Sep 22, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் முற்றுகை

தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தையொட்டி ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். படகுகளும் ரோந்து சுற்றி வந்தன. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும். அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும். கூடங்குளத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து வேண்டும். போராட்ட நடத்திய வரும் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் 8ம் தேதி முதல் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று படகுகளில் கடல் வழியாக சென்று தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்குழுவினர் அறிவித்தனர். இதனால் துறைமுகத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், மரைன் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. இந்த 3 படைகளையும் சேர்ந்த வீரர்கள் 10 படகுகளில் துறைமுகத்திற்குள் ரோந்து சுற்றி வந்தனர். துறைமுகத்தின் வெளிப்புற நுழைவு வாயில் பகுதியில் ராட்ஷத மிதவைகள் மற்றும் கயிறுகள் மூலம் அரண் அமைக்கப்பட்டன. துறைமுகத்திற்குள் படகுகள் நுழைந்து விடாதபடி நுழைவு வாயில் பகுதியில் இழுவை கப்பல்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடியில் உள்ள முக்கிய கடலோர பகுதிகளான திரேஸ்புரம், மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், தெர்மல் நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துறைமுக நுழைவு வாயிலின் 2 பகுதிகளிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் கலவர தடுப்பு வாகனம், ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 10 அடிக்கு ஒருவர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர்.  நுழைவு வாயில் அருகே 2 மரைன் போலீஸ் படகுகள் அங்குமிங்கும் சுற்றி வந்தன. திட்டமிட்டபடி போராட்டக்காரர்கள் நேற்று காலை 8.30 மணிக்கு திரேஸ்புரத்தில் நாட்டு படகுகளிலும், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளிலும் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர். மீனவர்கள் தங்களது படகுகளின் முன்புறம் தேசிய கொடியும், பின்புறம் கறுப்பு கொடியும் கட்டியிருந்தனர். 9.30 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் நுழைவு வாயில் பகுதியை அனைத்து படகுகளும் அடைந்தன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மீனவர்கள் தங்களது படகுகளுடன் துறைமுகத்தை முற்றுகையிட்டனர். கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர் கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகாலையிலேயே புன்னக்காயலில் கூடினர். பின்னர் அங்கிருந்து அணிவகுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் துறைமுகம் நோக்கி வந்தனர். சுமார் 1200 படகுகளில் துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.  கோஷங்கள் எழுப்பியவாறே அங்கேயே சுற்றி வந்தனர். போராட்டத்தால் கடல் பகுதியில் கண்ணுக்குக்கெட்டிய தூரம் வரை படகுகளாகவே காட்சியளித்தன. 2 மணி நேரம் கழித்து தங்களது பகுதிக்கு திரும்பினர். தூத்துக்குடி துறைமுக முற்றுகை போராட்டத்தில் 1000 நாட்டு படகுகளும், 230 விசைப்படகுகளும் பங்கேற்றன. மனிதசங்கிலி: இதற்கிடையே ரோச் பூங்கா, இனிகோ நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் மீனவ பெண்கள், மீனவர்கள், குழந்தைகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கிடையே தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 4 கொடிகம்பங்களை சிலர் வெட்டி சாய்த்தனர். வெட்டி சாய்க்கப்பட்ட கொடிகம்பங்கள் அப்பகுதியில் சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பி அறுந்து, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மீனவர்களின் போராட்டத்தையொட்டி தூத்துக்குடியில் டி.ஐ.ஜி. ஜான்நிக்கல்சன் மற்றும் எஸ்.பி.க்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...