Oct 10, 2012

இந்தியத் தீவுகள்.

Picture


                                  இந்தியத் தீவுகள்
                                  அந்தமான் தீவுகள்என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். போர் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள இந்திரா முனைஎன்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும்.
                                     லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 32 கிமீ² பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும்.
                                   நிக்கோபார் தீவுகள்(Nicobar Islands) இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1,300 கிமீ தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தி அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர். 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள். நிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். "நிக்கோபார்" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த "நக்கவரம்" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது.
                                        இத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் "பிரெடெரிக்சோர்ன்" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது. கடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது. 2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது. 2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (Tribal Pass) பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
                                        பாம்பன் தீவு(Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேஸ்வரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும். பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தெந்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேஸ்வரம் வரை 2 கிமீ முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது. பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேஸ்வரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேஸ்வரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம், இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேஸ்வரத்தில் உள்ளது. இராமேஸ்வரம் பாம்பன் நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
                                       சாகோஸ் தீவுக்கூட்டம்(Chagos Archipelago) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவை முன்னர் எண்ணெய்த் தீவுகள் (Oil Islands) என அழைக்கப்பட்டன. இவை தமிழில் பேகான தீவுகள் என்றும் திவெயி மொழியில் ஃபேகண்தீபு எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சிறு வெப்பவலயத் தீவுகளைக் கொண்ட ஏழு பவளத்தீவுக் கூட்டங்கள் (atolls) உள்ளன. பேகான தீவுகள் மாலைதீவுகளில் இருந்து தெற்கே 500 கிமீ (300 மைல்கள்) தூரத்திலும், இந்தியாவில் இருந்து தென்மேற்கே 1600 கிமீ (1000 மைல்) தூரத்திலும், தான்சானியாவுக்கும், ஜாவாவிற்கும் இடைநடுவீல் அமைந்துள்ளன. இப்பகுதி அதிகாரபூர்வமாக பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தைச் சேர்ந்ததாகும். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு சாகோசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் பிரித்தானியரும் அமெரிக்கரும் 1960களில் இவர்களை விரட்டிவிட்டு இங்குள்ள மிகப் பெரிய தீவான டியேகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை அமைத்தனர். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 63.17 கிமீ² ஆகும். டியேகோ கார்சியா தீவின் பரப்பு 27.20 கிமீ². இவற்றின் மொத்தப் பரப்பளவு (வளைகுடாக்கள் உள்ளிட்டவை) 15,000 கிமீ² ஆகும். இங்குள்ள ஏழு பெரிய தீவுகள்:
டியேகோ கார்சியா (Diego Garcia) டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.
எக்மொண்ட் தீவுகள் (Egmont Islands)
பெரோஸ் கரை (Peros Banhos)
சாலொமன் தீவுகள், (Salomon Islands)
பெரும் சாகோஸ் கரை (Great Chagos Bank)
பிளென்ஹைம் பாறை (Blenheim Reef)
பேச்சாளர் கரை (Speakers Bank)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...