Sep 1, 2012

பூமியின் புதிர்கள்


 
சூரிய மண்டலத்தில் உள்ள 8 கிரகங்களில் பூமிதான் அற்புதமானது.
இங்குதான், விதம்விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. வகைவகையான தாவரங்கள் வளர்கின்றன. காற்று இருக்கிறது. அது தென்றலாகவும் புயலாகவும் வீசுகிறது. எரிமலைகள் இருக்கின்றன. பல்வேறு வடிவங்களில் தண்ணீர் இருக்கிறது.
உயிரினங்களில் பறப்பவை இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ விதம்.
நீந்துகிறவை இருக்கின்றன. அவையும் பலவிதம்.
படிக்கிறவை எழுதுகிறவையும் இருக்கின்றன. ஆம். மனிதர்களைத்தான் கூறுகிறேன். மனிதர்கள் இயற்கையை ஆள்கிறார்கள். அல்லது ஆள முயற்சி செய்கிறார்கள்.
பூமி தோன்றிய கதை நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகிக் கொண்டே போகிறது. ஆம். புதிது புதிதாய் வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகின்றன.

நமது பூமி இப்போதிருப்பதை விட இன்னும் சிறிதாகவும் அடர்த்தி குறைவானதாகவும் இருந்திருந்தால் உயிர்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.
பூமியின் இணைப்புத் தட்டுகள்தான் உயிரினங்கள் வசிப்பதற்கு வகை செய்கின்றன. கனமான தட்டுகளும் மெல்லிய தட்டுகளுமாக பூமி இணைக்கப்பட்டுள்ளது. அவைதான் கண்டங்களை உருவாக்குகின்றன.
மலைகள் உருவாகவும் கடலுக்கு அடியில் பள்ளத்தாக்குகள் உருவாகவும் அவைதான் காரணமாக இருக்கின்றன.
மெல்லிய நிலத்தட்டுகள் எளிதில் நகரக்கூடியவை. அவை நகர்வதால்தான் பல நூறுகோடி ஆண்டுகளாக ஒரு செல் உயிரிகளில் இருந்து இப்போதுள்ள எத்தனையோ உயிரினங்கள்வரை உருவாகின.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த டயானா வாலென்சியா என்ற விண்ணியலாளர் நடத்திய ஆராய்ச்சி முடிவில் ஒரு விஷயம் தெளிவாகி இருக்கிறது.
நமது பூமி உருவான தொடக்க காலத்திலிருந்தே உயிரினத்துக்கு ஏற்றஅமைப்புடன் இருந்திருக்கிறது. உயிரினம் வாழ்வதற்கான சூழ்நிலையுடன் உருவாகி இருக்கிறது.
பூமியைப் போல பெரிதான, இங்குள்ள நிலத்தட்டு அமைப்புகளுடன் கூடிய வெளி கிரகங்களிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமே மிகப்பெரிய பாறைக்கிரகம். வெள்ளி கிரகம் உள்ளிட்ட வேறு சில பாறைக்கிரகங்கள் உயிர்கள் வாழ வாய்ப்பு இல்லாதபடி சிறியதாகவோ, தண்ணீர் இல்லாமலோ சுற்றுகின்றன. செவ்வாய்க் கிரகத்திலும் நிலத்தட்டு இணைப்புகள் இல்லை. எனவே, அந்தக் கிரகத்தில் மலைகள் வளர்வதில்லை. உருவ அமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை.
வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் போன்ற கிரகங்கள் முழுக்க முழுக்க வாயுக்களால் ஆகியிருக்கின்றன.
எந்த ஒரு கிரகமும் அதிகபட்ச வெப்பமாக இருக்கக்கூடாது. அதுபோல அதிகபட்ச குளிராகவும் இருக்கக் கூடாது.
மிதமான தட்பவெப்பம் பூமியில்தான் நிலவுகிறது.
வெளிப் பால்வீதிகளில் இதுவரை பூமியைப் போல 10 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இப்போதுள்ள தொழில்நுட்பப்படி அவற்றை ஆய்வு செய்ய இயலவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவற்றில் உயிரின்ங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய முடியும்.
பூமிக்கு ஆபத்து ஏற்படும் காலத்திற்குள் அதுபோன்ற வேறு பூமி கண்டறியப்பட்டால் அங்கு மனிதன் குடியேறக் கூடும்.
அந்தக் கிரகத்திற்கு செல்வதற்கு வசதியாக அதிவேக வாகனங்களையும் மனிதன் தயாரித்து விடுவான். ஒளியின் வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் பயணிக்கக் கூடிய வாகனங்களை தயாரிக்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
அதெல்லாம் நடக்கும். நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது நமது பூமியின் அதிசயங்களையும் புதிர்களையும் அறிந்து கொள்வோம்.
பூமியில் அதிக வெப்பப் பகுதி எது?

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் மரணச் சமவெளி என்று எல்லோரும் நினைப்பார்கள். கடந்த காலங்களில் அப்படி இருந்தது உண்மைதான். ஆனால், 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கு அந்த நிலையை மாற்றிவிட்டது. ஆம். ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் எல் அஜிஸியா என்ற இடம் உள்ளது. அங்கு எடுக்கப்பட்ட கணக்குப்படி 136 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இதுதான் இதுவரை எடுக்கப்பட்ட வெப்ப அளவுகளில் மிகவும் அதிகமானது. முன்பு 1913 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 10 ஆம் தேதி எடுக்கப்பட்ட அளவுப்படி கலிபோர்னியாவின் மரணச் சமவெளியில் வெப்ப அளவு 134 டிகிரி பாரன்ஹீட் ஆக இருந்தது.

பூமியின் மிகக் குளிரான பகுதி எது?


இப்போதும் சரி வெகு காலத்திற்கு முன்பும் சரி. அண்டார்டிகாவில் உள்ள வோஸ்டோக் என்ற பகுதிதான் நடுங்கும் குளிர் நிலவும் பகுதி ஆகும். அண்டார்டிகாவிலேயே குளிர் நடுக்கி எடுக்கும். அங்கும் குளிர் அளவு அதிகமான பகுதி இருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். 1983 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 21 ஆம் தேதி இந்த கணக்கு எடுக்கப்பட்டது.
இடியை உருவாக்குவது எது?
மின்னல் என்று நீங்கள் நினைத்தால், அது சரிதான். மின்னல் வெட்டும் பகுதியை சுற்றிலும் உள்ள காற்று. சூரியனின் வெப்ப நிலையைப் போல 5 மடங்கு அதிகமாக வெப்பமடைகிறது. ஒலியின் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் இந்த வெப்பம் விரைவாக பரவுகிறது. இந்த வெப்பம் காற்றை அழுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதுதான் நமக்கு இடியாக கேட்கிறது.

பாறைகள் மிதக்குமா?


எரிமலை வெடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எரிமலையில் இருந்து வெளிப்படும் லாவா குழம்பிலிருந்து ஒருவிதமான வாயு அதிரடியாக பிரிகிறது. அந்த வாயு பியூமைஸ் என்று அழைக்கப்படும்  பாறைபோல உருவாகிறது. அது வாயுவை உள்ளடக்கிய குமிழ்கள் என்பதுதான் உண்மை. அவற்றில் சில மிதக்கும் என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.

பாறைகள் வளருமா?


ஆம். ஆனால், பாறைகள் வளருவதை கவனிப்பதை விட பெயிண்ட் உறைவதை கவனிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். கடலுக்கு அடியில் உள்ள மலைகளில் இரும்பு மாங்கனீசம் அடங்கிய பாறைகள் உள்ளன. இரும்பும் மாங்கனீசும் இந்தப் பாறைகளை வளரச் செய்கிறது. அதன் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் தெரியுமா? 10 லட்சம் ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டர்!
நமது விரல் நகம் வளரும் வேகம் தெரியுமா? இரண்டு வாரங்களில் ஒரு மில்லிமீட்டர்!

நமது பூமி மீது விழும் விண்வெளி தூசு எவ்வளவு தெரியுமா?


இது சம்பந்தமான அளவுகள் வேறுபடுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆய்வு நிறுவனம் ஒரு அளவை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரம் டன் தூசு விண்வெளியிலிருந்து பூமியில் கொட்டுவதாக அது கூறியுள்ளது. இன்னொரு குழு ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வின்வெளியிலிருந்து மைக்ரோப்ஸ் மழை கொட்டுவதாக அது கூறுகிறது. இந்த மழை ஃப்ளூ காய்ச்சலுக்கு காரணமாக இருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது. எனினும் இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை.

காற்றுமூலம் பரவும் பூமியின் தூசு எவ்வளவு?


1999 ஆம் ஆண்டு அமெரிக்கச் சுற்றுச்சூழல் துறை ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து காற்றுமூலம் புளோரிடா மாநிலத்தில் கொட்டும் தூசு அளவு அதிகரித்திருப்பதாக அதில் கூறப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தின் காற்று சுவாசத் தரத்தை இழந்து வருவதாகவும் அது தெரிவித்தது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்த தூசு காற்றில் 20 ஆயிரம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புளோரிடாவில் வந்து விழுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவிலிருந்தும் இதுபோல காற்றுமூலம் அமெரிக்காவில் தூசு வந்து குவிவதாக குறைகூறப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள தூசு காற்றில் பறந்து வெளியேறாதா என்பது குறித்து ஆய்வேதும் நடத்தப்படவில்லை.

உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எங்கே இருக்கிறது?



தென் அமெரிக்காவில் உள்ள வெனிசூலாவில் 3 ஆயிரத்து 212 அடி உயரத்திலிருந்து ஒரு அருவி கொட்டுகிறது. அதன் பெயர் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
இரண்டு பெரிய அமெரிக்க நகரங்கள் இணையப் போவதாக கூறுகிறார்களே. அந்த நகரங்கள் எவை?

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வடக்கிலிருந்து தெற்காக சான் ஆண்ட்ரியஸ் என்ற இணைப்புத் தட்டு  இருக்கிறது. அது ஆண்டுக்கு இரண்டு அங்குலம் என்ற விகிதத்தில் சுருங்குகிறது. இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சான் பிரான்சிஸ்கோ நகரை நோக்கி நகருகிறது. இன்னும் ஒன்றரைக் கோடி ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர்ப் பகுதியாக மாறிவிடும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பூமி ஒரு கோளமா?

பூமி சுற்றுவதால் அது கோளமாகிறது. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பூமி மிகவும் இளக்கமாக இருக்கிறது. பூமியின் மத்திய பகுதி வீங்குகிறது. அதன்காரணமாக பூசணிக்காய் வடிவில் அது மாறுகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த வீக்கம் குறைந்து வந்தது. ஆனால், இப்போது அது மீண்டும் வளருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியின் துருவங்களில் உள்ள பனிமலைகள் உருகுவதால்தான் இந்த வீக்கம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பூமியில் 100 பவுண்டு எடையுள்ள மனிதன் செவ்வாயில் என்ன எடை இருப்பான்?


பூமியில் கடல் மட்டத்தில் உள்ள ஈர்ப்பு விசையைப்போல செவ்வாயின் ஈர்ப்பு விசை 38 சதவீதமாக இருக்கிறது. எனவே, பூமியில் 100 பவுண்டு எடையுள்ள மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் 38 பவுண்டாக இருப்பான். பல பத்தாண்டுகளுக்கு முன்னரே இது நிரூபிக்கப்பட்டு விட்டது. விரைவில் செவ்வாயில் மனிதன் தனது ஆய்வுகளைத் தொடங்கும்போது இது தெளிவாகிவிடும்.

ஒரு செவ்வாய் ஆண்டு என்பது எவ்வளவு?

நீங்கள் செவ்வாயில் இருந்தால் அங்கும் பூமியைப் போல ஒரு ஆண்டு தான். ஆனால், பூமியைப் போல இருமடங்கு நாட்கள் அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. செவ்வாயின் வேறுபட்ட சுழல்தன்மை காரணமாக அங்கு காலண்டர் தயாரிக்கப்பட்டால் 670 நாட்கள் கொண்டதாக இருக்கும். பூமிக்கு ஒரு நிலவு இருப்பதால் மாதத்தை எளிதில் கணக்கிட முடிகிறது. இரண்டும் இரண்டுக்கு மேலும் நிலவுகள் இருந்தால் எப்படி மாதம் கணக்கிடுவது?

செவ்வாயில் ஒரு நாள் என்பது எவ்வளவு?

செவ்வாயில் மனிதர்கள் வாழ்ந்தால், அவர்கள் உழைப்பதற்கும் தூங்குவதற்கும் நம்மைக் காட்டிலும் அரைமணி நேரம் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். பூமியில் ஒரு நாள் என்பது 23 மணி 56 நிமிடங்கள். செவ்வாயிலோ 24 மணி 37 நிமிடங்கள். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களும் தங்களை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவை நாள் எனக் கணக்கிடுகிறோம். அதாவது சூரியன் எப்போது உதிக்கிறது. சூரியன் எப்போது மறைகிறது என்பதை வைத்தே நாள் கணக்கிடப்படுகிறது.

பூமியின் மிகப்பெரிய எரிமலை எது?

ஹவாய் தீவில் உள்ள மவ்னா லோவா என்ற எரிமலைக்குத்தான் அந்தப் பெருமை கிடைக்கிறது. தரையிலிருந்து 50 ஆயிரம் அடிவரை இது உயர்ந்து நிற்கிறது. அதாவது ஒன்பதரை மைல் அல்லது 15.2 கிலோமீட்டர் உயரம். இதன் அடிப்பாகம் கடலுக்கு அடியில் இருக்கிறது.
செவ்வாயில் உள்ள ஒலிம்பஸ் மோன் எரி மலையின் உயரம் எவ் வளவு தெரியுமா? 26 கிலோமீட்டர். அந்த எரிமலையின் அடிப் பாகம் மட்டும் அமெ ரிக்காவின் அரி ஸோனா மாநிலத்தின் பரப்பளவுக்கு இருக் கும்.

உலகில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் பயங்கரமானது எது?

1557 ஆம் ஆண்டில் சீனாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம்தான் மிகப் பயங்கரமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மென்மையான பாறைகளில் உருவாக்கப்பட்ட குகைகளில் மனிதர்கள் வசித்த பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 8 லட்சத்தும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதையடுத்து 1976 ஆம் ஆண்டு சீனாவின் டாங்ஷான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் என பதிவாகி இருக்கிறது.

மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எது?

தென் அமெரிக்க நாடான சிலியில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதுவரை பூமியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சக்திவாய்ந்தது. சிலியின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.6 என்று பதிவாகியது. பூமியின் இணைப்புத் தட்டு ஒன்றை ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்திற்கு சிதைத்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டுமான தொழில்நுட்பம் நவீனப்படுத்தப் பட்டது.

பயங்கரமான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் எது? 

ஜப்பானில் உள்ள கோபேயில் ஏற்பட்ட நிலநடுக்கமா? கலிபோர்னியாவில் உள்ள நார்த்ரிட்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கமா?
1994 ஆம் ஆண்டு நார்த்ரிட்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.7 மட்டுமே. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமாராக 60 மட்டுமே. ஆனால், 9 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 4 ஆயிரம் கோடி டாலர் பொருளாதார சேதம் ஏற்பட்டது. ஜப்பானில் உள்ள கோபேயில் 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.8. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 530. 37 ஆயிரம் பேர் காயமடைந்தனர். பொருளாதார இழப்பு ஒரு லட்சம் கோடி டாலர்.
பூமியின் மையப் பகுதி எவ்வளவு தொலைவில் உள்ளது?
பூமியின் மேற்பகுதியில் இருந்து மையத்திற்கு செல்ல 6 ஆயிரத்து 378 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பூமியின் பெரும்பகுதி கொழகொழப்பானது. நீர்த்தன்மை மிக்கது. பூமியின் கெட்டியான மேல்பகுதி வெறும் 66 கிலோமீட்டர் மட்டுமே. இது ஆப்பிள் பழத்தின் தோல் எவ்வளவு மெல்லி யதோ அந்த அளவுதான் இது.

பூமியின் உயரமான மலை எது?

இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் இருக்கிற பகுதிதான் உயரமான மலை என்று மலையேற்ற நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாளம்-திபெத் பகுதியில் உள்ள இந்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 9 கிலோமீட்டர் அல்லது 29 ஆயிரத்து 35 அடி. 1999 ஆம் ஆண்டு இதன் உயரத்தை செயற்கைக் கோள் உதவியுடன் அளந்தபோது 7 அடி அதிகரித்திருந்தது. ஏனென்றால் இமயமலை நமது நகம் வளரும் வேகத்தில் வளரந்து கொண்டிருக்கிறது.

நமது நிலா இப்போது போல எப்போதும் நெருங்கியே இருக்குமா?

100 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்போதைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருந்தது நிலா. பூமியை அது மிக நெருக்கமான சுற்றுப்பாதையில் சுற்றியது. பூமியை சுற்றிவர அது 20 நாட்களை எடுத்துக் கொண்டது. அப்போது பூமியின் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. நிலா இப்போதும் நம்மை விட்டு தொலைவில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு 4 செண்டிமீட்டர் என்ற விகிதத்தில் அது விலகிச் செல்கிறது. அதேசமயம் பூமியின் சுழற்சி வேகமும் குறைகிறது. எதிர்காலத்தில் பூமியின் ஒரு நாள் என்பது 960 மணி நேரமாகக் கூடும்!

பூமியின் மிகக் தாழ்வான உலர்பகுதி எங்கே இருக்கிறது?

மத்தியக் கிழக்கில் உள்ள மரணக் கடலின் கரையோரப் பகுதியை குறிப்பிடலாம். அது கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 300 அடி தாழ்வாக அமைந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மரணச் சமவெளியில் அமைந்துள்ள பேட் வாட்டர் என்ற இடத்தை இரண்டாவதாக கூறலாம். அது கடல் மட்டத்திலிருந்து 282 அடி தாழ்வாக அமைந்திருக்கிறது.

கலிபோர்னியா இன்னும் அடியில் மூழ்கும் என்பது சரியா?

இந்தக் கேள்வி அமெரிக்கா முழுவதும் அவ்வப்போது எழுகிறது. கலிபோர்னியாவில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அந்த மாநிலத்தின் நிலப்பகுதி ஆண்டுக்கு 4 அங்குலம் கீழே இறங்குகிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் கடுமையாக சேதமடையும்.

உலகின் மிக நீளமான நதி எது?

ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி மிக நீளமானது. அது 6 ஆயிரத்து 695 கிலோமீட்டர் நீளமுள்ளது. அமெரிக்காவில் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் மாநிலம் எது?
அலாஸ்கா மாநிலம். இந்த மாநிலம் ஆண்டுக்கு 7 முறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை 8ம் அதற்கு மேலுமான ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்படுகிறது. புளோரிடா, வடக்கு டகோட்டா ஆகியவை இதைக்காட்டிலும் குறைவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. நியூயார்க்கிலும் ஒரளவு நிலநடுக்க பாதிப்பு இருக்கிறது.

பூமியின் மிகக் காய்ந்த பகுதி எது?

சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியை கூறலாம். இங்கு ஆண்டுக்கு சராசரியாக 0.76 மில்லிமீட்டர் அளவுதான் மழை பெய்கிறது. இந்த விகிதத்தில் மழை பெய்தால் ஒரு காபி கோப்பையை நிரப்புவதற்கு ஒரு நூறு ஆண்டு ஆகும்.

நிலச்சரிவு எதனால் ஏற்படுகிறது?

மிகக் குறைந்த கால அளவில் தொடர்ச்சியான மழை பெய்வது நிலச்சரிவுக்கு காரணமாகிறது. தரையின் மேல்பகுதி இளகி நகர்கிறது. அதுபோல மெதுவாகவும் சீராகவும் பெய்யும் மழையும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நிலச்சரிவு ஏற்படும். அமெரிக்காவில் மட்டும் நிலச்சரிவு காரணமாக ஆண்டுக்கு 200 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சான் பிரான்சிஸ்கோ நகரில் வரலாறு காணாத புயல் ஏற்பட்டது. ஒரே இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்தனர். 6 கோடியே 60 லட்சம் டாலர் இழப்பு ஏற்பட்டது.

சேறு எவ்வளவு வேகமாக நகரும்?

மண் சரிவு காரணமாக சேறு வேகமாக நகரும். மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் அது நகரும்.

பூமியின் மையப் பகுதியிலும் இதுபோல நகர்வுகள் இருக்குமா?

பூமியின் மையப் பகுதி உருகிய நிலையிலான பொருட்களால் ஆனது. அதைச் சுற்றிலும் உள்ளவை அனைத்தும் இயற்கையாகவே சுழல்கின்றன. சூறாவளி போல அந்த சுழற்சி இருப்பதாக விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி வேறு வகையிலும் சுழல்வதை இன்னொரு கேள்விக்கான பதிலில் தெரிந்து கொள்வீர்கள்.

பூமியின் மிக ஈரமான பகுதி எது?

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டின் லியோரோ என்ற இடம்தான் மிக ஈரமான பகுதி. இங்கு ஆண் டுக்கு 40 அடி என்ற அளவில் மழை பெய்கிறது. இது ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மிக ஈரமான முக்கிய நகரங்களை விட 10 மடங்கு அதிக ஈரமானதாகும்.

நிலாவைப் போல பூமியும் பகுதி பகுதியாக மறைந்து தென்படுமா?

செவ்வாயிலிருந்து பார்த்தால் நிலாவைப் போல பூமியும் பகுதி பகுதியாக தெரியும். வெள்ளி கிரகம் நமக்கு பகுதி பகுதியாக தெரிவதைப் போல. செவ்வாயின் சுற்றுப் பாதைக்குள் பூமி அமைந்துள்ளது. இரண்டுமே சூரியனை சுற்றி வருகின்றன. ஆண்டு முழுவதும் நமது பூமி மீது சூரிய வெளிச்சம் பல கோணங்களில் பட்டுத் தெறிக்கிறது. செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் விண்கலங்கள் எடுத்தனுப்பிய பூமியின் படங்கள் இதைத் தெளிவு படுத்துகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...