Nov 3, 2012

அமெரிக்காவில் சாண்டி புயல் கோரத்தாண்டவம்: பெட்ரோல், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் சாண்டி புயல் கோரத்தாண்டவம்: பெட்ரோல், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்புClick Here

நியூயார்க், நவ.3-

கரீபியன் கடலில் உருவான சாண்டி என்ற பயங்கர புயல் இந்த வாரம் தொடக்கத்தில் அமெரிக்கா கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கி கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் அந்த பகுதியில் அமைந்துள்ள நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிக்கட், மேரிலாந்து, வெர்ஜினியா, பென்னில்வானியா, வடக்கு கரோலினா உள்பட 15 மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக முக்கிய வர்த்தக நகரமான நியூயார்க் பேரழிவை சந்தித்தது. இங்கு பல லட்சம் கோடிக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது. விமானம், ரெயில்கள், பஸ்கள் போக்குவரத்து அடியோடு தடைப்பட்டது. இதனால் 3 தினங்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்த புயல் காரணமாக நியூயார்க் நகரின் பல பகுதிக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை.

அங்கு கிட்டத்தட்ட 6 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவிக்கிறார்கள். இதேபோல பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்களை இயக்க முடியாமலும் மக்கள் தவிக்கிறார்கள். ஓரிரு இடங்களில் திறந்துள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. கேன்களுடன் சென்று பெட்ரோல் வாங்கி செல்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள் கிடைக்க நகர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. போலீசாரும், தேசிய காவல்படை அதிகாரிகளும் உயரமான கட்டிடத்தில் தவிக்கும் முதியோருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள். நியூயார்க் நகரில் புயலுக்கு பிறகு நேற்று முன்தினம் சுரங்க ரெயில்கள் சில இயக்கப்பட்டன.

இதனால் வியாழன், வெள்ளிக்கிழமை 2 நாட்களும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறைந்த அளவே ரெயில்கள் இயங்கியதால் பஸ்களில் செல்ல நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர். மான்ஹாட்டான் பகுதியில் நேற்று தான் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பாலங்கள் உள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வாகனத்தில் குறைந்த அளவு பயணிகளே செல்லவே அனுமதித்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல நகரங்களில் மழைநீர் இன்னும் தேங்கி கிடக்கிறது. மின்சார பாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

எனவே புயல் தாக்கிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. நியூயார்க் நகரவாசிகளுக்கு மின்சாரம் கிடைக்க வரும் 11-ந் தேதி வரை ஆகலாம் என மின்சார கம்பெனி அதிகாரி கான் எடிசன் கூறினார்.

நியூஜெர்சி, வெர்ஜினியா உள்ளிட்ட 15 மாநிலங்களிலும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி கவர்னர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த புயலுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்து விட்டது. இதில் நியூயார்க் நகரில் தான் அதிகபட்சமாகும். அங்கு மட்டும் 40 பேர் உயிர் இழந்தனர்.

நியூயார்க் அருகேயுள்ள ஸ்டாடென் தீவுப்பகுதியில் ஒரு பெண்ணும், 2 குழந்தைகளும் வந்த கார் ராட்சத கடல் அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். பிறகு 2 குழந்தைகளும் பிணமாக மீட்கப்பட்டார்கள். நியூஜெர்சியில் 13 பேரும், மேரிலாந்து, பென்சில்வானியா ஆகிய மாநிலங்களில் தலா 11 பேரும், மேற்கு வெர்ஜினியாவில் 6 பேரும், கனெக்டிகட் பகுதியில் 4 பேரும் இறந்தனர்.

மேலும், தாழ்வான பகுதிகளில் தேடும்பணி நடக்கிறது. ஆகவே சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கிய போது நியூயார்க் அருகே எச்.எம்.எஸ். பவுண்டரி என்ற சரக்கு கப்பல் கடலில் தத்தளித்தது. இதில் இருந்த 14 சிப்பந்திகள் உயிருடன் மீட்கப்பட்டனர். கிறிஸ்டியன்(42) என்ற பெண் இறந்தார்.

கப்பல் கேப்டன் ராபின் வால்பிரிட்ஜ்(63), சிப்பந்தி குவுடினி கிறிஸ்டியன் ஆகியோர் கடலில் மூழ்கினர். கடந்த 4 நாட்களாக இவர்களை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தேடும் முயற்சியை கடற்படையினர் கைவிட்டனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...