Apr 24, 2012

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!” என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?

    மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
    பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
    ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
    உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
    காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
    பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
    இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
    உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால்
வாய்ப்புண் ஏற்படுகிறது.
    பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
    மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...