Oct 10, 2012

ஆஸ்திரேலியத் தீவுகள்.

Picture


                          ஆஸ்திரேலியத் தீவுகள் நோர்ஃபோக் தீவு (Norfolk Island, என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும். நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 மீ உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் கமத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு பிலிப் தீவாகும். இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
                                பிரித்தானிய நாட்டுப்பண் "கடவுள் எம் அரசியைக் காப்பாற்றுகிறார்” (God Save the Queen), அல்லது "கடவுள் எம் அரசரைக் காப்பாற்றுகிறார்” (God Save the King), என்பது பிரித்தானியாவில் ஆளுகைக்கு உட்பட்ட பல பொதுநலவாய நாடுகளின் நாட்டுப்பண் ஆகும். இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் பிராந்தியங்கள், நோர்போக் தீவு ஆகியவற்றின் நாட்டுப்பண் ஆகும். நியூசிலாந்து (1977 முதல்), கேமன் தீவுகள் ஆகியவற்றின் இரண்டு நாட்டுப்பண்களில் ஒன்றாகவும், கனடா (1980 இலிருந்து), ஆத்திரேலியா (1984 இலிருந்து), கிப்ரால்ட்டர், மாண் தீவு, யமேக்கா, துவாலு ஆகிய நாடுகளின் அரசருக்குரிய பண் ஆகவும் விளங்குகின்றது. இப்பாடலை இயற்றியது யார் என்பது தெரியவில்லை.
                                ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம் (Territory of Ashmore and Cartier Islands) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் தீவுக் கூட்டம் ஆகும். ஆஸ்திரேலியாவினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், இந்தோனீசியாவின் ரோட்டி தீவின் தெற்கேயும் அமைந்துள்ளன. இப்பிரதேசம் ஆஷ்மோர் கற்பாறை (Ashmore Reef), (கிழக்கு குறுந்தீவுகள்) மற்றும் கார்ட்டியர் தீவு (70 கிமீ கிழக்கே) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாறைகள் மற்றும் குடாக்களிடையே 199.45 கிமீ² பரப்பளவையும், வெற்று நிலம் 114,400 மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது. 74.1 கிமீ நீள கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இங்கு துறைமுகங்கள் எதுவும் இல்லை. ஆஷ்மோர் கற்பாறைக்கு 42 கிமீ தூரத்தில் உள்ள ஹைபேர்ணியா கற்பாறை இப்பிரதேசத்தில் அடங்கவில்லை. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் இருந்து சட்டமா அதிபர் திணக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்படை, மற்றும் வான்படை இங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்.
                                 ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 square kilometres (144 sq mi) ஆகும்.
                                 கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படு சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பானது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன.கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% வை மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.
                                  கொகோசு (கீளிங்) தீவுகள்அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீளிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும். இங்கு இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலிள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவான மத்தியில் புவியியல் ஆள்கூறுகள் அமைந்துள்ளன.
                                    டிவி தீவுகள்(Tiwi Islands) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் நகரில் இருந்து 880 கிமீ வடக்கே, அரபூரா கடலுக்கும் திமோர் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தில் கிழக்கே மெல்வில் தீவு, மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு ஆகிய தீவுகள் ஆப்சிலி நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவுகளில் பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்னர் இருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பண்பாடு மற்றும் மொழி ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களினதையும் விட வித்தியாசமானவை. கிட்டத்தட்ட 2,500 டிவி மக்கள் இங்கு வருகின்றனர். 1996 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,033 ஆக இருந்தது. இவர்களில் 93.8 விழுக்காட்டினர் பழங்குடிகள். இவர்களில் பெரும்பாலானோரின் முதல் மொழி டிவி, இரண்டாவது மொழி ஆங்கிலம் ஆகும். 1912 ஆம் ஆண்டில் இத்தீவுகள் பழங்குடியினரின் சிறப்பு நிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் உரிமை டிவி பழங்குடிகளின் நில அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. 2001 ஜூலை 12 இல் இங்கு உள்ளூராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
                                   டொரெஸ் நீரிணைத் தீவுகள்(Torres Strait Islands) என்பது ஆஸ்திரேலியா கண்டத்தின் வடமுனையில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்தையும் நியூ கினி தீவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 274 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இவை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அடங்கும் தீவுகளாகும். டொரெஸ் நீரிணை வட்டார ஆணையத்தின் நிர்வாகத்தில் இங்கு வாழும் பழங்குடியினரான மெலனீசியர்களுக்கு சிறப்பு நில உரிமை அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் ஜூலை 1, 1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. குயின்ஸ்லாந்தின் பொசெசன் தீவில் முதன்முதலாக இங்கிலாந்து மாலுமி ஜேம்ஸ் குக் 1770 இல் தரையிறங்கி அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியை பிரித்தானியப் பேரரசுக்காக உரிமை கோரினான். அதன் பின்னர் லண்டன் சமயப் பிரசாரகரான வண. சாமுவேல் மக்ஃபார்லேன் டொரெஸ் நீரிணையின் டார்ன்லி தீவில் 1871, ஜூலை 1 இல் வந்திறங்கினார். இந்நாளை அத்தீவு மக்க "வெளிச்சத்தின் வரவு" என அறிவித்து ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். டொரெஸ் நீரிணைத் தீவுகள் 1879 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்பட்டது. பப்புவா நியூ கினி 1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியபோது இத்தீவுகளின் நிலை பிரச்சீனைக்குள்ளாகியது. இத்தீவு மக்கள் தம்மை ஆஸ்ட்திரேலியர்கள் என அடையாளப்படுத்தினாலும் பப்புவா நியூ கினி அரசு நீரிணையின் முழு உரிமையையும் ஆஸ்திரேலியாவுக்குத் தர மறுத்தது. இது குறித்த உடன்பாடு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, தீவுகளும், அதன் மக்களும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தம் எனவும், கடல் பிரதேசங்கள் இரு நாடுகளுக்கும் பகிரப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது. நீரிணையின் வளங்கள் இரு நாடுகளினதும் நிர்வாகத்தில் பங்கிடப்படுகின்றன. 1982 இல் எடி மாபோ மற்றும் நான்கு டொரெஸ் நீரிணை பழங்குடியினர் (மறி தீவு) தமக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்திலும், பின்னர் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். 1992 இல் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறப்பட்டது. குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்படு முன்னரிலிருந்து மேர் மக்கள் தமக்கென நிலங்களை வைத்திருந்ததாக தீர்ப்பளிகக்ப்பட்டது. இத்தீவுகள் மொத்தம் 48 000 கிமீ² பரப்பளவைக் கொண்டது. கேப் யோர்க்கில் இருந்து நியூ கினி வரையான மிகக்கிட்டவான தூரம் கிட்டத்தட்ட 150 கிமீ. இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் பொதுவாக பப்புவா நியூ கினியின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்தவர்கள். இதனால் இவர்கள் ஏனைய ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் இருந்து வேறுபட்டுள்ளார்கள். இதனால் இவர்கள் டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள். 2001 ஆஸ்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மக்கள் தொகை 8,089 ஆக இருந்தது. இவர்களில் 6,214 பேர் பழங்கிடியினர் ஆவர்.
                                   பவளக் கடல் தீவுகள் பிரதேசம்(Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
                          பாத்தர்ஸ்ட் தீவு (Bathurst Island, 2,600 சதுர கிமீ அல்லது 1,000 சதுர மைல், 11°35′S 130°18′E / -11.583, 130.3) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. (கனடாவில் உள்ள பாத்தர்ஸ்ட் தீவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது). இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர்.1910 முதல் 1938 வரையான காலப்பகுதியில் இங்கு ரோமன் கத்தோலிக்க மிசனறியான பிரான்சிஸ் சேவியர் கிசெல் என்பவர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் "150 மனைவிகளின் ஆயர்" என அழைக்கப்படுகிறார். இவர் இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் பழங்குடியினரின் வழக்கப்படி முதியவர்களுக்கு வாழ்க்கைத்துணையாகக் காத்திருந்த இளம் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒத்த வயது ஆண்களுக்குத் திருமணம் செய்வித்தார். பாத்தர்ஸ்ட் தீவின் மிகப்பெரும் குடியேற்றப்பகுதி "நியூ" (Nguiu). இங்கு 1,450 பேர் வசிக்கின்றனர்[2]. இது இத்தீவின் தென்கிழக்கு முனையில் டார்வின் நகரில் இருந்து 70 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரும் நகரம் "வுரக்கூவு". இங்கு 50 பேர் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக "4 மைல் முகாம்" என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது.
                                  மெல்வில் தீவு(Melville Island) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். மெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ². மெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது. 1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது. இதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது.
                                லோர்ட் ஹாவ் தீவு (Lord Howe Island, (ஒலிப்பு:/ˈhaʊ/) என்பது ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 600 கிமீ (370 மைல்) கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. லோர்ட் ஹாவ் தீவுகளின் கூட்டத்தில் 20 கிமீ தென்கிழக்கே உள்ள போல் பிரமிட் உம் அடங்கும்[6]. இத்தீவுக் கூட்டம் லோர்ட் ஹாவ் தீவுச் சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வமைப்பானது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 175 உள்ளக அமைப்புகளில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகளுள் அடங்காது. எனவே இது "இணைக்கப்படாத பகுதி" (unincorporated area) என அழைக்கப்படுகிறது. இத்தீவுச் சபையினால் தன்னாட்சி முறையில் ஆளப்படுகிறது. லோர்ட் ஹாவ் தீவு அதன் தனித்தன்மையான அழகிற்காகவும், இங்குள்ள பல்லின உயிரினங்களுக்காவும், இத்தீவு உலகப் பாரம்பரியக் களமாக 1982 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இத்தீவின் பொதுவான நேர வலயம் UTC+10:30. கோடை நேர பகலொளி சேமிப்புக் காலத்தில் அரை மணி நேரம் முன் தாள்ளப்படும் (UTC+11)[8]. லோர்ட் ஹாவ் தீவு 1788, பெப்ரவரி 17 ஆம் நாள் லெப். ஹென்றி லிட்ஜ்பேர்ட் போல் என்பவர் தலைமையிலான "எச்எம்எஸ் சப்ளை" என்ற கப்பல் மாலுமிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அந்நேரம் பொட்டனி விரிகுடாவில் இருந்து நோர்போக் தீவுக்கு குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு அங்கு குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிக்கச் செல்லும் வழியில் இத்தீவைக் கண்டுபிடித்தார். திரும்பி வரும் வழியில் 1788 மார்ச் 13 ஆம் நாளில் தனது சிறு குழுவொன்றை அத்தீவுக்கு அனுப்பினார். மனிதவாழ்வற்ற தீவாக அது அப்போது இருந்தது. அத்துடன் தெற்கு பசிபிக்கின் பொலினீசிய மக்கள் எவரினதும் காலடி பட்டிருக்கவில்லை. இப்பகுதியில் உள்ள லிட்ஜ்பேர்ட் மலை, போல் பிரமிட் ஆகியன இவரது நினைவுப் பெயர்களாகும். இத்தீவின் பெயர் முடியரசின் முதலாவது பிரதிநிதி (1st Earl) ரிச்சார்ட் ஹாவ் என்பாரின் நினைவாகச் சூட்டப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...