Oct 6, 2012

7000 பேரின் கதி என்ன பாராளுமன்றத்தில் இழு பறி

October 3, 2012
டென்மார்க் பாராளுமன்றம் நேற்று கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆரம்பித்தது, டேனிஸ் பிரதமர் தனது உரையில் பாடசாலைகளை தரமுயர்த்துவது பற்றிய பிரலாபங்களை பொழிந்தாலும் அவை மக்கள் மனங்களை தொட்டதாக தெரியவில்லை.
இன்றைய அதிகாலை செய்திகளில் முக்கிய இடம் பிடித்துக் கொண்டது டவ்பெங்கவை இழந்து கொன்ரன்ற் ஜெல்ப்பிற்கு போகவுள்ள 7000 பேருடைய
தலைவிதியே.
வரும் தை மாதத்துடன் மேற்கண்ட 7000 பேரும் டவ் பெங்கவை இழக்கப்போகிறார்கள், அதன் பின்னர் அவர்கள் கொன்ரன்ற் ஜெல்ப்பிற்கு போக வேண்டிய அவல நிலை உருவாகிறது.
கொன்ரன்ற் ஜெல்ப்பை வழங்குவது நகரசபை நிர்வாகங்களாகும், இவர்கள் கொன்ரன்ற் ஜெல்ப் வழங்க முன்னர் அதைப் பெறும் ஒருவரிடம் இருக்கும் நிலையான, அசையும் சொத்துக்களை மதிப்பீடு செய்வார்கள்.
அப்படி சொத்துக்கள் இருந்தால் முதலில் அவற்றை விற்று சீவித்து, அதுவும் இல்லாதபட்சத்திலேயே கொன்ரன்ற் ஜெல்ப் பெற முடியும்.
தற்போது கொன்ரன்ற் ஜெல்ப் பெறவேண்டிய நிலையில் உள்ளோரில் பலரிடம் கார் உண்டு, சொந்த வீடும் உண்டு.
கொன்ரன்ற்ஜெல்ப் போவதால் அவர்கள் இந்த உடமைகளை இழக்க நேரிடும், ஆகவே அவர்களுடைய வாழ்வில் தேவையற்ற புயல் வீச ஆரம்பிக்கும்.
உண்மையாக நோக்கினால் வேலை இழந்தாலும் நான்கு வருடங்கள் டவ்பெங்க கிடைக்கும், அதற்குள் வேலையாகிவிடலாம் என்று கணிப்பிட்டே இவர்கள் வீடு உட்பட தமது உடமைகளை வாங்கியிருப்பார்கள்.
ஆனால் யாதொரு பொறுப்பும் இல்லாமல் சட்டத்தை சட்டென மாற்றிய அரசு அதற்கு அமைவாக டவ்பெங்கவிற்கு கட்டும் கட்டணத்தை அரைவாசியாகக் குறைத்ததா இல்லை… சரி மறுபடியும் டவ்பெங்க நிலைக்கு வரும் காலத்தை 52 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக குறைத்ததா அதுவும் இல்லை.
அரசு எதையுமே விட்டுக் கொடுக்காமல்.. உழைப்பாளிகளின் முதுகிலேயே விறகுகட்டை குவிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே டவ்பெங்க பெறும் காலத்தை இரண்டு வருடங்களாக குறைத்த சட்டம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை இப்போது அரசு உணர ஆரம்பித்துள்ளது.
இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால் 55 மில்லியன் குறோணரை அரசு உடனடியாக மேசையில் வைக்க வேண்டும்.
அந்தப் பணத்தைத் தேட வேண்டிய யாதொரு பொறுப்பும் இல்லாத என்கில்ஸ்லிஸ்ற் கட்சி ஏற வேண்டிய தூரம் பெரிய மரம்போல இருக்கிறது, அரசு நத்தை வேகத்தில் ஏறுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது, ஆனால் பிரதமரால் இணங்க முடியவில்லை.
இதற்குள் அரசுடன் கூட்டு வைத்து மந்திரிப் பதவியும் பெற்ற எஸ்.எப் கட்சி தலைமைப் பதவியை யாருக்கு வழங்குவதென போராட ஆரம்பித்துள்ளது.
இன்று தனது பேஸ்புக்கில் கருத்துரைத்த முன்னாள் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான வில்லி சுவிண்டேல் புதிதாக வரும் தலைவர் அரசின் திட்டங்களை ஆதரிக்க வேண்டுமென எழுதியுள்ளார்.
ஆனால் அரசுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எஸ்.எப்பின் எதிர்காலமே சுடுகாடாகிவிடுமென அஞ்சியே புதிய தலைமையை உருவாக்கப் போராடுகிறார்கள்.
றடிகல வென்ஸ்ரவுக்கு சரியான பாடம் படிப்பிக்காவிட்டால் அடுத்த தேர்தலில் எஸ்.எப் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிடும்.
கூட்டுக்கட்சியான எஸ்.எப் பொறுப்பெடுக்க தலைமை இல்லாத நிலையில் இருக்க, ஆதரவு கட்சியான என்கில்ஸ்லிஸ்ற் பொறுப்பின்றி விமர்சிக்க, றடிகல வென்ஸ்ர கடுகளவும் இறங்க மறுக்க, எதிரணி அரசு கவிழும் என்று பதவிக்கு துடிதுடிக்க பிரதமர் தனியாக தடுமாறுகிறார்.
பழைய தமிழ்ப் பாடல் ஒன்றில் வருவதுபோல.

மாடு கன்று போடுதென்று ஓட.. அந்த நேரம் பார்த்து
மனைவியின் மேல் பூதம் பிடித்து அவள் தலைவிரிகோலமாக ஆட..
வயலில் ஈரம் காய்கிறதென்று விதை கொண்டு தூவ ஓட
வீடு தீப்பற்றி எரிய… அதை அணைக்க ஓட
வரி கேட்கும் அரச படைகள் வரிகேட்டு விரட்ட..
ஒரு குடியானவன் எங்கு போவான்… எதற்கென்று போவான்…?

என்ற நிலையில் இருக்கிறார் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்..

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...