Oct 13, 2012

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி- மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி-
 மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈடிஸ் என்ற வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வு மூலம், தமிழ்நாட்டில் கடந்த சீசனை விட இந்த சீசனில் 4 மடங்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஈடிஸ் கொசுக்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் டெங்கு காய்ச்சல் காரணமாக தினமும் உயிரிழப்பு ஏற்பட்டபடி உள்ளது.

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 3 பேருக்கு டெங்கு வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல் பாதித்த 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு வார்டுகள் தயாராக இருக்கின்றன. சிகிச்சை அளிக்க மருந்து, மாத்திரைகளும் அரசு  ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவிற்கு உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் இன்று பலியானார். அவரது பெயர் சாலமன்ராஜா (வயது 26). சென்னை ஐஸ்அவுஸ் போலீஸ் குடியிருப்பில் தாயார் வசந்தாவுடன் வசித்து வந்தார். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். கடந்த  ஒருவாரமாக கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

சாலமன்ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் இறந்தார். சாலமன்ராஜாவின் தந்தை டேவிட் ஜெயசிங். ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 20 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து போனார். ஒரே மாதத்தில் கணவனையும்,  மகனையும் இழந்த வசந்தா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

டெங்கு காய்ச்சலை தடுக்க சென்னை மாநகராட்சி எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் உயிர் இழப்பு எதுவும் இதுவரை இல்லை. நேற்று வரை 23 பேர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர். கொசுவை ஒழிக்க 15 மண்டலங்களிலும்   இரண்டாயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

வீட்டை சுற்றிலும் உள்ள தேங்காய் சிரட்டை, ஓடுகள், டயர், பூந்தொட்டி போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்காமல் அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...