Oct 10, 2012

இந்தோனேசியாவின் தீவுகள்.


Picture

                                 
இந்தோனேசியாவின் தீவுகள் போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய தீவாக இது அறியப்படுகிறது. இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை ஆகியவ்ற்றால் சூழ்ந்துள்ளது. போர்ணியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.
                                  சரவாக் (Sarawak) போர்ணியோ தீவில் உள்ள இரண்டு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். மற்றையது சாபா ஆகும். பூமி கென்யாலங் (‘ஹோர்ன்பில்களின் நிலம்’) என அழைக்கப்படும் சரவாக், போர்ணியோ தீவில் வட-மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான சாபா தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரமான கூச்சிங்கின் மக்கள் தொகை 579,900 (2006 கணக்கெடுப்பின் படி) ஆகும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம்-அல்லாதோர் ஆவர். இங்கு கிட்டத்தட்ட 30 மலே அல்லாத பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்ணியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டது. 1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்திறங்கினான். இவன் வந்த காலத்தில் அங்கு தயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினான். புரூக் சூல்தானுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டான். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் 1841, செப்டம்பர் 24 இல் ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநர் ஆக்கினான். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்து அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினான். 1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டான். அவன் 1868 இல் இறக்கும் வரை சரவாக்கை ஆட்சி செய்தான். அதன் பின்னர் அவனது மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தான். புரூக் வம்சம் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப்புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும் அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. தாயக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை இராசாக்கள் விரும்பவில்லை. சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்ணியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்ணியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தான். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தான். லகப் போரின் முடிவில் நாட்டில் இருந்து தப்பியோடினான். பதினேழு ஆண்டுகளின் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவன் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டான். மலே மக்கள் சரவாக் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டினர். சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் படுகொலை செய்யப்பட்டார். சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
                                        
 மலுக்கு தீவுகள்(Maluku Islands) எனப்படுபவை இந்தோனேசியாவில், குறிப்பாக மலே தீவுக்கூட்டத்தில் காணப்படும் தீவுகள் ஆகும். இவை மொலுக்காஸ், மொலுக்கன் தீவுகள், ஸ்பைஸ் தீவுகள் அல்லது மலுக்கு எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக்கு கிழக்கே, நியூ கினிக்கு மேற்கே, திமோரிக்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக சீனர்களாலும், ஐரோப்பியர்களாலும் இது இவை ஸ்பைஸ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தன. இங்குள்ள பெரும்பாலான தீவுகள் மலைகளையும் குமுறும் எரிமலைகளையும் கொண்டுள்ளன. ஈரப்பாங்கானவை. மழைக்காடுகள் பல உள்ளன. உணவு வாசனைப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் மெலனீசியர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருந்தாலும், பல தீவுப்பகுதி மக்கள், குறிப்பாக பண்டா தீவுகளில் வாழ்ந்த மக்கள் 17ம் நூற்றாண்டுப் பகுதியில் கொல்லப்பட்டனர். ஆஸ்திரனேசியர்கள் இங்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு ஆட்சிக் காலத்தில் குடியேறினர். இக்குடியேற்றம் பின்னர் இந்தோனீசிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள் இந்தோனீசியாவின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு மலுக்கு, வடக்கு மலுக்கு என இரண்டு இந்தோனீசீய மாகாணங்களாக்கப்பட்டன. 1999 - 2002 காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இங்கு கருத்து வேறுபாடு காரணமாகக் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. மலுக்கு தீவுகளில் மொத்தம் 999 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ2 நிலப்பகுதியையும், 776,500 கிமீ2 கடற் பரப்பையும் கொண்டுள்ளன.
 வடக்கு மலுக்கு மாகாணம்
டேர்னேட், முக்கிய தீவு
பக்கான் ஹல்மஹேரா - 20,000 கிமீ2 மலுக்கு தீவுகளில் பெரியது.
மொரட்டாய்
ஓபி தீவுகள்
 சூலா தீவுகள்
டைடோர் மலுக்கு மாகாணம்
அம்போன் தீவு, முக்கிய தீவு
ஆரு தீவுகள்
பாபார் தீவுகள்
பண்டா தீவுகள்
புரு
காய் தீவுகள்
கிசார் லெட்டி தீவுகள்
சேரம்
டனிம்பார் தீவுகள்
 வெட்டார்
                                           சாவகம்(Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.
                                           சுமாத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.
                                           சுலாவெசி(Sulawesi) இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. போர்னியோ, ஜாவா, மற்றும் சுமாத்திராவுடன் பெரும் சுண்டா தீவுகளில் ஒன்று. இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலவேசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இத்தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
                                            திமோர்(Timor) என்பது திமோர் கடலின் வடக்கில் மலாய் தீவுக்கூட்டத்தின் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு கிழக்கு திமோர் என்ற தனிநாட்டையும் இந்தோனீசியாவைச் சேர்ந்த மேற்கு திமோரையும் தன்னகத்தே கொண்டுள்ளது. திமோர் தீவின் தெற்கு, மற்றும் தென்கிழக்கே ஓசியானியாவும், வடமேற்கே சுலாவெசி தீவும் மேற்கே சும்பா தீவும் அமைந்துள்ளன. திமோரின் மேல்-வடமேற்கே புளோரஸ் தீவுகள், அலோர் தீவு ஆகியனவும், வடகிழக்கே பாரத் தாயா தீவுகளும் உள்ளன. பெரும்பாலான திமோரியர்கள் மெலனேசியர்கள் ஆவார்[1]. மொத்தம் 11 இனக்குழுக்கள் இங்குள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் மேற்கு திமோரில் வசிக்கும் அட்டோனி, மற்றும் நடு, கிழக்கு திமோரில் வசிக்கும் டேட்டம் இனத்தவர்கள் ஆவர்[2]. பெரும்பாலும் திமோரின் பழங்குடியினரின் மொழிகள் இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களில் பேசப்படும் ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவற்றைச் சாராத மொழிகள் மலுக்கு தீவுகளிலும் மேற்கு நியூ கினியிலும் பேசப்படுகிறது[3]. கிழக்கு திமோரில் டேட்டம், மற்றும் போர்த்துக்கீச மொழியும், மேற்கு திமோரில் இந்தோனீசிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். ஆனாலும் கிழக்கு திமோரில் இந்தோனீசிய மொழி பரவலாகப் பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றாகும். இத்தீவின் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் கிழக்கு திமோரில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர்கள் ஆவார். மேற்கு திமோரில் புரட்டஸ்தாந்து பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏனையோர் முஸ்லிம்கள் ஆவார்.
                                             நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின் முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.
                                              பாலி (Bali) என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
                                              மென்டவாய் தீவுகள் (Mentawai Islands) இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருட் (4,030 கிமீ²) என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக்கிய தீவுகள். இத்தீவுகள் சுமாத்திராக் கரையில் இருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் மென்டவாய் நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இத்தீவுகளின் பழங்குடி மக்கள் மென்டவாய் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். சுற்றுலாத் துறைக்கு, குறிப்பாக கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு இத்தீவுகள் பேர் பெற்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...