Apr 11, 2015

மருத்துவராக செயற்படவல்ல புத்திசாலி பேண்டேஜ்கள்


smartpbandageஉடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன.
இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து
மருந்துகளை பரிந்துரைப்பார்.
ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்தவல்ல ஸ்மார்ட் பேண்டேஜ்கள், அதாவது புத்திசாலி பேண்டேஜ்களை உருவாக்கும் ஒரு சோதனைக்கூடத்துக்கு பிபிசி செய்தியாளர்கள் சமீபத்தில் நேரில் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
மேஷஷூட்டஸ் தொழில்நுட்ப கல்விமையம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் இரண்டின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பரிசோதனைக்கூடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்றிருக்கும் மருத்துவ சிகிச்சைமுறைகளின் செலவைக் குறைப்பது எப்படி என்பதும், தற்போதைய சிகிச்சையை மேம்படுத்துவது எப்படி என்பதுமே இதில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்களின் முக்கிய நோக்கம்.
அதன் ஒரு பகுதியாக அவர்கள் இந்த புத்திசாலித்தனமான பேண்டேஜ்களை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சரி, இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களில் அப்படியென்ன தனிச்சிறப்பு அல்லது புத்திசாலித்தனம்?
இந்த பேண்டேஜ்களால் காயம் அல்லது புண்ணின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
அதாவது, இந்த பேண்டேஜில் இருக்கும் பல்வேறு சென்சார்களால், அதாவது நுண்ணுணரிகள் புண்ணில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு, அதன் அமிலத்தன்மையின் அளவு மற்றும் அதன் வெப்பநிலைமை ஆகிய மூன்று முக்கிய காரணிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
புண்கள் அல்லது காயங்கள் மோசமானால் இந்த பேண்டேஜ்களால் உடனடியாக தலையிட முடியும்.
அதாவது இந்த பேண்டேஜின் பின்புறத்தில் சிகிச்சைக்கான மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மருந்தை எந்த அளவுக்கு காயத்தில் அல்லது புண்ணில் செலுத்துவது என்பதை இந்த பேண்டேஜின் பின்புறத்தில் இருக்கும் சிறப்பு வெப்பமானி முடிவு செய்யும். அதாவது இந்த மருந்தை செலுத்தவேண்டும் என்று பேண்டேஜ் முடிவு செய்தால், பேண்டேஜின் பின்புறம் சூடாகும்; மருந்துத் துகள்கள் சுருங்கும். அப்படி சுருங்கிய மருந்துத்துகள்கள் புண் அல்லது காயத்துக்குள் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த பேண்டேஜ் தேவைப்பட்டால் தானாகவே மருத்துவரை தொடர்புகொள்ளும்.
ஆமாம். இந்த பேண்டேஜ் மருத்துவரிடம் இருக்கும் தொலைத்தொடர்புக் கருவிக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பவல்லது. எனவே, இந்த புண் அல்லது காயத்தில் ஏதாவது பிரச்சனை என்று இந்த பேண்டேஜ் கண்டறிந்தால் அது உடனடியாக மருத்துவரிடம் இருக்கும் தொலைத்தொடர்புக் கருவிக்கு காயத்தில் என்ன பிரச்சனை என்பது குறித்து தகவல்களை அனுப்பும். உதாரணமாக புண் அல்லது காயத்தில் பாக்டீரியத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று இந்த பேண்டேஜ் கண்டுபிடித்து தகவல் அனுப்பினால், உடனடியாக மருத்துவர் பேண்டேஜில் இருக்கும் மருந்தின் அளவை அதிகப்படுத்தவோ, அல்லது மருந்திடும் கால இடைவெளியை குறைக்கவோ செய்வார்.
அதன்மூலம் அந்த காயம் அல்லது புண்ணை குணப்படுத்தும் சிகிச்சையை தொலைதூரத்தில் இருந்தபடியே மருத்துவரால் செய்ய முடியும்.
இனிமேல் எதிர்காலத்தில் இந்த வகையான பேண்டேஜ்களே காயங்களுக்கான சிகிச்சையின் அடிப்படையாக அமையுமா என்று தற்போதைய நிலையில் உடனடியாக சொல்ல முடியாது.
காரணம் இந்த பேண்டேஜை உருவாக்கி லாபகரமாக விற்பனை செய்யமுடியுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
ஆனால், இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் உருவாக்குவதற்கான ஆய்வின் முடிவுகள் பரிசோதனைக்கூடத்தில் முழு வெற்றி பெற்றால், வர்த்தக ரீதியில் இவை இரண்டே ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடக்கூடும்.
மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காயம் மற்றும் புண்களை குணப்படுத்தும் மருத்துவ முறை வேகமாக வளர்ந்து வருகிறது.
இதில் எதிர்பார்க்கப்படும் வெற்றி கிட்டுமானால் காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படும்.
காரணம் காயத்தை ஆற்றும் தற்போதைய சிகிச்சை முறை காலதாமதமானதாக கருதப்படுகிறது.
ஒவ்வொருமுறையும் இந்த காயத்தின் கட்டுக்களை பிரித்துப்பார்த்து மருந்து போடும் முறையால் காயம் ஆறுவதற்கு நீண்டநாட்கள் பிடிக்கிறது.
தற்போதைய சிகிச்சை முறையில் ஒவ்வொருமுறையும் காயத்தின் கட்டுக்களைப் பிரித்து மீண்டும் புதியகட்டு போடும் சமயத்தில் புதிய தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
அத்தகைய ஆபத்துக்கள் மற்றும் காலதாமதத்தை இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்கள் குறைக்கும் என்று இவற்றை உருவாக்கும் மருத்துவ ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...