Nov 3, 2012

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

சாண்டி புயல் தாக்குதல்: அமெரிக்காவில் ரூ.1 லட்சம் கோடி சேதம்- சாவு 45 ஆக உயர்வு

நியூயார்க், அக். 31-
 
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. நேற்று இது நியூஜெர்சியை தாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய ராட்சத அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.
 
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் வெள்ளக் காடாகியுள்ளன.  மணிக்கு 135 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் 45 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் இடிந்து கிடக்கின்றன.
 
மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போது பலரது உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
 
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு அமெரிக்க பகுதிகளில் மின் சப்ளை இல்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அங்கு சுமார் 85 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
 
புயல் காரணமாக அமெரிக்காவில் சுமார் 200 கோடி டாலர் அதாவது ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு சார்ந்த ரூ. 27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக பங்கு சந்தை மூடப்பட்டது.
 
140 ஹெலிகாப்டர்களுடன் 6700 மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக பென்டகன் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. 50 லட்சம் லிட்டர் குடிநீர், 30 லட்சம் உணவு பொருட்கள், 9 லட்சம் போர்வைகள், 1 லட்சம் கட்டில்கள் தயாராக உள்ளன. இந்த தகவலை அவசர கால மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...