Jul 22, 2013

20,000 வீடுகள் தரைமட்டம் சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான 2 நிலநடுக்கங்களில் 90 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 20,000 வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளை அகற்ற, அகற்ற சடலங்கள் வந்து கொண்டிருப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று காலை 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் மலைப்பகுதி, பாலைவனம், சமவெளி என்று கலவையான நிலப்பரப்பு உள்ளது. காலை 7.45 மணிக்கும், அதைத் தொடர்ந்து 9.12 மணிக்கும் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால், மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டிங்சி, மாகாணத்தின் தலைநகர் லான்ஜோ ஆகியவற்றில் கட்டிடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு கோபுரங்களில் தானியங்கி கருவிகள் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொண்டதால், தகவல் தொடர்பு சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இடிபாடுகளில் சிக்கி இதுவரை 90 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரை காணவில்லை என்றும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், 20,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இடிபாடுகள் இன்னமும் முழுமையாக அகற்றப்படாத நிலையில், பலர் அதில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளை முழுவீச்சில் சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதற்காக இந்த மாகாணத்துக்கு ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் சீன செஞ்சிலுவை சங்கம் மீட்பு பணிக்காக தன்னார்வ தொண்டர்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் மூலம் 200 கூடாரங்கள், 1,000 குடும்பங்களுக்கு தேவையான அவசரகால பொருட்கள், குளிரை தாங்கக்கூடிய வகையிலான 2,000 ஜாக்கெட்டுகள் ஆகியவற்றையும் செஞ்சிலுவை சங்கம் அனுப்பி வைத்துள்ளது.நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக டிங்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்களை பொது இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்க முடியாத நிலை, மீட்பு படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...