Sep 17, 2012

உலகம் உங்கள் கையில்



தூதரகங்களில் இருந்து ஊழியர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா

துபாய்: அமெரிக்காவைச் சேர்ந்த காப்டிக் நிறுவனம் வெளியிட்ட திரைப்படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டி, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. லிபியா, எகிப்து, இந்தோனேஷியா

உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது முஸ்லிம் மக்கள் தாக்குதல் நடத்தினர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் அரேபிய தீபகற்பம், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல்,காய்தா அழைப்பு விடுத்துள்ளது. இதனால் துனீஷியா, சூடான் நாடுகளில் உள்ள தூதரகங்களில் இருந்து பெரும்பாலான ஊழியர்களை நாட்டுக்கு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. மேலும் அமெரிக்கர்கள் யாரும் அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சூடானில் கர்தோம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரகத்தை பாதுகாக்க சிறப்பு படையை அனுப்புமாறு சூடான் அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. சூடான் அரசு சிறப்பு படையை அனுப்ப மறுத்துவிட்டது. இதனால், அங்கு உள்ள ஊழியர்களை திரும்ப அழைத்துள்ளது அமெரிக்கா.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு 14 பேர் பரிதாபமாக சாவு

பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள லோயர் திர் மாவட்டம் ஜன்தூல் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 14 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

தலிபான் படையினருக்கு எதிராக அரசு படையினர் நடத்தும் தாக்குதல்களுக்கு லோயர் திர் பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

தலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்களில் பல அப்பாவிகள் கொல்லப்படுவதால் சமீபகாலமாக பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் தலிபான்களுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 2009ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் ராணுவத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடந்து வருகிறது.

காதலித்த இளம் பெண்ணுக்கு ஆப்கனிஸ்தானில் சவுக்கடி

கஸ்னி: ஆப்கானிஸ்தானில் காதலித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு மக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுக்கப்பட்டது. காதலனுக்கு ஸி88 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் கஸ்னி மாகாணத்தில் ஜக்ஹுரி மாவட்டம் தலிபான்கள் அட்டகாசம் அதிகம். ஆனால், அந்த பகுதி தற்போது அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இங்கு சபீரா (16) என்ற பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. காதலித்த குற்றத்துக்காக அவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து கிராம பெரியவர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நிற்கவைத்து சவுக்கடி கொடுக்கப்பட்டது. காதலனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கஸ்னி மாகாண பெண்கள் நலத்துறை தலைவர் ஷுக்குரியாவாலி கூறுகையில், ''இந்த சம்பவம் இம்மாதம் 9ம் தேதி நடந்துள்ளது. இப்போது அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார். ''இந்த சம்பவம் நடந்தது உண்மைதான். இது குறித்து விசாரிக்க அரசு மற்றும் மனித உரிமைகள் துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்'' என்று ஜக்ஹுரி கவர்னர் ஜாபர் ஷெரீப் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...