Sep 9, 2012

புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: இங்கிலாந்து அரசு பிரச்சாரம்



புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரப் படம் ஒன்றுஇங்கிலாந்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை இலக்குவைத்து ஒரு புதிய பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'ஸ்டாப்டோபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 28 நாட்களுக்கு நடக்கிறது.

புதுமையான பிரச்சாரம்

புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதத்துக்காவது புகைப் பழக்கத்தை
நிறுத்திவைக்க வேண்டும் என்பது இந்த பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் வேண்டுகோள்.
புகைப்பழக்கம் உள்ளவர் சிரமப்பட்டு ஒரு மாத கட்டத்துக்கு அந்த மோசமான பழக்கத்தை கைவிடுகிறார் என்றால், அவர் அப்பழக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அனைவரையும் இலக்கு வைத்து இப்படி பொதுவான பிரச்சார நடவடிக்கை ஒன்றை பிரிட்டிஷ் அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியை டேம் சல்லி டேவிஸ் கூறுகிறார்.
ஒக்டோபரில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் மூலமாகவும் , தினசரி செய்தியஞ்சல் சேவை மூலமாககவும், நாடு முழுக்க நடத்தப்படும் வீதி நிகழ்ச்சிகள் மூலமாகவும் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்டொப்டோபர் என்ற பெயரில் கைத்தொலைபேசி அப்ளிகேஷனும் ஃபேஸ்புக் பக்கமும் கூட உருவாக்கபடவுள்ளது.
மக்களின் உடல்நலத்தை முன்னேற்றக்கூடிய பிரச்சாரங்களை அரசு மேற்கொள்வது மிகவும் சிறப்பான முதலீடு ஆகும் என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் நோர்மன் லாம்ப் கூறினார்.
"மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் ஒருவர் எடுக்கும் முடிவு மற்றவர் மீது செல்வாக்கு செலுத்தும். ஆகவே ஒருவர் தானாக புகைப்பழக்கத்தைக் கைவிடுவதை விட மற்றவரும் கைவிடுகிறார் எனவே நாமும் கைவிடுவோம் என்று நினைத்துக் கைவிடுவர்கள் நிறைய பேர்" என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் புகைப்பழக்கம் பற்றிய ஆராய்ச்சிகளின் இயக்குநராக இருக்கும் ராபர்ட் வெஸ்ட் கூறுகிறார்.

உடல் நலத்துக்கு தீங்கு

புற்றுநோய் வந்து உயிர் இழப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது.
புற்றுநோய் வருபவர்களில் ஐந்தில் ஒருவருக்கு புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது.
மக்கள் புகைக்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து வெளிவருவது சிரமம். அதற்கு உதவும் வகையில் இப்படியான பிரச்சாரங்கள் அவசியம்தான் என்று பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பில் புகைப்பழக்க ஒழிப்பு இயக்குநராக இருக்கும் ஜீன் கிங் கூறினார்.
புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான முயற்சியை புகைப்பவர்கள் கைவிடவே கூடாது என்றார் அவர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...