநடுவில் தவறியவராவார்.

மொத்தத்தில் வறுமையின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் இவருக்கு போதிய வசதி வாய்ப்புகளை வழங்கினால் மேலும் பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்யக்கூடும்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் காட்டும் பரிவும் தட்டிக்கொடுப்பும் ஊக்கமும் அவரை மேலும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவுமென எதி;ர்பார்க்கலாம்.

ஆவியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டம்!

இளம் கண்டுபிடிப்பாளன் வினோஜ்குமார் கருத்து வெளியிடுகையில்; இளம் வயதிலிருந்தே எதையும் கண்டுபிடிக்க வேண்டும். எதையும் ஏனையோரை விட சற்று வித்தியாசமாகச் செய்துவிட வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் வேட்கையும் என்னுள்ளே இருந்தது.

முதன் முதலில் மூலிகை அரைக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தேன். அதன் மூலமாக 2007 முதல் வலய மட்ட புத்தாக்குனர் தெரிவுப் போட்டியிலே தெரிவாகினேன்.

தொடர்ந்து பிரதி வருடமும் மாகாணம், தேசிய நிலை வரை தெரிவாகி வந்துள்ளேன்.

பின்பு கழிவுப் பொருட்களைக் கொண்டு எலிப்பொறியைத் தயாரித்தேன். எலியை உயிரோடு பிடிக்கக்கூடிய எளிய பொறி இது. அதற்கு ஆக ஒரு ஆணியும் கம்பியுமே வெளியிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. ஏனையவை கழிவுப் பொருட்கள்.

கழிவுகளைக் கொண்டு இரசாயனப் பசளைகளைத் தயாரிக்கும் இயந்திரம் தயாரித்தேன்.

கதிரையில் இருக்கும்போது சுழலும் மின்விசிறி நாம் எழும்பியதும் தானாக நின்றுவிடும் ஒரு நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். சிலர் மறந்துபோய் ஓவ் பண்ணாமல் போவதுண்டு. அதற்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது.

தற்போது மெழுகுவர்த்தியை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு பரிசும் கிடைத்தது. மேலும் தெரிவானால் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இறைவனின் சித்தம் அவ்வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்.

இனி தேங்காயை இலகுவாக உரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வருகிறேன்.

ஆவியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.

றெஜிபோமை இலகுவான நாம் விரும்பியவாறு வெட்ட புதிய பொறிமுறைநுட்பம்.

எதிர்காலம்?

கணனி பொறியியலாளராக வரவேண்டுமென்பது அவா.

குறிப்பு!

இவர் ஏலவே இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடாத்திய சஹசக் நிமவும் என்ற போட்டியிலும் தேசிய நிலைப் போட்டிக்குத் தெரிவாகி தோற்றியுள்ளார்.

அதன் முடிவு 15ம் திகதி வெளியாகும். 30 பேர் தெரிவாவர். அதில் நானும் தெரிவாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறதென ஆணித்தரமாக் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...