Jun 9, 2012

முதல் தனியார் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது




உலகின் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. இதுவரை உலக நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமே செயற்பட்டுவந்த விண்வெளி ஆய்வுத்துறையில் முதல்முறையாக தனியார் துறை அடியெடுத்து வைத்திருக்கிறது.
முதல்முறையாக தனியார் ராக்கெட், அதாவது ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வானுக்கு செவ்வாயன்று காலை
ஏவப்பட்டது.
வான்வெளியிலிருந்தபடி பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துச்செல்லும் விண்கலத்தை இந்த ராக்கெட் சுமந்து சென்று விண்ணில் விட்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் மனிதர்கள் யாரும் பயணிக்கவில்லை.
ஆரம்பத்தில் இந்த ஏவுகணை கடந்த சனிக்கிழமை ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்த ஏவுகணை கடைசி நொடியில் ஒத்திவைக்கப்பட்டது.
அந்த குறிப்பிட்ட தொழில்நுட்பக்கோளாற்றை சரிசெய்த நிலையில் செவ்வாயன்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கெனவ்வெரல்லில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக வானுக்கு ஏவப்பட்டது.
இந்த ஏவுகணை சுமந்து சென்ற விண்கலம் தற்போது வெற்றிகரமாக விண்ணில் இறக்கிவிடப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தனியார் துறையை ஊக்குவிக்க நாசா திட்டம்
ஸ்பேஸ் எக்ஸ் என்ற கலிபோர்னிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தேவையான உணவும் உபகரணங்களுமாக சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்கிறது.
இதுவரை காலமும் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாசா அமைப்பு மட்டுமே அமெரிக்காவின் விண்வெளி பயணங்களை மேற்கொண்டு வந்தது.
ஆனால் இன்றைய பரிசோதனை வெற்றிபெற்றிருப்பதைத் தொடர்ந்து நாசா படிப்படியாக தனது பணிகளில் சிலவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு விண்கலங்களை இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க நாசா அமைப்பு விரும்புகிறது. அதற்கான பரிசோதனை முயற்சிதான் இன்றைய தனியார் ஏவுகணை மற்றும் விண்கலத்தின் சோதனை ஓட்டம்.
இன்று விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்ட சரக்கு விண்கலம் அடுத்த இரண்டு நாட்கள் விண்வெளியில் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.
அது அங்கே சென்று அடைந்ததும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை நிறுத்தி அதில் இருக்கும் சரக்குகளை இறக்கிக்கொண்டு அதை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்புவார்கள். அது மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினால், எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான சரக்குகளை இதன் மூலம் அல்லது இதைப்போன்ற தனியார் விண்கலங்கள் மூலம் அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டிருக்கிறது.
இப்படியான பணிகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் மற்ற கோள்களுக்கு மனிதர்களை அனுப்புவது போன்ற புதிய சவால் மிக்க சோதனைகளில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப் போலவே, வேறு சில தனியார் நிறுவனங்களும் ஏவுகணை மற்றும் விண்கலங்களை தயார் செய்து விண்ணில் ஏவும் முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன.
விர்ஜீனியாவைச் சேர்ந்த ஆர்பிடல் சைன்சஸ் கார்பொரேஷன் என்கிற தனியார் நிறுவனம் வடிவமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணையும் விண்கலமும் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...